

இந்தியாவின் கிழக்கு எல்லை வங்காள விரிகுடா. மேற்கு எல்லை? அரபிக் கடல். ஆனா என்னோட கேள்வி இது இல்ல. அரபிக் கடலை ஒட்டியுள்ள நமது மேற்குக் கடற்கரையின் மாநிலங்கள் என்னென்ன?
மும்பை. இது அந்த மாநிலத் தலைநகரம். மாநிலத்துடைய பெயர்? மகாராஷ்டிரம். எந்த மாநிலம் இருக்கு? நமக்கு மிக நெருங்கிய அண்டை மாநிலம் இருக்கே. ஆந்திரா?
நான் கேட்டது மேற்குக் கடற்கரை. ஆந்திரா, கிழக்குல இருக்கா? மேற்குல இருக்கா? கிழக்குல இருக்குது. நான் கேட்டது மேற்குக் கடற்கரை மாநிலம்... ஆமாம்! கேரளா.
கிளைக் கடல் தெரியுமா? - கேரளாவா? அது நமக்கு தெற்கே இல்லை இருக்குது? இந்தக் குழப்பம் பொதுவா பலருக்கும் இருக்கு. நமக்கு தென்மேற்கே இருக்குது கேரளா. அந்தமாநிலத்தோட மேற்குப் பகுதி, அரபிக் கடலை ஒட்டி இருக்கு. குஜராத், மகராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களும் மேற்குக் கடற்கரையில் உள்ளன. நம்முடைய கன்னியாகுமரி கூட அரபிக் கடலை ஒட்டி இருக்குது.
சரி… நதிகளுக்கு கிளை ஆறுகள் இருக்குது இல்லையா? அதேபோல, அரபிக் கடலுக்கு, ஒரு ‘கிளைக் கடல்’ இருக்கு.
‘கிளைக் கடல்னு படிச்சு இருக்க மாட்டோம். கிட்டத்தட்ட கிளைக் கடல் மாதிரின்னு வச்சுக்கலாமே. அப்படி ஒன்னுதான் லட்சத்தீவுக் கடல். அரபிக் கடலுடைய கிளைன்னு சொல்லலாம். இது எங்க இருக்கு? தமிழ்நாட்டுக்கு தெற்கே, கேரளாவுக்கு மேற்கே இருக்குது. இலங்கையும் மாலத்தீவுகளும் கூட இதை ஒட்டியே இருக்கு. இந்தக் ‘கிளைக் கடல்’மேலதான், கேரளாவுல ஒரு பெரிய துறைமுகம் இருக்குது. கேரளாவின் மிகப் பிரபலமான நகரம் இது. எந்த ஊரு சொல்லுங்க...
கொச்சிதான், சரியான விடை. இந்தப் பகுதியை மலபார் என்றும் சொல்கிறோம். இது குறித்து சற்றே விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.
நமக்கு வெயில் அங்க மழை: ‘மலபார்’ என்கிற சொல் ‘மாலே’ என்பதன் திரிபு என்பர். ‘மலை மொழி’ – ‘மலையாளம்’ ஆகி, அதன் பொருட்டு இப்பகுதி ‘மாலே’ என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே பொதுவாக,‘மலபார்’ என்பது கேரளக் கடற்கரையை குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஆனாலும், தெற்கே குமரி முனை தொடங்கி கேரளா, கர்நாடகா மாநிலங்களின் (மேற்கு) கடற்கரைப் பகுதி,‘மலபார்’ ஆகும். தென் மேற்குப் பருவமழை, மலபார் கடற்கரைப் பகுதியில், கேரளாவில் இருந்தே தொடங்குகிறது. இதனால்தான், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் உச்சியில் தகிக்கும்ஜூன் மாதத்தில், கேரளாவில் பருவகாலம் தொடங்கி, சில்லென்று மழை பெய்கிறது.
தென் இந்தியாவில் இங்குதான் மழைப் பொழிவு மிக அதிகம். இதன் காரணமாக இது, மிக அதிக அளவில் நெல் விளைச்சல் கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது. கடல் முகத்துவாரங்கள், ஆறு, நீர் வளம், வனங்கள் மிகுந்த , மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மலபார் பகுதியை, மிகச் சிறந்த பல்லுயிர் மண்டலமாக, உலகப் பாரம்பரியப் பகுதியாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
சரித்திரப் புகழ் பெற்ற மாலுமிகளான மார்க்கோ போலோ, வாஸ்கோட காமா உள்ளிட்டோர் மலபார் கடற்கரையை ‘கண்டுபிடித்து’ அயல் நாடுகளுடன் வர்த்தகத்துக்குப் பயன்படுத்தினர். இதன் விளைவாக, இந்தியாவின் கடல் தாண்டிய வணிகத்துக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டிய பகுதியாகவும் மலபார் கடற்கரையைச் சொல்லலாம்.
இந்த வாரக் கேள்வி: கொச்சின் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் - ஒப்பிடவும்.
(வளரும்) கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com