

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வை வெல்ல, ஆங்கிலமோ, தமிழோ, மொழி ஒரு தடை அல்ல என்கிறார் தமிழ் ஓவியா.ஐஏஎஸ். மேற்குவங்க மாநிலத்தின் 2019-ம் பேட்ச் அதிகாரியான இவர் புருலியா மாவட்ட சாராட்சியராக உள்ளார்.
இவர், பழனி தாலுகாவின் கரிக்காரன்புதூர் கிராமத்தின் சவுந்தரபாண்டியன், முருகேஷ்வரி தம்பதியின் மகள். தந்தை, பஞ்சாயத்து அலுவலகத்தின் ஓய்வுபெற்ற உதவியாளர். மூத்த சகோதரர் தமிழ் வசந்தன், இளைய சகோதரி தமிழ் இலக்கியா. பழனியின் செய்ன்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்புவரை ஆங்கிலவழியில் முடித்தார் ஓவியா. தொடர்ந்து, நெய்காரப்பட்டியின் அரசு உதவிபெறும் ஸ்ரீரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் பயோமேத்ஸ் பிரிவில் பிளஸ் 2 முடித்தார். பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் முதல் மாணவியாக இருந்த ஓவியா, 10-ம் வகுப்பில் பழனி தாலுகாவில் முதல் மதிப்பெண் பெற்றார்.
அடுத்து, பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை பிரிவில் 2014-ல் பிஎஸ்சி பட்டம் பெற்றார். இந்த காலங்களில் அரசு பணி பெற வேண்டும் என விரும்பி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடிவு செய்தார். இதற்காக கூகுளில் தேடியவருக்கு மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு மீது ஆர்வம் எழுந்துள்ளது. 2015, 2016, 2017 இல் என மூன்று முறை முயன்றவருக்கு இடையில் ஒருமுறை மட்டுமே பிரிலிம்ஸில் தேர்ச்சி கிடைத்தது. 2018-ல் நான்காம் முயற்சியில் ஓவியா ஐஏஎஸ் பெற்றார்.
சமூக ஆர்வலர் காட்டிய பாதை: இது குறித்து, அதிகாரி தமிழ் ஓவியா கூறும்போது, “திராவிடக் குடும்பம் என்பதால் தந்தைக்கு தமிழ் ஆர்வம் அதிகம். பள்ளியில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ்வழிக்கு மாறியதால் கல்லூரியில் மீண்டும் ஆங்கிலவழியில் பயில சிரமமானது. எனினும், எனது விடாமுயற்சியால் மொழி ஒரு தடை அல்ல என்பதை புரிந்து கொண்டு, குடிமைப்பணி தேர்வையும் ஆங்கிலத்திலேயே எழுதினேன். இதற்கு நான் கோயம்புத்தூரில் ஐஏஎஸ் அகாடமியில் ஒரு வருடப் பயிற்சி பெற்றபோது அதன் அமைப்பாளரான சமூக ஆர்வலர் குணசேகரன் அளித்த வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதனிடையே, பலவகை போட்டித் தேர்வுகளையும் எழுதிய ஓவியா, வங்கி தேர்வில் வெற்றி பெற்றார். கனரா வங்கியில் விவசாயக்கடன் அளிக்கும் வேளாண் அதிகாரியாகப் பணியாற்றினார். அதே வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தனது 8 மாத வங்கிப்பணியை ராஜினாமா செய்தார். வங்கியில் ரூ.45,000 ஊதியம் பெற்றாலும் அதை விடக்குறைவாக ரூ.18,000 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சியின் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளரானார். வங்கிப்பணி செய்தபோது யூபிஎஸ்சி-க்கு தயாராக நேரம் கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தார் ஓவியா. 3 ஆண்டுகள் பணி செய்தபடியே யூபிஎஸ்சி தேர்வில் தீவிரம் காட்டிய ஓவியாவிற்கு ஐஏஎஸ் கிடைத்தது.
செயல் வீராங்கனை என நிரூபித்தவர்: இது தொடர்பான நினைவுகளை ஐஏஎஸ் அதிகாரி தமிழ் ஓவியா கூறும்போது, “எனது வீட்டின் அருகிலிருந்த நூலகத்துக்கு சிறுவயது முதல் சென்று பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்த பழக்கம் எனது வெற்றிக்கு அடித்தளமானது. யூபிஎஸ்சிக்காக முழுநேரம் படிப்பவர்களுடன், வேறு பணியாற்றியபடி கிடைத்த நேரத்தில் படிப்பது எனக்கு பெரும் சவாலானது. மாலை 7 முதல் நள்ளிரவு 12, விடியலில் 5 முதல் 8 மற்றும் சனி, ஞாயிறுகளில் மட்டுமே படிக்க முடிந்தது. தாய்மொழி மீதான ஆர்வத்தினாலும், விருப்பத்தினாலும் தமிழ் இலக்கியத்தையே விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். இது ஒரு கடுமையான தேர்வு என்பதை அறிந்தும் அதை இறுதி வாய்ப்பு வரை தவறாமல் எழுத முடிவு செய்தேன்” என்றார்.
திருக்குறள், செய்யுள்கள், தமிழ் இலக்கியங்களை ஊன்றி ரசித்து படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பயன்? என்று கேட்பவர்களுக்கு ஓவியாவின் வாழ்க்கை முன்னுதாரணம். இவரிடம் ஐஏஎஸ் நேர்முகத்தேர்வில், ‘விதி, கர்மம் மற்றும் அதிர்ஷ்டம்’ ஆகிய மூன்றில் எது அவரது நம்பிக்கைக்குரியது என ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு திருக்குறளின் ‘தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்’ என்பதையும், கனியன் பூங்குன்றனாரின் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவற்றின்படி தனக்கு விதி, அதிர்ஷ்டம் ஆகியவற்றில் இல்லாத நம்பிக்கை செயல் என்ற பொருள் தரும் ‘கர்மா’வில் மட்டும் இருந்ததாகவும் ஓவியா பதிலளித்துள்ளார். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் விளக்கம் அளித்தது அவருக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தந்தது.
‘உள்ளுவது எல்லாம் உயர் வுள்ளல்’ என்பது போல், இருப்பதில் சிறந்ததான யூபிஎஸ்சியை எழுதிய ஓவியாவுடன் யூபிஎஸ்சியில் இணைந்து படித்த நட்பு வளையம் சற்று பெரியது. இவர்களில், ஹரியாணாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பிரவீனா, கேரளாவில் ஐஎப்எஸ் அதிகாரியாக சந்தோஷுடன் இதர பெரும்பாலான நண்பர்கள் அரசு மற்றும் வங்கிப் பணிகளில் உள்ளனர். தனது 2019-ல் ஐஏஎஸ் பணிக்கு பின் மேற்குவங்க மாநிலத்தின் சவுத் 24 பர்கானா மாவட்டம் உதவி ஆட்சியர் மற்றும் மேற்குவங்க தொழில்துறையில் இணைச்செயலாளர் என பயிற்சி பெற்ற ஓவியா, தற்போது புருலியா மாவட்டத்தின் ரகுநாத்பூர் பகுதியில் சாராட்சியராக உள்ளார்.
தன் பணியில் புதிதாக நுழைந்த தமிழரான தமிழ் ஓவியா ஐஏஎஸ் அம்மாநில வாசிகளுக்குப் பல நன்மைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நம்பிக்கை நிறைவேற வாழ்த்துவோம். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in