

"மழை சீசன் ஆரம்பிச்சாலே போதும்... வின்சென்ட் இரும ஆரம்பிச்சுடுவான். அதுவும் ராத்திரி பூரா விடாம இருமுவான். சின்ன வயசுல ஆரம்பிச்ச இந்த இருமல் பிரச்சினை, பெரியவனானதும் சரியாயிடும்ன்னு சொன்னாங்க. பிளஸ் 1 வந்துட்டான். ஆனா இப்பவும் இருமல் இருக்கே டாக்டர்?” என்று தனது ஆதங்கத்தை எழுப்பியுள்ளார் வின்சென்ட்டின் தாயார்.
வெப்ப மண்டல நாடுகளுள் ஒன்றான நமது நாட்டில், மழைக்காலத்தை எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால், அந்த மழைக்காலம் தொடங்கியவுடனே அதனால் சளியும் இருமலும் தங்களது குழந்தைகளைப் பாதிக்குமே என்று கவலைப்படவும் செய்வார்கள். வெயில் காலம் முழுவதும் வராதஇருமல், மழைக்காலம் வந்தால் மட்டும் ஏன் வருகிறது என்பது தெரிந்தால், அதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
நமது உடலின் சுவாச மரம் (respiratory tree) என்று அழைக்கப்படுவது நுரையீரல்.இதுவே நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து வைத்துக் கொண்டு,கார்பன் டை ஆக்சைடு எனும் கரியமிலவாயுவை கழிவாக வெளியேற்றுகிறது. அப்படி அது பிரித்து வைத்துக் கொள்ளும் ஆக்சிஜனை ரத்த நாளங்கள் வழியாக உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், அதன் ஒவ்வொரு செல்லுக்கும் வழங்கி நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
உண்மையில் சுவாச மரம் என்பது இத்துடன் முடிந்துவிடுவதில்லை. மூக்கில் ஆரம்பித்து மூச்சுக்குழாய் (trachea), மூச்சுக்குழல்கள் (bronchi), மூச்சுக் குறுங்குழல்கள் (bronchioles) என ஒரு மரம் தனது கிளைகளைப் பிரிப்பது போலப் பிரிகிறது. இறுதியாக alveoli எனும் இலைகளாகப் பரவி நிற்கும் நுரையீரலின் நுண்ணறைகள் வரை எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சுவாச மரம் என்கிறோம்.
கிட்டத்தட்ட ஒருஎஸ்கலேட்டர் பயணம் போல மூக்கில்ஆரம்பித்து நுரையீரலைச் சென்றடையும் இந்த வெளிக்காற்றை நாம் சுவாசிக்கும்போது, வெளிக்காற்றில் இருக்கும் தூசு-தும்பு எனும் நுண்ணிய துகள்களுடன் புகைமாசு, நுண்கிருமிகள் என, காற்றுடன் முற்றிலும் கலந்திருக்கும் பிற அசுத்தங்களையும் சேர்த்தேதான் சுவாசிக்கிறோம்.
இதனிடையே நமது சுவாசப்பாதை முழுவதும் சீலியா (cilia) எனும் மெல்லிய மயிர்க்கால்களை நிரவிப் பரவி வைத்திருக்கும் நம் உடல், அவற்றின் மூலம் நாம்சுவாசிக்கும் காற்றை வடிகட்டுகிறது. மாசுகள் எதுவும் நுரையீரலுக்குள் சென்றடையாமல் பாதுகாக்கிறது.
அதுமட்டுமின்றி சுவாசப்பாதையில் உள்ள காப்லெட் செல்களில் (goblet cells) சுரக்கும் mucus எனும் நீர்மத்துடன் இணைந்து ஒரு ஃபில்டர்போல காற்றை வடிகட்டுகிறது. அப்படி வடிகட்டியக் கழிவுகளை, நமது தொண்டை மற்றும் மூக்கின் நரம்புகள் மூலம் மூளைக்குத் தெரிவிக்கிறது. அப்போதுதான் இருமல், தும்மல் ஏற்படுகிறது. 'cough reflex' எனும் முறையில் வெளியேற்றுவதையே நாம் இருமல், தும்மல் என்கிறோம்.
ஆக, என்னதான் நமக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தாலும், இருமல் மற்றும் தும்மல் என்பது எந்த ஒரு ஒவ்வாத பொருளையும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்ளும் நம் உடலின் தூய்மைப் பணிதான் என்பது புரிகிறதல்லவா! (இருமல், தும்மல் பற்றிய ஆலோசனைகள் தொடரும்) கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com