

பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை சரியான முறையில் முதலீடு செய்வதும் முக்கியம். கடந்த அத்தியாயங்களில் உண்டியல், அஞ்சலகம், வங்கி ஆகியவற்றில் எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து பார்த்தோம். நாம் சேமிக்கும் பணத்தின் பாதுகாப்பு மற்றும் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆகியவற்றை பொறுத்து அது சிறந்த முதலீடா? தவறான முதலீடா? என்பதை கண்டறியலாம்.
இந்தியாவில் வங்கி முதலீடுகளுக்கு அடுத்த நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். அதிலும் தங்கத்தின் மீதான மதிப்பும், ஆசையும் குறைவதே இல்லை. உலகிலே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவிலே மக்கள் அதிகமாக தங்கம் வாங்குகின்றனர். கடந்த 2021-ல் மட்டும் 1067 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதாவது 10 லட்சத்து 67 ஆயிரம் கிலோ கிராம்.
பாதுகாப்பான முதலீடு: இந்தியர்களுக்கும் தங்க நகைகளுக்கும் இடையே மிக நீண்ட வரலாறு இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள் துளி தங்கமேனும் இன்றி நடப்பதில்லை. அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு தங்க நகைகளுடன் உணர்வுப்பூர்வமான நெருக்கம் இருக்கிறது. வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், பிறந்தநாளில் இருந்தே தங்கத்தை சேர்த்து வைக்க தொடங்கிவிடுகின்றனர். வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் தவறு என சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், தங்கத்தை வைத்திருப்பது பெண்களுக்கு பெரும் பாதுகாப்பு என்பதையும் மறுத்துவிட முடியாது.
இந்தியர்கள் தங்கத்தை அழகு ஆபரண தேவைக்காக மட்டும் வாங்கவில்லை. முதலீட்டு நோக்கத்திலும் வாங்குகிறார்கள். அவசர தேவைக்கு எளிதாக பணத்தை புரட்ட தங்கமே உதவுகிறது. தங்கத்தில் முதலீடு செய்தால் ஒருபோதும் அதன் மதிப்புகுறையாது என்பது மக்களின் ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்கிறது. பங்கு சந்தை, உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு ஆகியவை சரிவை சந்தித்தாலும் தங்கத்தின் மதிப்பு மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. பணவீக்கத்தால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து லாபம் தரக்கூடியதாக தங்கம் இருக்கிறது.
எளியோரின் பாதுகாவலன்: பொருளாதார நெருக்கடியில் அவசர தேவைக்கு உடனே பணமாக மாற்ற சிறந்த பொருளாக தங்கம் இருக்கிறது. நிலத்தையோ, இதர பொருட்களையோ நினைத்த நேரத்தில் பணமாக மாற்ற முடியாது. அதற்கு குறைந்தப்பட்சம் நியாயமான கடனும் கிடைக்காது. அவசரத் தேவைக்கான கடன் கேட்டால், அதன் மதிப்பை விட பலமடங்கு குறைந்த விலைக்கே கேட்பார்கள்.
இணையான மதிப்பு: ஆனால், தங்கத்துக்கு அதன் மதிப்புக்கு இணையான கடன் கிடைக்கும். இதனை ரிசர்வ் வங்கியும் ஏற்றுக் கொண்டுள்ளதால், முன்பு தங்கத்துக்கு அதன் மதிப்பில் 75% அளவுக்கு கடன் கொடுக்க அனுமதித்தது. தற்போது 90% அளவுக்கு கடன் வழங்கஅனுமதிக்கிறது. எனவேதான், அனைத்துஅரசு மற்றும் தனியார் வங்கிகளும் தங்கத் துக்கு கடன் என்றால் அலைக்கழிக்காமல் உடனே வழங்குகின்றன.
இதுதவிர அடகு கடை, தனியார் அடகு நிறுவனங்களும் பெருகிவிட்டன. அவை அதிக பணம் தருவதுடன் கூடுதலாக வட்டியும் வசூலிக்கின்றன. எனவே நகை கடனைப் பொறுத்தவரை கூட்டுறவு வங்கிகள், அரசு வங்கிகளே சிறந்த தேர்வாக இருக்கின்றன. தங்க நகைகளை விற்க விரும்பினால் அன்றைய தேதியில் தங்கத்தின் விலைக்கேற்ப உடனே பணத்தை வழங்கும் தனியார் நிறுவனங்களும் ஏராளமாக இருக்கின்றன.
சிறுவர்களும் தங்கம் வாங்கலாம்: தங்கத்தை பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் எளிதாக வாங்கலாம். தற்போது தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 5000 ஆக இருக்கிறது. எனவே மாணவர்கள் ஆண்டுக்கு ரூ. 5000 சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் இறுதி தேர்வு எழுதி முடித்தவுடன் ஒரு கிராம் தங்கத்தை அதன் நினைவாக வாங்கலாம். இவ்வாறு சேமிக்கும் தங்கம் 12 ஆண்டுகளின் முடிவில் பெரும் முதலீடாக மாறி இருக்கும். அதன் மதிப்பு குறைந்தபட்சம் பல மடங்கு அதிகரித்திருக்கும்.
உதாரணமாக, 1942ம் ஆண்டு 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.4. அதே 1 கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.5035 ஆக அதிகரித்திருக்கிறது. கிட்டத்தட்ட 1250 மடங்கு தங்கத்தின் மதிப்பு உயர்ந் திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 16 மடங்கு அதிகரித்திருக்கிறது. சிறு தொகைக்கு இத்தகைய முதலீட்டு லாபம் வேறு முதலீட்டுத் திட்டங்களில் கிடைப்பதில்லை.
தங்கத்தை எவ்வாறு எளிதாக வாங்குவது, எவ்வாறு குறுகிய காலத்தில் அதிகளவில் சேமிப்பது, தங்கப் பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கம் ஆகியவற்றை எவ்வாறு வாங்குவது குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்! (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in