

இன்று இணையம் வழியாக அனைத்து விதமான படிப்புகளையும் அனைவரும் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ‘ஸ்வயம்’ என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணைய வழிக் கல்வித் திட்டமாகும். தரமான படிப்பினை, இந்தியா முழுவதும் உள்ள மாணவ சமுதாயத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை டிஜிட்டல் புரட்சி சென்று சேராத மாணவர்களும், இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த இணைய வழிக் கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்வயம்’ என்றதும், ஏதோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமேயான படிப்புகள் இதில் இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். 9-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை இந்த இணையதளத்தில் படிப்புகள் உள்ளன.
1000 அதிசிறந்த ஆசிரியர்களின் தயாரிப்பு: வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் அனைத்து பாடத்திட்டங்களையும் ‘ஸ்வயம்’கொண்டுள்ளது. வகுப்பினில் புரியாத பாடத்தினை, வீட்டில் வந்து இந்த தளத்திற்குச் சென்று, இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள முடியும். அனைத்துப் படிப்புகளுக்கும் இங்கு தனித்தனி வீடியோ பாடங்கள் உண்டு. நாடு முழுவதிலும் இருந்து சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்தப் படிப்புகளைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.
ஸ்வயத்தில் நான்கு பிரிவுகளாகப் படிப்புகள் உள்ளன - (1) வீடியோ விரிவுரை, (2) பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி /அச்சிடக்கூடிய பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வாசிப்புப் கையேடுகள் (3) விநாடி வினாக்கள் மூலம் சுய மதிப்பீட்டுச் சோதனைகள் மற்றும் (4) சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள இணையம் ஊடாக ஆசிரியருடன் கலந்துரையாடும் வசதி
ஆடியோ-வீடியோ மற்றும் மல்டி மீடியாமற்றும் அதிநவீன கற்பித்தல் தொழில்நுட்பத்தை இதில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கற்றல் அனுபவம் சிறப்பானதாக இருக்கிறது.
முற்றிலும் இலவசம்: சிறந்த தரமான உள்ளடக்கம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒன்பது தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவை: சர்வதேச படிப்புகளுக்கு AICTE (அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம்), பொறியியல் படிப்புகளுக்கு NPTEL (தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கற்றல் தேசிய திட்டம்), தொழில்நுட்பம் அல்லாத முதுகலை படிப்புகளுக்காக யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு), இளங்கலை கல்விக்காக CEC (கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பு), பள்ளிக் கல்விக்காக NCERT (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திணைக்களம்), மற்றும் NIOS (தேசிய திறந்தநிலை கல்விக் கழகம்), பள்ளி செல்லாத மாணவர்களுக்காக இக்னோ (இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்), மேலாண்மை படிப்புகளுக்கு ஐஐஎம்பி (இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூர்) மற்றும் ஆசிரியர் பயிற்சிக்காக NITTTR (தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவை ஆகும்.
‘ஸ்வயம்’ மூலம் வழங்கப்படும் அனைத்துப் பாடப்பிரிவுகளும் கற்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ‘ஸ்வயம்’ சான்றிதழைப் பெற விரும்பும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி இறுதித் தேர்வுகளுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட தேதிகளில் நியமிக்கப் பட்ட மையங்களில் நேரில் கலந்துகொண்டு தேர்வுகளை எழுத வேண்டும். சான்றிதழுக்கான தகுதி, பாடப் பக்கத்தில் அறிவிக்கப்படும் அளவுகோல் பொருந்தினால் மட்டுமே கற்பவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும். இந்தப் படிப்புகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் ஏற்றுக்கொள்கின்றன. (உலா வருவோம்) - கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: bbcsakthi@gmail.com