கையருகே கிரீடம் - 22: மத்திய காவல் படைகளில் அதிகாரியாவது எப்படி?

கையருகே கிரீடம் - 22: மத்திய காவல் படைகளில் அதிகாரியாவது எப்படி?
Updated on
2 min read

தமிழ்நாடு காவல்துறை பற்றியும் அதில் பணியாற்றும் சில அதிகாரிகளைப் பற்றியும் செய்திகளின் மூலம் அறிந்திருப்பீர்கள். இப்படி மாநிலக் காவல்துறையைப் போல மத்திய அரசிலும் காவல்துறைகள் உண்டு.

மத்திய போலீஸ் படைகள், ஆயுதம் ஏந்தி காவல் செய்வதால், துணை ராணுவப்படை என்றழைக்கப்படுகின்றன, எல்லை பாதுகாப்புப்படை (Border Security Force -BSF), மத்திய பின்னிருப்புக் காவல் படை (Central Reserve Police Force - CRPF), மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை (Central Industrial Security Force -CISF), இந்திய திபெத் எல்லை காவல்துறை (Indo-Tibetan Border Police - ITBP) மற்றும் ஆயுதக் காவல் படை (Sashastra Seema Bal - SSB) ஆகியவை மத்திய அரசின் முக்கிய காவல் படைகள் ஆகும்.

மத்திய காவல் படைகளின் பணிகள்: மத்திய காவல்படைகளுக்கென்று தனித்த பொறுப்புகள் உண்டு. பாகிஸ்தான், வங்கதேச எல்லைப் பாதுகாப்பை, எல்லை பாதுகாப்புப்படை மேற்கொள்கிறது. நேபாள எல்லைப் பாதுகாப்புப் பணியை செய்வது ஆயுதக் காவல் படை. சீனாவுடனான எல்லையை பாதுகாக்கிறது இந்திய திபெத் எல்லை காவல்துறை. உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வது மத்தியபின்னிருப்புக் காவல் படை. விமான நிலையங்கள், விண்வெளி ஆய்வகங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பது, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை.

அதிகாரியாவது எப்படி? - மத்திய காவல் படைகளில் அதிகாரியாக குறைந்தபட்சக் கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். எந்த பாடத்திலும் பட்டம்பெற்றிருக்கலாம். அதிகாரி பணிக்கான நுழைவுத்தேர்வை, ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்துகிறது. உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) என்ற பதவி தான் நுழைவுநிலை அதிகாரி பதவியாகும். எல்லா மத்திய காவல் படைகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும். எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என பல நிலைகளைத் வெற்றிகரமாகக் கடந்தவர்களே அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

உதவி ஆய்வாளராகவும் மத்திய காவல்படைகளில் சேரலாம். பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSB) இதற்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறது. இளநிலை பட்டதாரிகள் இந்த தேர்வில் பங்கேற்கலாம். எல்லா மத்திய காவல் படைகளுக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத்தேர்வே நடத்தப்படுகிறது. எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் அதிகாரிகள் தேர்வு நடைபெறும். ssc.nic.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களைப் பெறலாம்.

ஆண்களும் பெண்களும் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம். மத்திய காவல் படைகளில் பணியாற்ற விரும்பமும் உறுதியும் உள்ள மாணவ, மாணவிகள் கல்வியிலும் விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவது முக்கியம். தினந்தோறும் படிப்போடு உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது தேர்வுகளில் வெற்றி பெற உதவும்.

கம்பீரமாய் சீருடை தரித்து கைகளில் ஆயுதம் ஏந்தி தேசம் காத்து, குடிமக்களின் அன்றாட வாழ்வுக்கு அரண் செய்ய வாழ்த்துகள்! (கனவுகள் தொடரும்) - கட்டுரையாளர், ‘எந்திரத்தும்பிகள்: ஹெலிகாப்டர் ஒர் அறிமுகம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in