டிஜிட்டல் உலகிலும் விடாது துரத்தும் ‘விக்டிம் ஷேமிங்’

டிஜிட்டல் உலகிலும் விடாது துரத்தும் ‘விக்டிம் ஷேமிங்’
Updated on
1 min read

ஒருவர் சைபர் குற்றவாளிகளால் அவமானப்படுத்தப்படுகிறார், ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சமூகம் எப்படி இதைக் கையாளும்?

பாதிக்கப்பட்ட நபரைத் தான் முதலில் குற்றம் சொல்லும். மாணவிகள் என்றால் அவர்களுக்குத்தான் அறிவுரை, நீ ஏன் எச்சரிக்கையாக இல்லை என்ற கேள்வி எல்லாம் போக அவர்கள் இணையம் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். சில பெற்றோர் அப்படி பாதிக்கப்பட்ட மாணவியின் பள்ளி/கல்லூரி படிப்பைக் கூட நிறுத்திவிடுவார்கள்.

சமூகம் சும்மா விடுமா? அந்த பெண்ணை குற்றவாளியாக்கித் துன்புறுத்திவிடும். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் (நபர்) என்ன தவறு செய்தார். ஒன்றுமே இல்லை.

ஒருவரின் அந்தரங்கத்தை வெளியே சொல்லும் குற்றவாளியைக் காப்பாற்றும் சமூகம் அந்த பாதிக்கப்பட்ட நபரை குற்றவாளியாக்குவது விந்தை. என்னைக் கேட்டால் அதுதான் மிகப்பெரிய குற்றம்.

அந்தரங்கத்தைத் திருடுவது குற்றம்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கர்ஸியா மார்கோஸ் சொல்லுவார் “அனைவரின் வாழ்க்கையில் பொதுவெளிக்குத் தெரிந்த வாழ்க்கை ஒன்று இருக்கும், நான்கு சுவற்றுருக்குள் ஒரு மறைவான வாழ்க்கை இருக்கும், யாருக்குமே தெரியாத ரகசிய வாழ்க்கை ஒன்று வாழ்வார்கள்.”

இது மிக இயல்பு. அதுதான் நம் அந்தரங்கம். அதை ஒருவன் திருடி வெளியில் சொல்லுவான் என்றால் அவன்தான் குற்றவாளி. ஒருவரின் அந்தரங்கத்தைப் பாதுகாக்க பல நாடுகளில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும். ஆனால், சமூகம் கூச்சநாச்சமின்றி அடுத்தவர் வாழ்க்கைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட பெண்ணை/ நபரை குற்றவாளியாக்குவதை நாம் இனியும் பொறுத்துக் கொள்ளக் கூடாது.

தன்னை எங்கு குற்றவாளி ஆக்கிவிடுமோ அதனால் தன் படிப்பும், எதிர்காலமும் கெட்டுவிடுமோ, தன் பெற்றோர்களை சமூகம் அவமானப்படுத்துமோ என பயந்துதான் பல மாணவிகள் இன்னும் சொல்லப் போனால் பல பெண்களும் பள்ளி, கல்லூரி, வேலை இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள். இதுவே குற்றவாளிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடுகிறது. சைபர் வெளியிலும் இதேதான் நடக்கிறது.

இனிமேல் நாம் இதை சும்மா விட முடியாது, பாதிக்கப்படும் நபரை ‘விக்டிம் ஷேமிங்’ செய்யும் வழக்கத்தை தகர்த்தெறிந்து நம் குழந்தைகளை நாம் காப்பாற்ற வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள்தான் இதற்கான முதல் படியில் காலெடுத்து வைக்க வேண்டும். பிள்ளைகள் இதை வலியுறுத்த வேண்டும்.

“யாருக்கும் தீங்கு விளைவிக்காத அந்தரங்க வாழ்க்கை வாழ எனக்கு உரிமை உண்டு. என் அந்தரங்க வாழ்க்கையை பொதுவெளியில் வெளியிடும் அந்த குற்றவாளிதான் தண்டிக்கப்பட வேண்டியவன். இதில் பாதிக்கப்பட்ட என்னை பாதுகாக்கவும், அதற்கான சட்ட/ சமூக போராட்டம் நடத்தவும் எனக்கு உரிமை உள்ளது” என்று ஒவ்வொரு நபரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை உலகிற்கு அறிவிக்க வேண்டும். (தொடர்ந்து பேசுவோம்) - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர் தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in