

ஒரு புதிய கோட்பாட்டை நிறுவி ஐரோப்பா முழுவதும் பிரபலமாக்குகிறார் ஒருவர். இவரைக் காண பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஒருவர் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு மான்செஸ்டருக்கு விரைகிறார். தமது பல்கலைக்கழகம் போன்றே ஒரு பல்கலையில் அவரைச் சந்திக்கப் போகிறோம்.
அவரும் தம்மைப் போலவே அழகான நேர்த்தியான உடையில் ஒரு பல்கலைக்கழகத்தில் இருப்பார். அவரைக் கண்டு அளவளாவ வேண்டும் என்று ஆசை அவருக்கு மிகுகிறது. மான்செஸ்டருக்கு வந்து எங்கெங்கோ அவரைத் தேடுகிறார். பின்னர் கடுமையான அலைச்சலுக்குப் பிறகு ஒரு பழைய களையிழந்த வீட்டினைக் காட்டுகிறார்கள்.
மாணவனுக்கே முன்னுரிமை: அந்த வீட்டின் பின்புறத்தில் அவர் ஒரு மாணவனுக்குக் கணக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். இவரோ அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முயல்கிறார். அவரோ வணக்கம் சொல்லிவிட்டு ஒரு நிமிடம் பொறுங்கள் இந்த மாணவருக்கு இந்த சின்ன விஷயத்தை விளக்கிவிட்டு வருகிறேன் என்கிறார். பின்னர் சந்திக்கிறார். உரையாடுகிறார். பார்க்க வந்தவர் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி பெலிட்டியர் (Pelletier) வரவேற்றவரோ ஜான் டால்டன். அணுக்கொள்கை தொடர்பான கோட்பாடு பிரபலமடைந்திருந்த நேரமது.
ஆரம்பத்தில் காலநிலை தொடர்பான கோட்பாடுகள், கண்கள் நிறம் பிரித்தறிதலில் ஏற்படும் குறைபாடு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டாலும் பின்னர் டால்டன் இயற்பியலிலும் வேதியியலிலும் எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டார். 1800 களில் மான்செஸ்டர் இலக்கிய மற்றும் தத்துவ அமைப்பின் செயலாளராக டால்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் வாயுக்களின் கலப்பு மற்றும் அதன் சேர்மானங்கள் தொடர்பான தொடர் சொற்பொழிவை ஆற்றினார்.
ஏற்கெனவே காலநிலை மாற்றம் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆய்வு இவருக்கு வாயுக்கள் தொடர்பான பல்வேறு புதுமையான கருத்துக்களை அறிமுகம் செய்து வைத்தது. இதன் மூலம் திடப்பொருட்களில் அழுத்தம் இருப்பதைப் போலவே வாயுக்களின் அழுத்தம் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதன் மூலம் எண்ணற்ற புதுப்புது கருத்துக்களை கண்டறிந்தார். பொருட்கள் பகுக்கலாம். மேலும் பகுக்க இயலும். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் பகுக்க இயலாது என்ற இடத்திற்கு வந்து அதற்கு அணு என்று பெயரிட்டார். இதன் பின்னர் அவர் பல்வேறு தனிமங்களை ஒப்பிட்டு அவற்றின் அணு எடை தொடர்பான அட்டவணை வெளியிட்டார். இவரது கருத்துக்கள் பலவும் அவர் காலத்திலும் சில பிற்காலத்திலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. பதவியும் வசதியும் இல்லாவிடினும் தொடர்ந்து ஆய்வுசெய்து அறிவுலகத்திற்குப் பங்களிப்பு செய்ய இயலும் என்பதற்கு இவரது வாழ்க்கையே சாட்சி.
அறிந்திடாத இருவரின் ஒரே கண்டுபிடிப்பு: காலநிலை தொடர்பான டால்டன் எழுதிய ஒரு நூலின் முன்னுரையில் தாம் எந்த நூலையும் நம்புவதில்லை, மாறாக தாம் ஆய்வு செய்து கண்டறிந்தவற்றை மட்டுமே நம்புவதாக எழுதினார். இவர் கண்டறிந்த அதே கண்டுபிடிப்புகளைப் பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவரும் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டபோது, “நான் மகிழ்கிறேன், உலகில் ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் தனித்தனியாக ஒரே வகையான கண்டுபிடிப்பை அடைந்துள்ளனர்” என்றார். ஆம் மேன்மையான மனிதர்களின் சிந்தனை ஒன்று போலவே இருக்கும் என்று ஒரு பழமொழியும் உள்ளதல்லவா!
காலம் முழுவதும் திருமணமே செய்துகொள்ளாத டால்டனிடம் ”திருமணம், மனைவி பற்றி சிந்தித்ததுண்டா?” என்று அவரது நண்பர்கள் கேட்டார்களாம். அதற்கு டால்டன் தனது மூளை முழுவதும் முக்கோணங்களாலும், வேதியியல் செயல்பாடுகளாலும், மின்சாரம் தொடர்பான சோதனைகளாலுமே நிறைந்துள்ளது, வேறு எதற்கும் இடமில்லை என்றாராம். கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com