

யாரெல்லாம் குழந்தைகள்? குழந்தையின் மனத்தில் என்ன ஏக்கங்கள் இருக்கலாம்? ஒவ்வொரு சூழ்நிலையிலும் குழந்தைகளின் தேவை என்னவாக இருக்கும்? பெரியவர்கள் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிச்சென்று யோசிக்க வேண்டிய தருணங்கள் என்ன? குழந்தைகளிடம் நடத்த வேண்டிய உரையாடல்கள் என்ன? மனதில் உள்ளதை குழந்தைகள் வெளிப்படுத்த வழிகள் என்ன? எது குழந்தைகளுக்கான சுதந்திரம்? குழந்தைகள் மீது பழி சுமத்தாதீர். அவர்கள் வாசிக்கத் தயார்தான்.
குழந்தைகளுக்கான விளையாட்டுகளைச் சொல்லித்தரும் பல்லாங்குழி அமைப்பின் நிறுவனர் இனியனின் ‘விடுபட்டவர்கள் இவர்களும் குழந்தைகள் தான்’ என்ற புத்தகம் குழந்தைகள் பற்றிய மேற்கண்ட கேள்விகளுக்கான புரிதலை நமக்குத் தரும். இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான கல்வி அளிக்கவேண்டுமென பேசுகிறார்கள்.
குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள்: ஆனால் மாநிலத்தின் எல்லைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு இரு மாநில மொழிகளில் பேச்சு மொழி ஒன்றாகவும், பள்ளிப் பாடமொழி ஒன்றாகவும் கிடைக்கும்போது, பள்ளியிலிருந்து சீக்கிரமாக விலகிவிடுகின்றனர். இரு மாநில எல்லைகளில் வசிக்கும்போது, மதஅமைப்புகளின் பின்னணி வாழ்க்கைச் சூழலில் அதிகமாக காணப்படுகிறது.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக, நாடு தாண்டி வந்தவர்கள், மூன்றாம் தலைமுறையினராக இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தக் குழந்தைகள், பிழைக்க வந்த நாட்டில், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்தவொன்றையும் செய்துவிட முடியாது. உணவு, வருமானம், உயிர், வாழ்வாதாரம் எனப் பல காரணங்களுக்காக மனித இனம் புலம்பெயர்கிறது. அதனால் குழந்தைகள் இழப்பவைதான் ஏராளம்.
வருமானத்திற்காக பயணம் செய்வதே இன்றும் பழங்குடி இனத்தவரின் வாழ்வாக இருக்கிறது. நிரந்தரக் குடியிருப்பு, வருமானம், சாதி சான்றிதழ்களும் இல்லை. குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். கல்வி என்பதைச் சிந்திக்கவே முடியாத நிலை. அதையும் மீறி பள்ளிக்கு வரும் பழங்குடியின குழந்தைகளுக்கு, அவர்களுக்கான கல்வியாக இந்த அமைப்பு இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
ஆரோக்கியமான வகுப்பறைகள்: அதேபோல உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத ஆண்களின் குடிப்பழக்கத்தால் தனிப்பெற்றோர் ஆகின்றனர் பெண்கள். மனவேறுபாட்டில் பிரிந்துவாழும் பெண்களும் இக்காலத்தில் அதிகம். சக குழந்தைகள் தனிப்பெற்றோரின் குழந்தைகளிடம் எழுப்பும் கேள்விகள் பதில் சொல்ல இயலாதவை. தனிப்பெற்றோரிடம் வளரும் குழந்தைகளில் பெரும்பான்மை யானவருக்கு மனநலம் சார்ந்த உளவியல் பிரச்சினைகள் இருப்பதாக மனநல ஆய்வுகள் கூறுகின்றன. இனிவரும் காலத்தில், தனிப்பெற்றோர் என்னும் வகைமை யில் பெருங்கூட்டம் ஒன்று வாழ்க்கைப் போராட்டங்கள் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. அவர்களையும் உள்ளடக்கிய வகுப்பறைகள் தேவை என்கிறார்.
அனைத்து குழந்தைகளும் கூட, பழகும் நபர்களுடன் ஒரு உறவுமுறையுடன் பழகவே விரும்புகின்றனர். குழந்தைகள் பெரியவர்களை எந்த உறவுப்பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்களோ, அதை அனுமதிப்போமே என்கிறார் புத்தக ஆசிரியர். இந்தச் சமூகம் எப்போதும் ஏதோ ஒரு உறவுகளின் உரையாடல் மற்றும் உணர்வுகள், செய்கைகள் என பின்னிப்பிணைந்துதானே இருக்கிறது.
அரசியல் அறிவு: குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் உணவு பற்றிய கட்டுரை கவனிக்க வேண்டியது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் நிலையே கிராமத்துக் குழந்தைகளுக்கு இன்னும் கூட உள்ளது. பதின்பருவத்துக் குழந்தைகள் மீது புகார் கூறும் பெற்றோரும், பெரியவர்களும், தம் வாழ்க்கையில் எந்த வயதில் காதல்பூ பூத்தது என எண்ணிப் பார்த்துவிட்டு பிறகு குழந்தைகள் மீது அதிகாரத்தை செலுத்தலாமே? அவர்கள் உணர்வை மதித்து, அதைக் கையாளச் சொல்லித்தராமல் குற்றம் மட்டும் சுமத்துவது நியாயமா?
குழந்தைகளுக்கு அரசியல் சொல்லித்தாருங்கள். அரசியல் பேச அனுமதி தாருங்கள். மதம் சார்ந்த அடையாளங்களை எளிதில் தரும் நாம்,குழந்தைகள் எது சரி? எது தவறு? என ஆராயச் சொல்லித்தரும் அரசியல் அறிவை தர ஏன் மறுக்கிறோம்? என்கிறார் இனியன்.
பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதுதான் தெரிகிறது. பெரியவர்கள் அவர்களாகவே ஒரு குற்றத்தை குழந்தைகள் மீது கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. "இனியன் மாமா எங்களுக்கு படிக்க புத்தகம் அனுப்புங்க என்று கேட்பதுடன், படித்து முடித்துவிட்டோம் வேறு புத்தகம் அனுப்புங்கள் என்று கடிதமும் எழுதுகிறார்கள்" என்கிறார்.
குழந்தைகள் சிலர் இயல்பாக பேசமாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதில் உள்ளதை பகிர கடிதம் சிறந்த வழியாக அமையும். குழந்தைகளுக்கு கடிதம் எழுத சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைகள் கேட்காதவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர்களே, அது மட்டுமே அன்பு இல்லை. முதலில் தினமும் இரண்டு மணிநேரமாவது குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகள் விரும்புவது விளையாட்டைத்தான். மறந்துபோன விளையாட்டுகளை நினைவுப்படுத்தி குழந்தைகளோடு விளையாடிப் பழகுங்கள்.
ஆரோக்கியமான குடும்பம், சமூகம் அமைய குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே எப்போதும் விளையாட்டைக் கையிலெடுங்கள் என்கிறார் இனியன். விளையாடுவோமா இனியாவது? - கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்புட்குழி, காஞ்சிபுரம், தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com