

தமிழகம் முழுவதும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. எல்லா கண்காட்சியிலும் கணிதம் இல்லாமல் இல்லை. ஆரம்பம் முதல் கடைசி நாள் அரங்கத்தை அகற்றும் வரையில் கணிதம் உண்டு.
புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்டு எல்லா அரங்கங்களையும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவீர்கள் அல்லவா? அந்த ஒட்டுமொத்த அரங்கம் எந்த வடிவில் இருக்கிறது என்பதை கவனித்தது உண்டா? பெரும்பாலும் அது செவ்வக வடிவிலேயே இருக்கும்.
உள்ளே இருக்கும் அரங்கங்கள் எல்லாமே செவ்வக வடிவத்திலேயே இருக்கும்.(சதுர வடிவத்திலும் பார்த்திருக்கலாம், சதுரமும் ஒரு வகைச் செவ்வகம் தானே?) கண்காட்சியை பொதுவாக ஒரு மைதானத்தில் அல்லது பெரிய வெட்டவெளியில் கட்டமைக்கின்றார்கள் அல்லவா? எவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதலில் தெரிய வேண்டும்.
பரப்பளவு = நீளம் & அகலம்.
இந்த கண்காட்சிக்கு மொத்தம் 50 புத்தக அரங்குகள் போட வேண்டும்.
நீளம் 100 மீட்டர். அகலம் 50 மீட்டர்.
அப்படியென்றால் பரப்பளவு = 100 * 50 sq. meter = 5000 sq.meter.
50 அரங்குகள். ஆகவே 5000/50 = 100 sq.meter.
ஸ்டால் அமைப்பு: அங்கேதான் சிக்கல் வரும். உள்ளே நடைபாதை அமைக்க வேண்டுமே? அப்படியெனில் முதலில் ஒரு தாளில் அந்த ஒட்டுமொத்தக் கண்காட்சியும் இருக்க வேண்டும் என வரைய வேண்டும். ஒவ்வொரு ஸ்டாலின் பரப்பளவு எவ்வளவு இருக்கலாம் என்று தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக போதிய காற்று, போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். ஒரே நுழைவு வாயில் இல்லாமல் பல வழிகளில் உள்ளே நுழைந்து வெளியேற வழிகள் வேண்டும்.
தாளில் திட்டமிடவும் அளவீடுகள் (Measurements) தேவை. நீளம் அகலம் மட்டுமல்ல உயரமும் முக்கியம். அதுதான் காற்று வசதியை ஏற்படுத்தும். ஊருக்கு ஏற்பவும் உயரத்தை மாற்ற வேண்டும். நடைபாதை பரப்பளவு + ஸ்டால்களில் பரப்பளவு இரண்டையும் கூட்டினால் மொத்த பரப்பளவு கிடைத்துவிடும். கழி வறைகள் வசதிகளையும் சேர்க்க வேண்டும். அது அரங்கத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளலாம். அதே போல மேடை, சிற்றரங்கங்கள் ஆகியவற்றையும் கணக்கிட வேண்டும்.
திட்டமிடுதலில் கணிதம்: ஒரே சமயத்தில் எத்தனை நபர்கள் உள்ளே நுழையலாம் என்பதையும் தோராயமாக கணக்கு போட வேண்டும். அதற்கேற்ப பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து அழைக்கலாம். ஒரு மாணவன் சராசரியாக எவ்வளவு மீட்டர் நடந்தால் ஒட்டுமொத்தக் கண்காட்சியையும் பார்க்கலாம் என்றும் கணக்கிடலாம். அதற்கு ஏற்ப தேவையான இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களையோ, தண்ணீர் மற்றும் உணவு ஏற்பாடுகளையோ செய்ய வேண்டும்.
இன்னும் இருக்கு கணக்கு: ஒரு ஸ்டாலுக்கு எவ்வளவு கட்டணத்தில் ஆரம்பித்து, ஸ்டாலுக்குள் வடிவியலைப் பயன்படுத்தி எப்படி அழகாக புத்தகங்களை அடுக்கலாம், எப்படி அதிகமான புத்தகங்களைக் காட்சிப்படுத்தலாம் என்பதும் உண்டு. காட்சிப்படுத்த லில் வடிவியலின் பங்கு அதிகம் உண்டு.
உங்களுக்கான டாஸ்க்: ஏன் ஒரு கண்காட்சி எப்போதும் செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்? வேறு என்ன வடிவத்தில் இருக்கலாம்? வட்ட வடிவத்தில் இருக்கலாமா? முக்கோண வடிவத்தில்? உள்ளே இருக்கும் அரங்குகள் (ஸ்டால்கள்) அதுவும் செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டுமா? ஒரே தளத்திற்குப் பதில் இரண்டு அடுக்குகள் இருந்தால் எப்படி இருக்கும்? குறைந்த பகுதியில் எப்படி நிறைய பகுதிகளை உட்புகுத்துவீர்கள்.
நீங்கள்தான் ஒரு கண்காட்சியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி வடிவமைப்பீர்கள்? சாத்தியம் சாத்தியமில்லை என்று சிந்தனையைக் குறுக்காமல் ஒரு புதிய புத்தகக் கண்காட்சி அரங்கினை வடிவமைத்து உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள். (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள், தொடர்புக்கு: umanaths@gmail.com