

பன்னாட்டு நிறுவனத்தில் சந்திரன் வேலை செய்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை, தெரிந்தவர்களைச் சந்தித்து, வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள குறிப்பிட்ட பொருளைச் சேகரிப்பார். தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பார். இந்த ஆண்டு ஷு சேகரிக்க நினைத்தார். குமரனிடம் 30-க்கும் மேற்பட்ட ஷுக்கள் இருப்பதை அறிந்து, அவரது வீட்டுக்குச் சென்றார்.
குமரனோ, “அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஷுக்களில் ஏறக்குறைய 25-க்கும் மேற்பட்டவை நல்ல நிலையில்தான் இருக்கிறன. ஆனாலும், நான் பயன்படுத்துவதில்லை” என்றார். “கொடுத்தால் புதுசாத்தான் கொடுக்கணும், பழச கொடுக்க கூடாது. புதுசு வாங்கித்தர இப்போதைக்கு பணம் இல்லை. அடுத்தமுறை பார்க்கலாம்” என்றார். அவருக்கு சந்திரன் ஒரு கதை சொன்னார்.
உடைந்த கண்ணாடி: இந்தியாவில் 1996-ல் யாஷ் குப்தா பிறந்தான். மூன்று வயதில் குடும்பத்தினரோடு அமெரிக்காவில் குடியேறினான். பார்வைக் குறைபாடு காரணமாக ஐந்து வயதில் கண்ணாடி அணியத் தொடங்கினான். ஒருநாள், கீழே விழுந்ததில் கண்ணாடி உடைந்தது. புதிய கண்ணாடி வருவதற்கு ஒரு வாரம் ஆனது. அதுவரை வகுப்பில் அவனால் கவனிக்க இயலவில்லை, பார்க்க முடியவில்லை, அடிக்கடி கவனம் சிதறியது.
ஒரு வாரம் கண்ணாடி இல்லாமல் இருப்பதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே! கண்ணாடி வாங்க இயலாதவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். வாழ்நாள் முழுவதும்அவர்கள் துயரத்தை அனுபவிப்பார்களே என்று யாஷ் யோசித்தான். அதுதொடர்பாக நிறைய வாசித்தான். புதிய கண்ணாடி வாங்குவதற்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கண்ணாடிகள் தூக்கி எறியப்படுவதை அறிந்தான்.
அதே வேளையில், உலகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சம் பள்ளி மாணவர்களால் கண்ணாடி வாங்க இயலவில்லை; பார்வைக் குறைபாட்டால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தான். உடல்நலம், மனநலம், கல்வி பற்றி பேசுகிறோம். ஆனால், எல்லாருக்கும் கண் கண்ணாடி கிடைப்பதைப் பற்றிபேசுவதில்லையே என்று நினைத்தான்.
யாஷ் வீட்டில், எல்லாருமே கண்ணாடி அணிகிறார்கள். முன்பு அவர்கள் பயன்படுத்திய 10 – 15 கண்ணாடிகள் வீட்டில் சும்மாதான் இருந்தன. இதைக் கொடுத்தாலே 10 -15 பேருக்கு கண்ணாடி கிடைக்குமே என்று யாஷ் யோசித்தான். ‘Sight Learning’ எனும் தன்னார்வ அமைப்பு தொடங்கினான். அமைப்பின் பண தேவைக்காக, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தான். பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளைச் சேகரிப்பதும், தேவை இருந்தும் வாங்க இயலாதவர்களுக்குக் கொடுப்பதும் அமைப்பின் நோக்கம் என்றான். அப்போது யாஷ் 14 வயது மாணவன்.
கண்ணில் தெரிந்தது மகிழ்ச்சி: இணைய பக்கம் உருவாக்கினான். வீடு வீடாகச் சென்று அறிவிப்பு தாள் கொடுத்தான். நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தான். அவர்கள் பயன்படுத்திய பழைய கண்ணாடிகளைத் தருமாறு கேட்டான். எதிர்பார்த்த ஒத்துழைப்பு இல்லை. விரக்தியடைவதற்குப் பதிலாக, தேடலை விரிவுபடுத்தினான். உள்ளூரில் இருந்த கண் மருத்துவர்களைச் சந்தித்தான்.
மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் தேங்கிக் கிடந்த, நூறுக்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளைக் கொடுத்தார்கள். மேலும், கண் மருத்துவமனைகளுக்கு வெளியில், “பயன்படுத்திய கண்ணாடிகளை நன்கொடையாகத் தாருங்கள்” என எழுதி ஒரு பெட்டியை வைத்தான் யாஷ். மக்கள் கொடுத்தார்கள்.
போதுமான அளவு கண்ணாடிகள் கிடைத்ததும் மாணவர்களைத் தேடிச் சென்றான். கண் மருத்துவர்கள் மாணவர்களின் கண்களைப் பரிசோதித்தார்கள். சரியான கண்ணாடியைக் கொடுத்து அணியச் சொன்னார்கள். முதன் முதலாக அணிந்தவர்களின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு வார்த்தைகள் இல்லை. தன்னார்வலர்களின் உதவியோடு, அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடிகளை இதுவரை கொடுத்துள்ளார். பார்வை இழப்பு, பராமரிப்பு, பரிசோதனை என கருத்தரங்குகளும், முகாம்களும் நடத்துகிறார். கண் மருத்துவர்களுடன் சேர்ந்து களத்திலும் யாஷ் பணியாற்றுகிறார். - கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com