வாழ்ந்து பார்! - 21: தகவல்தொடர்பிற்குத் தடையற்ற ஆளுமை எது?

வாழ்ந்து பார்! - 21: தகவல்தொடர்பிற்குத் தடையற்ற ஆளுமை எது?
Updated on
2 min read

முனைப்பற்றவர்கள், முரட்டுறுதியர் (Aggressive person) ஆகியோருக்கான தகுந்த உதாரணத்தை கடந்த வாரம் அளித்தார் ஆசிரியர் எழில். மேற்கொண்டு அது பற்றி பேசுகையில், கடையை அடைக்கும்பொழுதாவது தனக்கு வேண்டியவற்றைக் கொடுப்பீர்களா அல்லது நாளைக்குத்தான் கொடுப்பீர்களா என நக்கலாய் பேசுபவர், முனைப்பற்ற முரட்டுறுதியர் (Passive Aggressive person).

இத்தகையோர், தங்களது உரிமைகளும் தேவைகளும் மட்டுமே முக்கியம்; மற்றவர்களின் உரிமைகளும் முக்கியமில்லை எனக் கருதுபவர்கள். ஆனால், அதனை நேரடியாக, நேர்மையாக, பொருத்தமான முறையில் கூறமாட்டார்கள். சுற்றிவளைத்தோ உள்ளர்த்தத்தோடோ பேசுவார்கள் என்றார். உள்ளர்த்தத்தோடு என்றால்…என்று புரியாமல் வினவினான் தேவநேயன்.

நண்பகல். கதிருக்குப் பசித்தது. அருகிலிருந்த புலால் உணவகத்திற்கு (Non-Vegetarian Restaurant) உணவருந்த சென்றார். உள்ளே கூட்டமாக இருந்தது. பரிமாறுபவர் யாரும் உடனடியாக இவரைக் கவனிக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது; எரிச்சலடைந்தார். சிறிதுநேரம் கடந்துஅவரிடம் வந்த பரிமாறுபவர், “என்ன வேண்டும்?” என்று வினவினார்.

“மூளைஇருக்கிறதா?” என்றார் கதிர். பரிமாறுபவர் ஒரு நிமிடம் கதிரை உற்றுப்பார்த்துவிட்டு, “உங்களுக்கு முன்னால் வந்த அனைவருக்கும் இருந்தது; உங்களுக்குத்தான் இல்லை என்றார்” என்று எழில் சொல்லும்போதே சிரிப்பு மழை பொழிந்தது வகுப்பில்.

புறம் பேசுபவர்கள்: இந்த உரையாடலில் இருவரும் எந்த மூளையைக் குறிப்பிடுகிறார்கள் எனப் புரிகிறதா? என்று வினவினார் எழில். புரிகிறது, புரிகிறது என்றனர் அனைவரும். இவ்வகை முனைப்பற்ற முரட்டுறுதியினர், எதனையும் பொறுப்பேற்றுச் செய்யமாட்டார்கள். மற்றவர்களின் மீதோ சூழலின் மீதோ பழிசுமத்துவார்கள். வேலையைத் தட்டிக்கழிப்பார்கள் அல்லது செய்யாமல் காலந்தாழ்த்துவார்கள்.

தாம் விரும்பியதைத் தந்திரமாக அடைவார்கள். தமக்குள்ள கருத்துவேறுபாட்டையோ, தமது மறுப்பையோ நேரடியாகக் கூறமாட்டார்கள். வெளிப்படையாக மோதவும் மாட்டார்கள். நேரில் இனிமையாகவும் முதுகிற்குப் பின்னால் புறமும் பேசுவார்கள். கோபத்தையும் பொறாமையையும் அமைதியாக வெளிப்படுத்துவார்கள். நம்பகத்தன்மையற்ற இவர்களின் ஆளுமை, இவர்களுடன் தகவல்தொடர்பு கொள்வதற்குத் தடையாக இருக்கிறது என்று விளக்கினார் எழில்.

நல்லுறுதி நல்லது: முதலில் வந்த எனக்கு முதலில் பொருட்களைக் கொடுக்கிறீர்களா, அப்படிக் கொடுப்பதில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்று அமைதியாக, ஆனால் உறுதியான குரலில் கேட்பவர்கள் நல்லுறுதியினர் (Assertive person). தங்களது உரிமைகளும் தேவைகளும் தமக்கு முக்கியமானவை; அதேபோல மற்றவர்களின் உரிமைகளும் தேவைகளும் அவர்களுக்கு முக்கியமானவை எனக் கருதுபவர்கள்.

எனவே, இவர்கள் தமது தேவைகளையும் கருத்துகளையும் பொருத்தமான வழியில் நேரடியாகவும் நேர்மையாகவும் எடுத்துரைப்பார்கள். தன்னம்பிக்கையோடு உரையாடுவார்கள். தமது உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களிடம் தயங்காமல் கூறுவார்கள். தேவைப்படும் விளக்கங்களை மற்றவர்களிடம் தயங்காமல் வினவுவார்கள். பிறரின் கோரிக்கை நியாமற்றதாகவோ தன்னால் நிறைவேற்ற முடியாததாகவோ இருந்தால், அதனைத் தம்மால் நிறைவேற்ற இயலாது என நயமாகக் கூறுவார்கள்.

தேவைப்படும்பொழுது சிக்கலைப் பற்றிமற்றவர்களிடம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைப்பார்கள். தன்னிலையில் அகந்தையற்று உறுதியாக இருப்பார்கள். எனவே, தன்னம்பிக்கையுடைய வெளிப்படையான இவர்களின் ஆளுமை, இவர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளத் தடையாக இருப்பதில்லை என்று விளக்கினார் எழில்.

இந்த நான்கு வகை ஆளுமைகளில், நல்லுறுதியே பின்பற்ற வேண்டிய ஆளுமை என்பது தெளிவாகிறது. அதனை எவ்வாறு அடைவது என்று வினவினாள் இளவேனில். அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்றார் எழில். (தொடரும்) - கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர் தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in