

பேராசிரியர் ராகவன் அன்றைய தினம் அரங்கில் நுழைந்ததும், மாணவ மாணவியர் மத்தியில் நிலவிய சலசலப்பான பேச்சுக்கள் தடாலடியாய் நின்றன. என்னது புயலடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு? ஒருவேளை மாண்டஸ் புயல் பத்தி பேசிட்டு இருந்தீங்களோ என்றபடியே உற்சாகமாய் அன்றைய உரையை ஆரம்பித்தார். உண்மையில், கரை கடந்த புயல் பற்றியும் அதை ஒட்டி அவரவர் அறிந்த செய்தி குறித்தே பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருந்தனர்.
புயல் மட்டுமல்ல மழை, வெள்ளம், காலநிலை அவற்றை முன்கூட்டியே உணரும் அறிவியல் எல்லாமே இந்த நாட்களில் உங்களுடைய ஆர்வத்தை வெகுவாய் தூண்டி இருக்கும். இவை உட்பட புவியின் இன்னும் பல அதிசயங்கள், அவை நம் வாழ்க்கையிலும் சமூகத்திலும் விளைவிக்கும் பாதிப்புகள் போன்றவற்றை உயர்கல்வியாகவும் தேர்வு செய்து படிக்கலாம்.
கலை, அறிவியல் இரண்டுமே உண்டு: பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுமே புவியியல் பட்டப் படிப்புகளில் சேர முடியும். கலை மற்றும் அறிவியல் என இரண்டிலுமே புவியியல் படிப்பு இருக்கு. அதாவது பி.ஏ. அல்லது பி.எஸ்சி., என 2 பட்டப் படிப்புகளிலுமே சேரலாம். பொதுவாக பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக எடுத்து படித்தவர்கள் பி.எஸ்சி., படிப்பையும், மற்றவர்கள் பி.ஏ. படிப்பையும் தேர்வு செய்வார்கள். மற்றபடி மாணவர்கள் தங்கள் ஆர்வப்படி கலை அல்லது அறிவியலில் சேரலாம். உயர்கல்விக்கான பாடங்களும் அவ்வாறே அறிவியல் மற்றும் கலை சார்ந்தே அமைந்திருக்கும்.
இதர கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான கல்விக் கட்டணமே இப்படிப்புக்கு செலுத்த வேண்டியிருக்கும். முதுநிலை படிப்பை தேர்வு செய்யும்போது மாணவர்கள் தங்களது ஆர்வத்தை பொறுத்து இத்துறை சார்ந்த பொறியியல் படிப்பிலும் சேர்ந்து படிக்கலாம். இது தவிர குறிப்பிட்ட புவியியல் சார்ந்த ஆய்வு, திட்டமிடுதல் தொடர்பான சிறப்பு கம்ப்யூட்டர் படிப்புகளையும் சேர்த்துக்கொள்வது வேலைவாய்ப்புக்கு உதவும்.
ஆறு, மலை, பாலைவனம், பனிப் பிரதேசம், பாறைகள் என புவியியலின் பல்வேறு கூறுகளை ஆராய்வது அடிப்படையான படிப்பு. இவற்றுக்கு அப்பால் சுற்றுச்சூழல் மற்றும்பேரிடர் சார்ந்த மேலாண்மை, இயற்கை சீற்றங்களை முன்னறிதல், புவிக்குள் புதைந்திருக்கும் தாதுக்களை அடையாளம் காணுதல், நகரியங்களை உருவக்குதல், அவற்றுக்கான அளவிடுதல் மற்றும் ஆராய்தல் உள்ளிட்டவை மேலதிக துறைகள். இவற்றோடு மனிதன் மற்றும் சமூகத்துடனான புவியியல் தொடர்புகளை படிப்பது இன்று முக்கிய துறையாக வளர்ந்து வருகிறது.
பிரகாசமான வேலைவாய்ப்பு: கலை அறிவியல் அல்லாது நேரடியாக பொறியியலில் சேர விரும்புவோர், புவியியல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல்நுட்பம் சார்ந்த 6 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பில் சேரலாம். 4 ஆண்டுகளோடு பி.டெக்., படிப்பாக முடிக்கலாம் அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்கள் 2 ஆண்டு எம்.டெக்., படிப்பாக இவற்றை படிக்கலாம். சொற்ப கல்வி கட்டணத்தில் புதுமையான புவியியல் படிப்பை முடிப்போருக்கு தற்போது நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இவற்றை வழங்குகின்றன.
இந்த படிப்புகளுக்கு உடல் உறுதியும் முக்கியம். உதாரணமாக சுரங்கம், கடல் போன்றவை சார்ந்த தொழில்துறைகளுக்கு உடற்தகுதி முக்கிய இடம் பிடிக்கும். முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் தங்களை செதுக்கிக் கொள்வோருக்கு அரசு, தனியார் என பரவலான வேலைவாய்ப்புகள் உண்டு. இதர பட்டப்படிப்புகளை முடிப்போருக்கான ஆசிரியப் பணி, போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணிகளை அடைதல் ஆகியவை புவியியல் முடிப்போருக்கும் காத்திருக்கின்றன என்று பேசி பேராசிரியர் ராகவன் தனது உரையை நிறைவு செய்தார். - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com