டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 21: இது புரிந்துவிட்டால் எலக்ட்ரீசியன் தேவையில்லை

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 21: இது புரிந்துவிட்டால் எலக்ட்ரீசியன் தேவையில்லை
Updated on
2 min read

மின்னணுவியலின் அடிப்படை குறித்து கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். அதிலும் சுவிட்சை உபயோகித்து சில மின் இணைப்புகளை எப்படி வடிவமைக்கலாம் என்று பார்த்தோம். ஒவ்வொரு சுவிட்சும் ஒவ்வொரு மின் சாதனத்தை கட்டுப்படுத்தும் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதிலிருந்து மின்னணுவியலைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்று தெரியாது. அதை பற்றிதான் இனி விவாதிக்க இருக்கிறோம்.

உதாரணத்துக்கு, நமது வீட்டில் உள்ள சுவிட்சுகளுக்கும், மின்விளக்குகளுக்கும் உள்ள தொடர்பை மாற்றி அமைக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். இதற்கு நாம் உடனடியாக எலக்ட்ரீசியனை அழைத்து இந்த இணைப்புகளை மாற்றி அமைப்போம். இதேபோல நாம் ஒவ்வொரு முறை மாற்றி அமைக்க முயலும்போதும் எலக்ட்ரீசியனை அழைத்து இணைப்புகளை மாற்றச் சொல்லுவோம். இதற்கு பொறியாளர்கள் ஒரு புதிய முறையை கண்டறிந்தார்கள்.

மேலே உள்ள மின் இணைப்பு படத்தின் மத்தியில் ஒரு புதிய கட்டம் (block) வரையப்பட்டுள்ளதைக் கவனித்தீர்களா? சுவிட்சு இணைப்புகளையும், மின்விளக்கு இணைப்புகளையும் கட்டத்துடன் இணைத்துள்ளோம். ஆனால், இந்த கட்டம் என்ன செய்கிறது, எவ்வாறு வேலை செய்கிறது என்பது நமக்கு வெளியில் தெரியாது. நாம் சுவிட்சு S1-ஐ ஆன் செய்தால் எந்த மின்விளக்கு ஒளிரும் என்று கூற இயலாது. எந்த சுவிட்சுகள், எந்த மின்விளக்குகளை கட்டுப்படுத்தும் என்று கூற இயலாது.

இங்குதான் பொறியாளர்கள் இந்த கட்டத்தினை நமக்கு ஏற்றார்போல் வடிவமைக்க முயன்றார்கள். அதன் விளைவாக உருவானதே மின்னணுவியல் தொழில்நுட்பம். இந்த கட்டத்திற்கு ‘மின்னணுவியல்’ என்று பெயர். இதைப் பற்றிதான் இனி விரிவாக பார்க்க போகிறோம். எந்த சுவிட்சு எந்த மின்விளக்கை கட்டுப்படுத்த வேண்டும், எந்த மின்விளக்கு எவ்வளவு நேரம் ஒளிர வேண்டும் என்று எப்படி வேண்டுமானாலும் இயக்க இயலும்.

இப்போது ஒரு சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம். S1 சுவிட்சு வீட்டில் வரவேற்பறை மின்விளக்கையும், S2 சுவிட்சு வீட்டில் சமையலறை மின்விளக்கையும், S3 சுவிட்சு வீட்டில் படுக்கையறை மின்விளக்கையும் கட்டுப்படுத்துவதாக எடுத்துக் கொள்வோம்.

இப்போது நமக்கு வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை ஆகிய மூன்று மின்விளக்குகளையும் S1 சுவிட்சும், வரவேற்பறை மற்றும் படுக்கையறை மின்விளக்குகளை S2 சுவிட்சும், வரவேற்பதை மற்றும் சமையலறை மின்விளக்குகளை S3 சுவிட்சும் கட்டுப்படுத்த வேண்டும் எனில் நாம் எப்படி இணைக்க வேண்டும், இதற்கும் எலக்ட்ரானிக்ஸூக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம். கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in