

சிறுவயது முதல் பொருளாதாரப் பாடப் பிரிவில் இருந்த அதிக ஆர்வத்தினால் இந்தியப் பொருளாதாரப் பணி (ஐஇஎஸ்) தேர்வில் வென்றவர் முனைவர் கோகிலா ஜெய்ராம். நீலகிரி மலையின் படுகர் சமூகத்தை சேர்ந்த இவர் தற்போது மத்திய மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
கோகிலா ஜெய்ராம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவின் மிளிதேன் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜெய்ராம், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உதவி இயக்குநராக பணி ஓய்வு பெற்றவர். தாய் தேவி நல்லாயன் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றுள்ளார். மூத்த சகோதரர் நவீன்குமார், இந்திய விமானப்படையின் விங் கமாண்டராக ஆக்ராவில் பணியாற்றுகிறார்.
விவசாயத்தில் நாட்டம்: எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை கோகிலா கோத்தகிரி பாண்டியராஜ் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றார். அனைத்து வகுப்புகளிலும் முதல்நிலை மாணவியாக விளங்கினார். 10-ம் வகுப்பில் நீலகிரி மாவட்டத்தில் முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்றார். பிளஸ் 2-வை கோயம்புத்தூரின் அவிலா கான்வென்ட் பள்ளியில் முடித்துள்ளார். பெரும்பாலோர் தேர்ந்தெடுத்த பொறியியல் பாடத்தில் கோகிலாவிற்கு நாட்டம் எழவில்லை. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் வேளாண்மை நோக்கி ஈர்க்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். இளங்கலை பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இருந்த வேளாண்மை பொருளாதாரம் கோகிலாவை கவர்ந்தது. டெல்லியின் பூசா வளாகத்தில் இந்திய வேளாண்மை ஆய்வு மையத்தில் (ஐஏஆர்ஐ) முனைவர் பட்டப்படிப்பில் 2008-ல் சேர்ந்தார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பலரும் குடிமைப்பணித் தேர்வை எழுதுவது வழக்கமான ஒன்று. ஆனால், வேளாண்மை பொருளாதார பாடத்தில் முனைவர் பட்டம் பெறுவதை முதல் நோக்கமாகக் கொண்டிருந்த கோகிலா அவ்விதம் முனைவர் படிப்பில் சேர்ந்த பின்னரே 2009-ல் யூபிஎஸ்சி தேர்வுடன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளுக்கென யூபிஎஸ்சி நடத்தும் சிறப்பு தேர்வையும் எழுதினார்.
கல்வியா? வேலையா? - சோதனை முயற்சியாக இரண்டு தேர்வுகளையும் எழுதிய கோகிலா இரண்டிலுமே வெற்றி பெற்றார். இருப்பினும் எந்த அரசு பணியிலும் சேராமல் முனைவர் பட்டப்படிப்பை சிறப்புடன் முடித்தார். மீண்டும் 2011-ல் தேர்வை எழுதிய கோகிலா, இந்திய பொருளாதார பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.
இருப்பினும் இந்திய பொருளாதார பணியில் இணைந்து சேவை ஆற்றுவதே தனது முக்கிய கடமை என்று கருதியதால் அதை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறார்.
இது குறித்த நினைவுகளை அதிகாரி கோகிலா பகிர்ந்த பொழுது, “நான் உயர் அதிகாரியாக வர வேண்டும் என்று சிறுவயது முதலே என்னை அம்மா ஊக்கப்படுத்தி வந்தார். தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பயிற்சி நிலையத்தின் இயக்குனராக உள்ள பெரியம்மா மகன் விஸ்வநாதன் தன்னை விட உயர்ந்த நிலையை என்னால் அடைய முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.
பள்ளி முதல் கல்லூரி வரை எப்போதுமே நான் முதல் ரேங்க் வென்றதால் யூபிஎஸ்சி தேர்விலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. அதே சமயம் தேர்வுக்கான செலவை நானே ஏற்க முடிவெடுத்தேன். ஆகையால் முனைவர் பட்டப்படிப்பின்போது கிடைத்த ஊக்கத்தொகை கொண்டு யூபிஎஸ்சி எழுதினேன். ஐஏஆர்ஐ-ல்முனைவர் பட்டப்படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வில் நான் பெற்ற சிறந்த மதிப்பெண்களால் மத்திய அரசின் உதவித் தொகை பெற்றேன்” எனத் தெரிவித்தார்.
புத்தகமே சிறந்த அணிகலன்: மேலும் அவர் கூறுகையில், “சிறு வயது முதலே பெண்ணிற்கு ஆடை அணிகலன்களை அணிவித்து பார்ப்பதே அழகு என்று எண்ணாமல் சிறந்த நூல்களையே என் பெற்றோர் எனக்கு அறிமுகப்படுத்தினர். அதனால் எந்த வகை நூலாக இருப்பினும் அதனை ஆர்வமாகப் படிப்பது வழக்கம். பொருளாதார பணி தேர்வுக்காக நான் எந்த பயிற்சி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை. இதுவே யூபிஎஸ்சி தேர்வு வெற்றியின் ரகசியம்” என்றார்.
ஐஇஎஸ் பெற்ற கோகிலாவிற்கு டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில் (ஐஇஜி) 14 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் இந்திரா அவாஜ் யோஜ்னா (ஏழைகளுக்கு வீடு அளிக்கும் திட்டம்) உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த கோகிலா, மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தில் துணை இயக்குனர், மத்திய பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் வருகின்ற பொருளறு மற்றும் நொடிப்பு நிலைகளை ஆய்வு செய்யும் துணை அலுவலகத்தில் துணை பொது மேலாளராகவும் பணியாற்றினார். தற்சமயம் மத்திய நலத்துறையின் இணை இயக்குனராக உள்ளார்.
புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல பொறுப்புகள் கொண்ட பிரிவுகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதியின் கூற்றை நனவாக்கி உள்ளார் கோகிலா. இவர், இன்றைய புதுமை பெண்களில், ஒளி படைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி என்றுவலம் வருகிறார். சிற்றூர் தடையல்ல மற்றோர்சொற்கள் பொருளல்ல, பேணி வளர்க்கும் பெற்றோர், அன்புநிறை சுற்றம், மனதில் உறுதி இவை போதும் உலகை வெல்வதற்கு என்ற தாரக மந்திரத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறார் அதிகாரி கோகிலா. - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in