ஊடக உலா - 21: கைப்பேசி இதழியல்

ஊடக உலா - 21: கைப்பேசி இதழியல்
Updated on
1 min read

ட்ரோன் இதழியல், சிசிடிவி இதழியல் வரிசையில் இன்று மிகவும் பிரபலமடைந்திருப்பது கைப்பேசி இதழியல். கைப்பேசியினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பது நம்மை விட இன்றைய இளம் வயதினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு அதனைச் செம்மையாக மாணவப் பருவத்தினர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்ன ஒன்று நாம் அவர்களை அவ்வப்போது செழுமைப்படுத்த வேண்டியுள்ளது.

இன்று நிறைய மாணவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து ஆவணப்படுத்தலைத் தொடங்கி உள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன் அவர் ஊரில் நடக்கும் திருவிழாக்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் அவன் பதிவு செய்த ஆவணமே முக்கியமாகியது. காரணம், வேறு யாரும் அந்த திருவிழாக்களை ஆவணப்படுத்தவில்லை. அந்தச் சிறுவன் எடுத்த காட்சிகளையே அனைத்து புகழ்பெற்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. வேறு வழியில்லை. இப்படியாக கைப்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் ‘கைப்பேசி இதழியலின்’ (Mobile Journalism) ஒரு அங்கமாக மாறி இருக்கிறோம்.

நாமும் தொடங்குவோம், நம் ஆவணப்படத்தினை நமது வீட்டிலிருந்து. உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பாருங்கள். உங்கள் கண்ணுக்குத் தெரிவதைப் பதிவு செய்யுங்கள். அதனை எடிட் செய்து பதிவேற்றுங்கள். இன்று ‘என் ஜன்னலுக்கு வெளியே’ (OutSideMyWindow) என்ற தலைப்பிலான (# hashtag) ஆவணப்படுத்தல் உலகம் முழுவதும் புகழ்பெற்று வருகிறது.

வழிகாட்டும் புத்தகம்: ‘மொபைல் ஜர்னலிசம்’ என்றழைக்கப்படும் கைப்பேசி இதழியல் புகழ்பெற்று வருவதால் அதன் ஊடாக பல வகையான வேலைவாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. சைபர் சிம்மன் தமிழில் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’ எனும் புத்தகம் இந்த துறையில் வருபவர்களுக்கு ஒரு நல்ல கையேடாகும்.

அந்த புத்தகத்தில் மிகச்சிறந்த இதழியல் வழிகாட்டித்தளங்களில் ஒன்றான www.journalism.co.uk எனும் இணையதளத்தினைக் கூறுகிறார். கைப்பேசி இதழியல் உள்ளிட்ட இதழியலுக்கான கருவிகளும் சாதனங்களும் இந்த இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. (உலா வருவோம்) - கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in