தயங்காமல் கேளுங்கள் - 21: சிறுவர்களைவிடவும் சிறுமிகள் வேகமாக வளர்வது எதனால்?

தயங்காமல் கேளுங்கள் - 21: சிறுவர்களைவிடவும் சிறுமிகள் வேகமாக வளர்வது எதனால்?
Updated on
2 min read

தான் உயரமாக வளர முடியவில்லையே என்கிற கவலை பல பதின்பருவத்தினருக்கு உள்ளது. அதற்கு முக்கிய காரணமான எபிஃபைசியல் என்ற வளர்ச்சித்தட்டுக் குறித்து கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். தொடர்ந்து பேசுவோம்.

பெரும்பாலும் இந்த வளர்ச்சித்தட்டு திசுக்களில் குறைபாடுகள் ஏற்படும்போதுதான் சர்க்கஸில் நாம் பார்ப்பது போன்ற Achondroplasia எனும் குள்ள மனிதர்கள் உருவாகிறார்கள். அதேபோல க்ரோத் ஹார்மோன் அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாடுகள் குழந்தைப் பருவத்தில் ஏற்படுமேயானால் dwarfism, cretinism எனும் பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் உயரம் குறைந்த மனிதர்களும் தோன்றுகிறார்கள்.

மனிதர்களின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எபிஃபைசியல் வளர்ச்சித்தட்டுகள் ஒரு மனிதனது 18 முதல் 20 வயதில், அதாவது பருவமடைதலுக்குப் பின்பு, நீண்ட எலும்புகளுடன் தனியாகப் பிரிந்திருக்காமல் எபிஃபைசிஸ் பகுதியுடன் இணைந்துவிடும். அதனால் அந்த வயதுக்குப் பின் நமது உயரமடைதல் நின்று எலும்பின் வலிமை மட்டும் கூடுகிறது.

மளமளவென வளரும் சிறுமி: ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பருவமடைதல் சற்று முந்தி நிகழ்ந்துவிடுகிறது. பெண்களின் ஈஸ்ட்ரோஜன்கள், க்ரோத் ஹார்மோனுடன் இணைந்து உடல் உறுப்புகளின் வளர்ச்சியை முக்கியமாக எபிஃபைசியல் வளர்ச்சித்தட்டுகளைத் தூண்டிவிடுகிறது.

இதனால்தான் பதின்பருவ உயரமடைதல் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சில வருடங்கள் முன்பாகவே நிகழ்கிறது. அதேசமயம் எபிஃபைசியல் ஃப்யூஷன் எனும் வளர்ச்சித் தட்டு இணைதலும் இவர்களுக்கு முன்பாகவே நிகழ்ந்துவிடுவதால்தான் ஆண்களின் உயரமடைதல் சமயங்களில் 20 வயது தாண்டியும் இருக்கும்போதும், பெண்களின் உயரமடைதல் பெரும்பாலும் 18-20 வயதிற்குள் முடிந்துவிடுகிறது.

Precocious Puberty எனும் முந்திப் பருவமடைதலில் பெண்கள் உயரம் குறைந்து காணப்படுவதும் இதே ஹார்மோன்கள் மற்றும் எபிஃபைசியல் ஃப்யூஷனினால்தான். தடயவியல் மருத்துவத்தில், எலும்புகளைக் கொண்டு வயதை கணிப்பதும் (bone age) இந்த எபிஃபைசியல் ஃப்யூஷனைக் கொண்டுதான் என்பது நமக்கு இங்கு ஒரு உபரித் தகவலாகும்.

வெவ்வேறு உயரம் எதனால்? - உண்மையில் இந்த வளர்ச்சி விகிதம், பதின்பருவ உயரமடைதல், எபிஃபைசியல் இணைப்பு ஆகிய நிகழ்வுகள் அனைத்தையும் 60-85% வரை நமது மரபணுக்கள் தீர்மானிக்கிறது என்றாலும், மீதமுள்ள 15-40% நமது வாழ்க்கைமுறைக் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் நாம் உயரமாக முடியுமா என்று இன்றுவரை நம்மை அலைபாய வைத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோலத்தான் மரபணுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது எப்படி ஜப்பான்போல ஒரு நாட்டிலுள்ள மொத்த நபர்களும் ஒரே உயரத்தில் இருப்பது போலவே, மீதமுள்ள வாழ்க்கை முறைக் கட்டுப்பாட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அதன் காரணமாகத்தான் ஒரே நாட்டில், ஒரே இனத்தில், ஒரே வீட்டில், ஒரே பாலினத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு உயரத்தில் இருப்பதற்கும் காரணமாகிறது.

இப்போது டேவிட்டின் கேள்விக்கு வருவோம். பத்தாம் வகுப்பு பயிலும் டேவிட்டால் இன்னும் வளரமுடியுமா என்றால் இந்த 15-40% வரையுள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களால் நிச்சயம் உயரம் வளரமுடியும். பயறு வகைகள், தானியங்கள், காய்கறிகள், கனி-கொட்டை வகைகள், பால், முட்டை, மீன் மற்றும் இறைச்சி கலந்த சரிவிகித உணவுதான் இங்கு உதவுமே தவிர அதிகம் பருகப்படும் வெறும் பால் அல்லது அதில் சேர்க்கப்படும் செயற்கை பொடிகள் மட்டுமே போதாது என்பதை உணரவேண்டும்.

உடற்பயிற்சியினால் உயரம் குறைந்திடுமா? - அதுபோலவே உணவின் பங்களிப்பிற்கு சிறிதும் குறைந்ததல்ல உடற்பயிற்சி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்கிப்பிங், உயரம் தாண்டுதல், நீச்சல், தடகளம் ஆகியவை நிச்சயம் உதவும் என்பதுடன் வெயிட் லிஃப்டிங், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவை உயரத்தைக் குறைத்துவிடும் என்பது மூடநம்பிக்கைதான் என்பதை நாம் உணர வேண்டும். உண்மையில் நமது உடலுக்குத் தோதான அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் நன்மையைத்தான் அளிக்கும். அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதுதான் மிகவும் அவசியம். (ஆலோசனைகள் தொடரும்) - கட்டுரையாளார், மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர் தொடர்புக்கு: savidhasasi@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in