

பாலிடெக்னிக் எனப்படும் பல்தொழில்நுட்பப் பயிலகங்களில் வழங்கப்படும் பட்டய (Diploma) பொறியியல் படிப்புகள், பொறியியல் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற படிக்கட்டுகள். பட்டயப் பொறியியல் படிப்புகளைப் பற்றிய போதுமான புரிதல்கள் பொதுவெளியில் இல்லை.
பட்டயப்பொறியியல் படிப்பு என்பது ஏதோ ஒரு தொழிற்சாலையில் இளநிலை பொறியாளராக சேர்ந்து ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்ற மனநிலைக்கான படிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் பட்டயப் படிப்பை முடித்து பொறியியல் துறையில் மேற்படிப்புகளைப் பயின்று சாதித்தவர்கள் பலர் உண்டு.
10-ம் வகுப்பு முடித்தவர்கள் பட்டயப்பொறியியல் படிப்பில் நேரடியாக சேரலாம். இயந்திரவியல், கட்டுமானம், மின், மின்னணு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பொறியியல் துறைகளில் மூன்றாண்டுகள் படித்து பட்டயம் பெறலாம். தோல் தொழில்நுட்பம், அச்சு தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புப் படிப்புகளும் உண்டு.
பொறியியல் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் பட்டயப்பொறியியல் படித்து அதன் பிறகு நேரடியாக இரண்டாமாண்டு (Lateral Entry) பொறியியல் பட்டப்படிப்பில் (BE/B.Tech) சேரலாம். பிளஸ் 2 முடித்த பின் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கும், பட்டயம் முடித்து பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கும் ஒரே கால அளவே தேவைப்படும். கல்வியாண்டு வீணாவதில்லை. கூடவே, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறந்த நடைமுறை (Practical) பயிற்சியும் கிடைப்பதால், பொறியியல் துறையில் அவர்களால் தன்னம்பிக்கையுடன் மென்மேலும் சாதிக்க முடியும்.
பொறியியல் படித்தவர்களை காட்டிலும் டிப்ளோமா படித்தவர்கள், BE/B.Tech இறுதியாண்டு படிக்கும்போதே, டிப்ளோமா படிப்புக்குரிய வேலைக்கு விண்ணப்பித்து, கைவசம் வேலைவாய்ப்போடு பட்டப்படிப்பை முடிக்கலாம். பிறகு BE/B.Tech படிப்புக்குரிய வேலைக்கு முயற்சி செய்து பெறலாம். பொறியியலில் சிறந்து விளங்கும் அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெல்வதும் சுலபம்.
மேற்படிப்புகள்: BE/B.Tech படித்த பிறகு பின்பு ME/M.Tech மற்றும் PhD படிப்புகளைத் தொடரலாம். குடும்பச் சூழ்நிலை காரணமாக உடனடியாக மேற்படிப்பை தொடர முடியாதவர்கள், சில ஆண்டுகளுக்கு பின்பு பகுதி நேரமாக (Part Time) பொறியியல் பட்டப்படிப்பைத் தொடரலாம். பட்டயப்பொறியியல் படித்தவர்கள் திரைப்படக் கல்லூரியிலும், தொழில்நுட்பப் பிரிவுகளிலும் மேற்படிப்பைத் தொடரலாம்.
பட்டயப்பொறியாளர்கள் தொலைதூரக்கல்வியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து, அதன் மூலம் யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறலாம். டிப்ளோமா பொறியியல் படித்தவர்கள் ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுதவும் தகுதியானவர்கள்.
வேலை வாய்ப்புகள்: பொறியியல் டிப்ளோமா படிப்புகளுக்கு தனியார் துறையிலும் அரசுத்துறைகளிலும் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசுத்துறையில், பணியில் சேர்ந்த பின் உள்தேர்வுகள் மூலம் பதவி உயர்வு பெறும் வாய்ப்புகளும் உண்டு.
‘பொறியியல் துறையில்தான் என் எதிர்காலம்’, என முடிவு செய்த மாணவ,மாணவிகள் பாலிடெக்னிக் படிப்புகளை அலசி ஆராய்வது சிறந்தது. பட்டயப்படிப்புகளை படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி பொறியியல்துறையில் சாதிக்க வாழ்த்துகள். (கனவுகள் தொடரும்…) - ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com