செக்ஸ்டார்ஷன் என்பது என்ன?
“உன் நிர்வாண படம் என்னிடம் இருக்கிறது, நான் சொல்வதை நீ செய்யவில்லை என்றால், இந்த படங்களை இணையத்தில் அனைவருக்கும் பரப்பிவிடுவேன்” என்று மிரட்டிவிட்டு அதற்கு ஈடாக பாலியல் துன்புறுத்தலோ, பணமோ கேட்பது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய மிரட்டல் ‘செக்ஸ்டார்ஷன்’ (Sextortion) எனப்படுகிறது.
ஸ்மார்ட்போன் வருகைக்குப் பின்செக்ஸ்டார்ஷன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் ஆரம்பத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,பெரியவர்கள் என பாதிக்கப்படுவோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
‘செக்ஸ்டார்ஷன்’ பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் இதை எப்படி எதிர்த்துப் போராடலாம் என்பதைப் பார்ப்போம்.
1. மறைத்திருந்து படம் பிடித்தல் உங்களுக்கே தெரியாமல் உங்களை மறைந்திருந்து படம் பிடிப்பது அல்லது உங்கள் அறையில் கேமராவை ஒளித்து வைப்பது. இந்த முறையில் படம் பிடிக்கப்படும்போது பல நேரம் சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
2. ரிவெஞ்ச் போர்ன் (Revenge Porn) இதன் நோக்கம் முழுக்க பழிக்குப் பழி வாங்குவது. காதலர்கள், நண்பர்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படும் நிர்வாண படங்களை அழிக்காமல், ஏதோ கருத்து வேறுபாட்டால் பிரியும்போது பழிக்குப் பழி வாங்க அந்த படங்களை பொது வெளியில் வெளியிடுவது. பல நேரம் வெளியிடாமல் மிரட்டலில் மட்டும் ஈடுபடுவது.
3. வாட்ஸ்அப்/ சாட் இணையத்தில் நண்பர்கள் அல்லது நேரில் பழக்கமில்லாத சமூக வலைத்தள நண்பர்களுடன், குறுஞ்செய்திகளில் பாலியல் தூண்டலில் பேசுவதை செக்ஸ்டிங் என்பார்கள். அதேபோல நிர்வாண படங்களைப் பகிர்வது, நிர்வாண காணொலிகளை பகிர்வது ஆபத்தில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது.
4. செல்போனை ஹேக் செய்வது. மால்வேர் (malware) என்பார்கள். உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது அல்லது வேறு காரணங்கள் சொல்லி ஒரு லிங்கை க்ளிக் செய்ய வைப்பதின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழைந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் உங்கள் அந்தரங்க படங்களைத் திருடுவது.
5. மார்பிங்: (Morphing) உங்களுடைய புகைப்படங்களைக் கொண்டு நவீன தொழில்நுட்பம் மூலம் நிர்வாண படங்களுடன் அதை வெட்டி ஒட்டுவது. ஒரு காலத்தில் மார்பிங் செய்தால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்றைய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் மார்பிங் செய்யப்பட்டதை கண்டறிதல் மிகவும் கடினம்.
இதுபோன்ற தகவல்கள் உங்களை பயமுறுத்தும். ஸ்மார்ட்போன் மேல் ஒருவித பயமும் எரிச்சலும் வரும். கடந்த வாரம் அதன் நன்மைகளைச் சொல்லிவிட்டு இந்த வாரம் அதன் தீமைகளைச் சொல்வது முரணாக தோன்றும். இணைந்திருங்கள் நிறைய விவாதிக்க வேண்டும். - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com
