

மக்களின் வறுமையை கண்டு வருந்திய மருத்துவர் அன்சியா ஜஹாங்கிர் மருத்துவமனையில் பணிபுரிந்தபடியே, அருகிலிருந்த கந்த்வா தொழுநோய் மருத்துவமனைக்கு ஒருமுறை சென்றார். அப்போது வறுமையைக் காட்டிலும், வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டவர்களின் வேதனை மிகவும் பெரியது என்பதை உணர்ந்தார்.
தொழுநோயால் உருக்குலைந்த மூக்கு, காது, இமைகள், விரல்கள் முதலானவற்றைப் பார்த்தபோது, இவர்களைச் சீரமைப்பது, இறந்த தனது சகோதரியின் தீக்காயங்களைச் சீரமைப்பது போல என்று நினைத்து அவர்களின் உருவச் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினார்.
உதவியின்றி சிகிச்சை: தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை என்பதால், சமயங்களில் உதவியாளர்களும் அவரது உதவிக்கு வராமல் போக, ஒற்றை ஆளாக தானே அவர்களுக்கு மயக்கமருந்து அளித்து, தானே அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருத்துவர்கள் கூட ஒதுக்கி வைக்கும் இவர்களுக்கு இன்னும் அதிகம் உதவலாம் என்று எண்ணி, மும்பை செல்ல முடிவு செய்த மருத்துவர் அன்சியா, அப்போது தனக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த ஊதியத்துடன் 1958-ம் ஆண்டு மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் இணைந்தார்.
அந்த பழம்பெரும் மருத்துவமனை ஆரம்பத்தில் வெறும் ஆறு படுக்கைகளுடன் செயல்பட்டு வந்தது. அதற்கு இங்கிலாந்தில் இருந்து சர் ஹெரால்ட் கில்லிஸ் அவர்களை வரவழைத்து டாடா பிளாஸ்டிக் சர்ஜரி டிபார்ட்மெண்ட்-ஐ தொடங்கி வைத்தார். அன்சியாவின் அயராத உழைப்பால், கை அறுவை சிகிச்சை துறை, தீக்காயங்கள் சிகிச்சைத் துறை, தொழுநோயாளர் சிகிச்சை துறை, பிளவுபட்ட உதடு அறுவை சிகிச்சைத் துறை என பல்கிப் பெருகி, பிற்பாடு தேசத்திற்கே முன்னுதாரணமாகவும் நின்றது.
மீண்டும் ஒருமுறை இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டு, நோயெதிர்ப்புத் திறன் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், தனது கனவான அந்த சீரமைப்புத்துறையை உதவி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், உதவியாளர்கள் என்று பெரிதாக்கினார். அதைவிட, அங்கே முதன்முறையாக அருவருப்பின்றி தொழுநோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சையைத் தரமுடிந்ததுதான் தனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது என்றார்.
மக்களை போலவே மந்திரி: கர்நாடக சுகாதார அமைச்சரின் குழந்தைக்கு பிளவுபட்ட உதட்டுச் சிகிச்சையை எல்லோருக்கும் செய்வது போலவே செய்தார். ஏனெனில் சமூக அந்தஸ்து உள்ள மனிதருக்கு கிடைக்கும் அதே மருத்துவம் எளியவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மருத்துவர் அன்சியா எண்ணினார்.
தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், சர்வதேச கருத்தரங்குகளில் பங்கு, விழிப்புணர்வு நிகழ்வுகள் என எண்ணிலடங்கா மருத்துவப் பணிகளை விடாது மேற்கொண்டு வந்த அன்சியா, ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் சில முறை மேற்கொண்ட சிகிச்சைகளில் தவறவும் நேர்ந்து, என்றாலும் மேடு பள்ளங்களைக் கடந்து தனித்துவமாக நின்றார்..
மருத்துவர் என்றால் வெறும் மருத்துவப் பணி மட்டுமே செய்வது என்ற அப்போதைய நிலையை மாற்றி, தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்கு உதவும் அமைப்பையும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொது சுகாதாரத்தை வலியுறுத்தும் FRCH எனும் அமைப்பையும் 1974-ல் நிறுவி, மக்கள் தொண்டு புரிந்துவந்தார்.
அவரது மகத்தான பங்களிப்பை பாராட்டி 'தி ராயல் சொசைட்டி’ அவருக்கு மதிப்புமிகு ஹண்டேரியன் நினைவு விருதினை வழங்கிட, இந்திய அரசு பத்ம விருது வழங்கி சிறப்பித்தது. பிர்லா சர்வதேச விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என விருதுகளால் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தபோதிலும் தொழுநோயாளிகளுக்குத் தான் அளித்த மறுசீரமைப்பு சிகிச்சைகள்தான் தன்னை எப்போதும் அடையாளப்படுத்தும் விருதுகள் என்று கூறியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்கென அர்ப்பணித்த டாக்டர் அன்சியா, 85 வயதில், 2007-ல் ஜூன் 22 தேதி இயற்கை எய்தினார்.
‘தொழுநோய் கடவுளின் சாபம்’ என்று யார் வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால், ஒரு மருத்துவர் மனது வைத்தால் அதை மாற்றமுடியும் என்று செய்து காட்டியவர் டாக்டர் அன்சியா. தனது "ஒரு வாழ்வின் மாற்றங்கள்" (A Life of Change) புத்தகத்தில்
"பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான ஒவ்வொருவரின் வாழ்விலும் பிடிமானங்கள் என்பது ஒன்று மற்றவையாக மாறக்கூடும் என்பதால், சக மனிதர்களை நேசிப்பதைக் காட்டிலும் சிறந்ததொரு பிடிமானம் இல்லை" என்ற வரிகளுடன் முடித்துள்ள டாக்டர் என்.ஹெச். அன்சியா, அதற்கு உதாரணமாகத் தனது வாழ்க்கையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார். (மகிமை தொடரும்) - கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com