கதை கேளு கதை கேளு - 19: நவீன இந்தியாவின் தந்தை

கதை கேளு கதை கேளு - 19: நவீன இந்தியாவின் தந்தை
Updated on
2 min read

தான் கற்ற கல்வியை இந்த நாட்டுக்கும், சமூகத்துக்கும் சகலத் துறைகளிலும் பயனுறச் செய்தவர் அம்பேத்கர். இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படும் அம்பேத்கர் இந்திய இளைஞர்களின் எழுச்சிமிகு ஆதர்சமாகவும் மாறி இருக்கிறார்.

இந்திய வரலாற்றில் 26.11.1949 என்ற தேதி முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவம் அரசமைப்புச் சட்டப்பேர வையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 400 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தில் சுரண்டப்பட்டுவந்த மக்களுக்குக் கிடைத்த அரசியல் சுதந்திரம், அதையொட்டி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்றே எழுதப்பட்டது அரசமைப்புச் சட்டம். அதை உருவாக்கிய தலைசிறந்த சட்ட மேதைகளின் குழு, அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் வீற்றிருந்தது போன்றவற்றை எல்லாம் நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

சாதி ஒழிப்பு சிந்தனைகள்: இன்றைக்கும் ஒட்டுமொத்தச் சமூகமேம்பாடுபற்றிப் பேசும்போது அதில் சாதியின் தாக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற ஆய்வில் சாதி என்பதைத் தனித்த அம்சமாகப் பார்க்க மறுத்த அம்பேத்கர், சாதி என்பதுசாதிய முறையின் அங்கம் என்றார். சாதியை ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாக பார்த்தார். சாதி என்பது நம்மனநிலையில் உள்ளது என சமூக நீதிக்கான குரல் எழுப்பிய அம்பேத்கர் சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழிமுறை என்றார்.

இந்தியத் தொழிலாளர்களின் தந்தை: அம்பேத்கர் அளவுக்கு இந்தியாவில் தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்ட, அவர்களது முன்னேற்றத் துக்காக பாடுபட்ட ஒரு தலைவரை காணமுடியாது. வைஸ்ராய் கவுன்சிலில் அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது முதன்முதலாக தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டினார். இதன்மூலம் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வழி ஏற்படுத்தினார். 1945-ல் வேலை நேரத்தைக் குறைக்கும் மசோதாவைக் கொண்டுவந்தார். அம்பேத்கரின் இந்த முயற்சியாலே இந்தியாவில் 12 மணிநேர வேலை என்ற நிலைமாறி 8 மணிநேர வேலை திட்டம் அமலுக்கு வந்தது. சிகாகோவில் இதே கோரிக்கைக்காக ஆயிரக்கணக்கானோர் ரத்தம்சிந்தி போராடி பெற்ற உரிமையை அம்பேத் கர் தனி ஆளாக நின்று பெற்றுத் தந்தார்.

கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சிசெய். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தை யும், நீதியையும், அறநெறிகளையும் உருவாக்கக் கூடியதையே அம்பேத்கர் கல்வி என்றழைத்தார். ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்துத் தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தித் தன்னுடைய உரிமைக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி என்றார்.

இந்தியாவின் கல்வி நிலை குறித்து பேசுகையில், மக்களிடமிருந்து வசூலிக்கப் படும் கலால் வரி அளவுக்கேனும் கல்விக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று வாதிட்டார். மதக் கோட்பாடுகளுக்குப் பாடத்திட்டத்தில் இடம் அளிக்கக்கூடாது என்றார். பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றார். நாடு முழுவதற்குமான பொதுப் பாடத்திட்டம் பின்பற்றப்பட வலியுறுத்தினார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உயர அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியேபயிலுதல் வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்டோர் பள்ளிக் கல்வி தாண்டி பயில உதவித்தொகை திட்டத்தையும் கொண்டுவந்தார். ஆனால், கல்விப்புலத் துக்கு அம்பேத்கர் ஆற்றிய பெரும்பங்கு இன்றும் பேசாப் பொருளாகவே நீடிக்கிறது.

சிறந்த பத்திரிகையாளர்: எல்லோருக்குமான தலைவராய், அரசி யல், சமூகம், பொருளாதாரம், கல்வி, சட்டம், சாதி ஒழிப்பு என அனைத்துத் துறையிலும் தனித்துவமான தலைவராய், தேசத்தின் பெருமிதமான தலைவராய் திகழ்ந்தவர் அம்பேத்கர்.

‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அம்பேத்கரின் பன்முக அறிவை ஆராயும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ராமச்சந்திர குஹா போன்ற சிறந்த வரலாற்று அறிஞர்களும் அம்பேத்கர் பற்றி அவ்வளவாக அறியப்படாத தகவல்களை தன் கட்டுரையில் எடுத்துரைத்துள்ளனர்.

இந்தியாவின் சிறந்த பத்திரிகை யாளர்கள், எழுத்தாளர்கள், அம்பேத்கரின் வாழ்க்கையை, அம்பேத்கரை செதுக்கிய ஆசிரியர் ஜான்டூயி பற்றிய செய்தியை, அம்பேத்கர் பௌத்த மதம் மாறிய காரணமும், நிகழ்வும், இந்தியாவுக்காக அவர் செய்துள்ள எண்ணற்ற பணிகளை, இன்றைய காலகட்டத்துக்கும் அம்பேத்கர் ஏன் தேவை? என்கிற புரிதலை தரும் விதத்தில் பல கட்டுரைகளாக எழுதி யுள்ளனர்.

டெல்லியில் இந்திய அரசால் அம்பேத்கரின் நினைவு இல்லம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டாலும், ஒரு தேசத்தலை வரின் நினைவில்லம் பெரும்பாலும் யாரும் வருகைபுரியாத இடமாக இருப் பதைக் கூறும் பத்திரிக்கையாளர், இந்திய மனங்களின் நிலையையும், அது மாறவேண்டியதன் அவசியத்தையும் கட்டுரை வழியாகக் கூறுகிறார். இந்தபுத்தகம் அம்பேத்கர் பற்றிய அனைத்துதகவல்களையும் ஒருசேரக் கொண்டிருக்கிறது. - கட்டுரையாளர்: ஆசிரியர்,காஞ்சிபுரம், தொடர்பு: udhayalakshmir@gmail.com

நூல் தலைப்பு : பாபாசாகேப் அம்பேத்கர்

விலை : 220/-

சிறப்பு தள்ளுபடி : 176/- (20% கழிவு)

மேலும் விபரங்களுக்கு : 7401296562 / 7401329402 / 044 - 35048073

ஆன்லைனில் பெற :https://store.hindutamil.in/all-books

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in