

‘தரவுகள்’ மற்றும் ‘தகவல்கள்’ இன்றைய நவீன உலகில் மிக முக்கியமான சொல்லாடல் கள். நாம் தினம் தினம் தகவல்களாலும் தரவுகளாலும் மூழ்கி இருக்கிறோம். இது தகவல் தொழில்நுட்ப யுகம் என்றும் கேள்விப்படுகிறோம். தரவுகள் என்றாலே எண்கள்தான். அப்படி என்றால் தகவல்களும் அப்படியா? இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா?
மாணவராக நீங்கள் ஏராளமான தரவுகளை பார்த்திருப்பீர்கள். உதாரணமாக உங்கள் வகுப்பில் 40 நபர்கள் என வைத்துக்கொள்வோம். 20 பெண் குழந்தைகள், 20 ஆண் குழந்தைகள். 19 நபர்கள் கண்ணாடி அணிந்திருப்பார்கள். திங்கட்கிழமை வருகை 33 பேர், செவ்வாய், புதன் மற்றும் வியாழனில் 36 பேர், வெள்ளிக்கிழமை 32 பேர். தமிழ் பாடத்தில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள், ஆங்கிலத்தில், அறிவியலில் கணிதத்தில், சமூக அறிவியலில் ஒவ்வொரு மாணவரும் வாங்கிய மதிப்பெண்கள், இவை எல்லாமே தரவுகள். இவை தகவல்கள் அல்ல.
அப்படின்னா தகவல்னா? - தரவுகளில் இருந்து ஆராய்ந்து, கணித்து, கூட்டி, கழித்து, சராசரி எடுத்து என எந்த சின்ன ஆய்வினை மேற்கொண்டாலும் கிடைப்பது தகவல். நாம் மேலே சொன்னவற்றைத் தகவல்களாக மாற்றுவோமா?
50% ஆண்கள், 50% பெண்கள்
# சுமார் 50% பேர் கண்ணாடி அணிகின்றனர்
# வார இறுதியிலும் ஆரம்பத்திலும் (வெள்ளி, திங்கட்கிழமை) நிறையபேர் விடுமுறை எடுக்கின்றனர்.
# கணிதத்தில் வகுப்பின் சராசரி மதிப் பெண் குறைவாக உள்ளது (சராசரி, கூட்டுத் தொகை)
# அறிவியலைக் காட்டிலும் சமூக அறிவியலில் மாணவர்கள் நன்றாக மதிப்பெண் எடுக் கின்றார்கள். (கூட்டுத்தொகை, சராசரி, சிறியது பெரியது)
ஆக, கணிதத்தை கொண்டு தரவுகளில் இருந்து தகவல்களாக மாற்றிவிட்டோம். எளிமையான சூத்திரங்கள், கோட்பாடுகள் கொண்டு மாற்றிவிட்டோம். வேறு வேறு இடங்களுக்கு ஏற்ப இவை அதிகரிக்கும். கணிதத்தில் எல்லா அடிப்படைகளையும் பயன்படுத்த வேண்டி இருக்கும். சின்னது, பெரியது, கூட்டுத்தொகை, கழித்தல், பெருக்கல், வகுத்தல், சராசரி, சதவிகிதம் என நீண்டுகொண்டே போகும்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவார்களே, கேள்விப்பட்டதுண்டா? வீட்டிற்கு வந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கேள்விகள் கேட்டு விடைகளைப் பெறுவார்கள். வீட்டினரின் வயது, சம்பாத்தியம்
என நீண்ட பட்டியல். இவை யாவும் தரவுகள். இவற்றை தொகுத்து/ஆராய்ந்து தகவல்களாக மாற்றுவார்கள்.
ஆமாம், இந்த தகவல்களை வைத்து என்ன செய்வது? துறைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க தகவல்கள் உதவும். நம் இலக்குகளை அடைய இந்த முடிவுகள் வேண்டும். நம் வகுப்பறையில் கிட்டத்தட்ட 50% சதவிகிதத்தினர் கண்ணாடி அணிகின்றனர் எனில் எல்லோரையும் சத்தான உணவுப்பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும், கணிதத்தில் மேலும் கவனம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாணவர்களை கவரும் விதத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பாடவேளைகளை மாற்றி அமைக்கலாம். இது நம் வகுப்பு அளவில் செய்யும் முடிவுகள். இதையே எல்லா மட்டத்திலும் செய்யலாம். வீடு, அலுவலகம், விவசாயம், வீதி, நிறுவனம், பஞ்சாயத்து, தாலுகா, மாவட்டம், மாநிலம், தேசம் என அனைத்து இடங்களிலும் இது தேவை. இது அறிவியல்பூர்வமான அணுகுமுறை.
தரவுகள் சேகரிக்கவும் கணிதம் தேவை. சேகரித்த தரவுகளை பகுக்கவும் ஆராயவும் கணிதம் தேவை. கிடைத்த தகவல்களை வைத்தே முடிவுகளை எடுக்க முடியும். நாம்காணும் ஒவ்வொரு அறிக்கைகளிலும் காண்பது தகவல்களையும் முடிவுகளையும்தான். ஆதாரமாக இருக்கும் கணிதத்தை ருசித்துப் பயில்வோம். (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்., தொடர்புக்கு: umanaths@gmail.com