

இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்காகவே தயாரிக்கப்படும் சூழலில், இடது கைப் பழக்கமுள்ளவர்கள் வாகனங் களை எவ்வாறு கையாள்வார்கள்?
– நு. தன்னூன், 9-ம் வகுப்பு, டவுட்டன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
உங்கள் கேள்விக்காக இடது கைப் பழக்கமுள்ளவர்களிடம் பேசினேன். சின்ன வயதிலிருந்தே இடக் கையைப் பயன்படுத்தி வருவதால், வலக் கைக்காரர்களைப் போலவே பெரும்பாலான விஷயங்களை எளிதாகவும் இயல்பாகவும் செய்கிறார்கள். கத்திரிக்கோலால் வெட்டுவது இவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் பிரச்சினை ஏதும் இல்லை என்றே இவர்கள் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளில் இடது கைப் பழக்கமுள்ளவர்களுக்காகக் கத்திரிக்கோல் உட்பட சில கருவிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நம் நாட்டில் அப்படிப் பிரத்யேகமாக எதுவும் இல்லை. இங்கே இடது கையால் ஒரு செயலைச் செய்தால் அது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவரிடம் கை குலுக்கும்போது இடது கையை நீட்டுவது, பெரியவர்கள் ஏதாவது கொடுக்கும்போது இடது கையால் வாங்குவது, இடது கையால் உணவுப் பொருளைப் பங்கிட்டுக் கொடுப்பது போன்ற நேரத்தில் மற்றவர்கள் இவர்களைவிமர்சிக்கும்போது மட்டுமே அசெளகரி யமாக இருக்கிறது என்கிறார்கள். மற்றபடி வலது கைப் பழக்கமுள்ளவர்களைப் போலவே இடது கைப் பழக்கமுள்ள வர்களும் எல்லாவற்றையும் இயல்பாகச் செய்வதாகச் சொல்கிறார்கள், தன்னூன்.