

ஒடஞ்சு போனத குப்பையில போடவே விடமாட்டேங்கிற. பொறுமையா எல்லாத்தையும் ஒட்டி அடுக்கி வச்சிருக்கிற என்று கமலியை அவளது அப்பா கிண்டல் செய்தார். உள்ளே வந்த அம்மா, அதெல்லாம் நமக்குத்தாங்க குப்பை. அவளுக்கு பொக்கிசம். யார் கண்டா எதிர்காலத்துல ‘குப்பையில் முளைத்த விஞ்ஞானி’னு இவளுக்கு பட்டம் கொடுத்தாலும் கொடுத்துருவாங்க என்றார். அப்படின்னா, என்னைய கெல்வின் டோ-னு சொல்றீங்களா என்று கேட்டாள் கமலி. அது யாரு கெல்வின்? அம்மாவும் அப்பாவும் கேட்டார்கள். கமலி விவரித்தாள்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது சியரா லியோன் பகுதி. இந்நாட்டின் ஃபிரிடவுன் நகரத்தில் நான்கு குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ்ந்தார். 1996-ல் மீண்டும் கருவுற்றார். கருவைக் கலைக்கச் சொன்னார் கணவர். மறுத்தார் மனைவி. குழந்தைகளையும் மனைவி யையும் கைவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் கணவர். அக்டோபர் 26-ம் தேதி மகன் பிறந்தான். பெயர், கெல்வின் டோ. தனி ஒருவராக குடும்பத்தைப் பராமரிக்க தாய் போராடினார்.
புறக்கணிக்கப்பட்ட குழந்தை: கெல்வின் அப்பகுதியில் இருந்த குப்பைகளைக் கிளறினான். வேண் டாம் என்று மக்கள் எறிந்த வயர், சுவிட்சு உள்ளிட்ட பழைய மின் சாதனப் பொருட்களைத் தேடினான். மக்கள் கேலி செய்தார்கள். திட்டினார்கள். ஆனாலும், தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை தேடினான். கிடைத்த நாட்களில், இரவு ஏழு மணிக்கெல்லாம் தூங்கச் சென்றான். நள்ளிரவில் எல்லாரும் தூங்கிய பிறகு எழுந்தான். தான் சேகரித்த பொருட்களை வீட்டில் விரித்து வைத்தான். விளக்கு ஒளியில் வேலை செய்தான். அப்போது அவனுக்கு வயது 11.
பாதி தூக்கத்தில் கண் விழித்த அம்மா, வீடு முழுவதும் மின்சாதன குப்பைகளாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து கண்டித்தார். அம்மாவை சமாதானம் செய்தான் கெல்வின். ஃபிரிடவுன் நகரத்தில், கெல்வின் வாழ்ந்த பகுதியில் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோதான் மின்சாரம் வந்தது. எனவேதான் பொறுக்கி எடுத்த பொருட்களை வைத்து, வீடுகளுக்கு ஒளியூட்ட சொந்தமாக பாட்டரி தயாரித்தான்.
கெல்வின் கண்டுபிடிப்புகள்: வான் அலை ஒலிபரப்பி (Radio transmitter), ஒலிவாங்கி (Microphone receiver), ஒலிபெருக்கி (Sound amplifier) மற்றும் முவ்வலைவரிசை கலவைக் கருவி (Three-channel mixer) ஆகியவற்றை சொந்த முயற்சியில் உருவாக்கினான். இதன்உதவியால் பாடல்கள் ஒலிக்கவிட் டான். தன்னை DJ Focus என அறிமுகம் செய்தான். கவனம் செலுத்தினால் கண்டிப்பாக எல்லாராலும் புதியன கண்டுபிடிக்க முடியும் எனவே Focus என வைத்தேன் என்றான். மக்கள் ரசித்தார்கள்.
இதன் அடுத்த முயற்சியாக, சமுதாய வானொலி தொடங்க நினைத்தான். பகலில் பள்ளிக்கூடம் சென்றான். கண்டுபிடிப்புக்காக இரவெல்லாம் உழைத்தான். நிறையதோல்விகள். முயற்சியை கைவிட வில்லை. மனவுறுதியுடன் முயன்றான்.சமூக வானொலியை உருவாக்கினான். செய்திகள், பாடல்கள், அவ்வப்போது நல்ல கருத்துக்களை வழங்கத் தொடங்கினான். தானாகவே பொறியியல் கற்று தம் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினான். அப்போது வயது 15.
குறைந்த வயதில் சாதனை: “ஏன் வானொலி?” என்று கேட்ட போது, “என் மக்களுக்கென ஒரு வானொலி இருந்தால், அவர்களால் தங்கள் பிரச்சனைகள் குறித்து உரையாட முடியும்” என்றான். தேசிய தொலைக்காட்சி கெல்வினைச் சந்திக்கச் சென்றது. தன் கண்டுபிடிப்பை நாட்டு மக்களுக்கு முன்பாக செயல்படுத்தி காட்டினான். இதன்பிறகு, மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (Massa chusetts Institute of Technology) கெல்வினை பேச அழைத்தது. அப்போது வயது 16. ‘Visiting practitioner’ எனும் முறையில் அங்குஉரையாற்றியவர்களில் வயது குறைவானர் கெல்வின்தான். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், இளங்கலை மாணவர்களுக்கு வருகைதரு பேராசிரியராக பாடம் நடத்தினான். ஆய்வு செய்துகொண்டே படிக்கிறான். - கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், தொடர்பு: sumajeyaseelan@gmail.com