

ஒரு கடை. இருவர் பொருள்களை வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். மருதன் அங்கு வருகிறார். ஒருவர் பொருளை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். மருதனுக்குப் பின்னால் இன்னொருவர் அங்கு வருகிறார். இரண்டாவது ஆளும் கிளம்பி விடுகிறார்.
வந்தவர்கள் வரிசைப்படி மருதனே அடுத்து பொருள் வாங்க வேண்டும். தனக்குத் தேவையானதைக் கூற அவர் ஆயத்தமாகிறார். ஆனால், கடைக்காரரோ, மருதனுக்குப் பின்னால் வந்தவரிடம் என்ன வேண்டும்? என்று கேட்டு, அவற்றைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது இன்னொருவர் வருகிறார்.
கடைக்காரர் மருதனைக் கண்டுகொள்ளாமலேயே புதிதாக வந்தவருக்குப் பொருளைக் கொடுக்கிறார். மருதன், தான் காக்க வைக்கப்படுவதால் எரிச்சலடைகிறார். அடுத்து இருவர் வருகிறார்கள். கடைக்காரர், அவர்களிடம், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார். மருதனின் எரிச்சல் கோபமாக மாறுகிறது. இப்பொழுது மருதன் தனதுகோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று கூறுங்கள் என வகுப்பறையில் கேட்டார் ஆசிரியர் எழில்.
என்ன நடக்குமென தெரியாது! - கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாகக் காத்திருப்பார் என்றாள் மணிமேகலை. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிடுவார் என்றான் சுடர். யோவ்... நான் நின்றுகொண்டே இருக்கிறேன். எனக்குப் பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறீர்கள். நான் இலவசமாகவா கேட்கிறேன்; காசு கொடுக்கிறேனே. முதலில் எனக்குக் கொடுங்கள்; இல்லையென்றால் இங்கு என்ன நடக்கும் எனத் தெரியாது எனக் கத்திச் சண்டையிடுவார் என்று அக்காட்சியை நடித்துக் காட்டினாள் தங்கம்.
அண்ணே, கடையை அடைக்கும்பொழுதாவது எனக்கு வேண்டியவற்றைக் கொடுப்பீர்களா அல்லது நாளைக்குத்தான் கொடுப்பீர்களா என்று நக்கலாகக் கேட்பார் என்றார் பாத்திமா. முதலில் வந்த எனக்கு முதலில் பொருள்களைக் கொடுக்கிறீர்களா? அப்படிக் கொடுப்பதில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று அமைதியாக, ஆனால் உறுதியான குரலில் கேட்பார் என்றான் அருளினியன்.
உரிமையை நிலைநாட்டுவது எப்படி? - நன்று! இப்பொழுது எதிர்வினைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்போம் என்று ஆரம்பித்தார் எழில். கோபத்தை அடக்கிக் கொண்டு காத்திருப்பவர் அல்லது இவ்விடத்திலிருந்து அமைதியாகக் கிளம்பிச் செல்பவர் ‘முனைப்பற்றவர்’ (Passive Person). இத்தகையோர், தனது உரிமைகளும் தேவைகளும் தனக்கு ஒரு பொருட்டே இல்லை; மற்றவர்கள் உரிமைகளும் தேவைகளும் மட்டுமே முக்கியம் எனக் கருதுபவர்கள்.
இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மாட்டார்கள்; அதுவாகக் கிடைக்கும் எனக் காத்திருப்பார்கள். தவறுகளைக் கண்டிக்க மாட்டார்கள். மனத்திற்குள் புழுங்குவார்கள். மறுத்துரைக்க மாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என மற்றவர்களுக்குத் தெரியாது. பேசாமல் கேட்க மட்டுமே செய்யும் இவர்களின் ஆளுமை, இவர்களுடன் தகவல்தொடர்பு கொள்வதற்குத் தடையாக இருக்கிறது என்று விளக்கினார். எங்களில் நிறையப் பேர் அப்படித்தான் இருக்கிறோம் என்றாள் கண்மணி.
அடுத்து, கத்திச்சண்டையிடுபவர் முரட்டுறுதியர் (Aggressive Person). இத்தகையோர் தங்களது உரிமைகளும் தேவைகளும் மட்டுமே முக்கியம்; மற்றவர்களின் உரிமைகளும் முக்கியமில்லை எனக் கருதுபவர்கள். தங்களது கருத்தே சரியென நினைப்பவர்கள்; அதனைப் பிறர் மீது திணிப்பவர்கள். தங்களது உரிமையை நிலைநாட்டத் துடிப்பவர்கள்; அதற்காகச் சண்டை போடுபவர்கள். மற்றவர்கள் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கவே மாட்டர்கள். இத்தகு ஆளுமை, இவர்களுடன் தகவல்தொடர்பு கொள்வதற்குத் தடையாக இருக்கிறது என்றார் எழில். என் அப்பாவைப் போல என்றாள் முகில். பலரும் அப்படி இருக்கின்றனர் என்றார் எழில். (தொடரும்) - கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர், தொடர்புக்கு: ariaravelan@gmail.com