

அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம் ஆகிய எட்டும், 'வடகிழக்கு மாநிலங்கள்' ஆகும். இந்திய நிலப்பரப்பில் சுமார் 8% உள்ள இந்த மாநில எல்லைகளை ஒட்டி நெருக்கமாய் திபெத் (சீனாவின் பகுதி), மியான்மர், வங்காளம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதி பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றதாகவும் திகழ்கிறது.
கிழக்கு இமயமலைப் பகுதியில், பராக் - பிரம்மபுத்திரா சமவெளியில் அமைந்துள்ள வடகிழக்கு மாநிலங்களில் கோடை, மழை, குளிர் ஆகிய மூன்று பருவங்களும் கடுமையாக இருக்கின்றன. ஆங்காங்கே மலைகள், இடையிடையே சமவெளிகள், கொட்டித் தீர்க்கும் மழை, இதனால் விளையும் வெள்ளம் ஆகியன வடகிழக்கு மாநிலங்களின் பூகோள அடையாளம்.
சிக்கிம் மாநிலத்துக்கும் நேபாள நாட்டுக்கும் இடையே ‘காஞ்சன்சங்கா' சிகரம் உள்ளது. இந்தியா - வங்கதேசம் ஊடே பாய்கிறது ‘தீஸ்டா' நதி. இந்த ஆற்று நீர் பகிர்வு தொடர்பாக, இந்தியா - வங்கதேசம் இடையே சில பிரச்சினைகள் உள்ளன. பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று இருநாடுகளும் நம்புகின்றன.
பொதுவாக, வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் எல்லாமே, வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இமயமலையைத் தொட்டு வடகிழக்கு மாநிலங்களில் மழையாகப் பொழிகிறது. இதனால் இங்கு எப்போதும் மழை வளம் மிகுந்துள்ளது.
தேசிய பூங்காக்கள் நிறைந்த பகுதி: மேகாலயாவில் உள்ள ‘சிரபுஞ்சி' உலகில் மிக அதிக மழை பெறும் இடங்களில் ஒன்றாகும். இமயமலை அடிவாரப் பகுதிகளில், பூமியின் அடித்தட்டுகள் நகர்ந்த வண்ணம் உள்ளதால், இங்கே நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, உலகில் நில நடுக்க அபாயம் மிகுந்த பகுதியாகவும் அறியப்படுகிறது.
அரிய வகை தாவரங்கள் மிகுந்துள்ள இந்த மண்டலத்தில், ‘சைட்ரஸ்' பழங்கள்மற்றும் மூலிகைத் தாவரங்கள் அதிகமாக விளைகின்றன. மலையும் மழையும்மிகுந்துள்ள காரணத்தால் இந்த மண்டலத்தில் அடர்ந்த இயற்கை காடுகளும் அதிகம் உள்ளன. அழிவின் விளிம்பில் இருக்கும் அரியவகை காட்டுப் பூக்கள் மற்றும் பறவை இனங்கள் வடகிழக்கு காடுகளில் இருப்பதால், இந்த மாநிலங்களில் ‘தேசிய பூங்காக்கள்' அதிக எண்ணிக்கையில் உள்ளன.
செழித்தோங்கும் பழங்குடிகள்: எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்து, 5 கோடி மக்கள்தொகை கொண்டது இந்த மண்டலம். அதில் 70% மக்கள் அசாம் மாநிலத்தில் மட்டுமே வசிக்கின்றனர். மண்ணின் மைந்தர்கள், மூதாதையர், பழங்குடிகள் மிக அதிகம் வசிக்கும் இந்த மாநிலங்களில் இயல்பாகவே பழங்குடி மொழிகள் புழக்கத்தில் உள்ளன. உலகில், பழங்குடி மொழிகள் அதிகம் புழங்குகிற பகுதிகளில் மிக முக்கியமானவையாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கின்றன.
பழங்குடிகளின் பாரம்பரிய நடனங்கள், மரபு மீறா பழக்க வழக்கங்கள், பழங்கால வழிபாட்டு முறைகள், தொன்று தொட்டு வரும் இயற்கை சார் வாழ்க்கை முறை வடகிழக்கு மாநிலங்களின் தனிப்பெரும் அடையாளமாய் இன்றும் சிறந்து விளங்குகின்றன. இதன் காரணமாய் இந்திய அரசின் தனி கவனம் பெறுகிற மண்டலமாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களில் சமீப காலமாக, சமூக பொருளாதார கட்டுமானங்கள் தனி கவனம் பெற்று வருகின்றன. இந்தியாவின் புவியியல் அமைப்பில் வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவம் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைத் தந்து, உலகின் முக்கிய சுற்றுலா மண்டலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த வார கேள்வி: வடகிழக்கு மாநில வாழ்க்கை முறை - பழந்தமிழர் வாழ்க்கை முறையுடன் நெருக்கமாய் ஒன்றுபடுகிறது. எப்படி? விளக்குக. (வளரும்) - கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்கு: baskarankwriter@gmail.com