Published : 02 Dec 2022 06:15 AM
Last Updated : 02 Dec 2022 06:15 AM

களிமண் நாள் மீட்டுத்தந்த பாரம்பரியம்: மகிழ்ச்சியே கல்வியின் அடையாளம்

ஆர்.இமாகுலேட் ரஞ்சனி

இது எங்கள் பள்ளியின் முழக்கமும். பள்ளியில் மாதம்தோறும் மழலையர் பிரிவில் சிறப்பு நாட்களாக கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் (க்ளே) களிமண் தினம் கொண்டாடப்பட்டது.

க்ளே தினம் என்றவுடன் களிமண்ணில் செய்யும் பொம்மைகள் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் திடீரென்று ஆசிரியர்கள் நாம் மண்பானையில் பொங்கல் வைத்தால் என்ன என்ற ஒரு யோசனை சொன்னார்கள்.

ஆரம்பத்தில் பொங்கல், சாதம், குழம்பு மற்றும் காய்கறி என்று விதவிதமாக திட்டமிட்டோம். பின்பு எல்லோருக்கும் சமைத்ததைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில், மண்பானையில் சமைத்த சமையலின் ருசியை அனைத்துக் குழந்தைகளும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இத்தனை விதமான சமையலுக்குப் பதிலாக பொங்கலாக அதுவும் இனிப்பு பொங்கலாக மட்டும் மாறியது.

சமையல் பொருட்களும் கூட்டு முயற்சியில் கிடைப்பது சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் வண்ணத்துப்பூச்சி உலகத்தின் ஆசிரி யர்கள் இதோ நாங்கள் இருக்கிறோம் என்று ஒருவர் ஒருவராய் நாங்கள் அரிசி தருகிறோம், பருப்பு தருகிறோம், வெல்லம் தருகிறோம், நாங்கள் பானை வாங்கி தருகிறோம், நாங்கள் அடுப்பு வாங்கி தருகிறோம் என்று அடுத்தடுத்து அவர்களுடைய அன்பு கலந்த பெருந்தன்மையால் பொங்கலுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வந்தடைந்தது.

நாங்கள் எதிர்பாராத விதம் அனைத்தும் நிறைவேறியது. க்ளேடே கொண்டாடும் தினம் நவம்பர் 25. வருத்தத்திற்குரிய செய்தி எங்கள் ஆசிரியர் ஒருவருக்குக்கூட விறகடுப்பில் சமைக்கதெரியாது என்பதுதான். நாம் நம் தற்சார்பு நிலையை இழந்த துயரத்தை அப்போது உணர்ந்தோம். ஆனால் அனைவரும் விறுவிறுப்பாக காலையில் விறகடுப்பில் தீ மூட்டி சமைக்கத் தயாரானார்கள். விறுவிறுப்பாக மூன்று அடுப்பு மூன்று பானைகள் என ஆசிரியர்கள் குழுவாகப் பிரிந்து, மாணவர்களையும் சுற்றி அமர வைத்து, மாணவர்கள் ரசிக்க இவர்கள் பொங்கல் செய்யும் முறையை ஒவ்வொன்றாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

மாணவர்கள் அதை மேலும்‌ அழகூட்ட பொங்கல் பானையையும் விறகு அடுப்பையும் படமாக வரைந்து மகிழ்ந்தனர். இது ஒரு க்ளேடே எனத் தொடங்கி பொங்கல் தினமாக மாறியிருந்தது. மாணவர்கள் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். இந்த பொங்கலோடு மட்டும் முடிந்தது என்று நினைக்காதீர்கள், ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து விதவிதமான பாரம்பரிய உணவுகளை சமைத்து மாணவர்களுக்கு அதை காட்சிப்படுத்தினர்.

மண்பானை குடுவையில் ராகி கொழுக்கட்டை, கம்மங்கூழ் ,கருப்புகவுனி அரிசி கூழ், உளுந்தங் களி, பருப்பு பாயாசம்,அவியல், வாழைப்பூ வடை மற்றும் மோர் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதமே அசத்தலாக இருந்தது. இவற்றின் பயன்களையும் நம் பாரம்பரிய உணவுகளையும் மண் சார்ந்தும் சூழல் சார்ந்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதனுடைய ருசியை அறிய செய்தார்கள்.

விதவிதமான வண்ண வண்ண பாக்கெட்டு களில் வரும் துரித உணவுகளைக் காட்டிலும் சத்தான உணவு எது, நம்முடைய பாரம்பரிய உணவு எது, ருசியானது எது என்பதையும் புரிய வைப்பது மிகவும் கடினமான ஒன்று என்ற சிந்தனையை இந்த நிகழ்வு முற்றிலும் மாற்றி அமைத்திருந்தது. இறுதியில் உறியடித்தல் நிகழ்வு. உறியடித்தல் என்பது மிகச் சரியான பயிற்சியாகும்.

அவனுடைய கண்களை அந்தப் பானையில் இருந்து எடுக்கவே இல்லை. அதே சமயம் அவன் கைகளில் இருந்த கம்பு அந்தப் பானையை எட்டி உடைக்க எம்பி எம்பி குதித்தது இன்னும் நினைவிலேயே இருக்கிறது. அந்தப் பானையை உடைத்தவுடன் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதைப் பார்த்த ஆசிரியர்கள், குழந்தைகள் போல் துள்ளி குதித்துக் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நாளையும் நிகழ்வையும் தொலைந்து போன நம் பண்பாட்டை மீட்டெடுத்த நாளாக எண்ணி மகிழ்ந்தோம். துணை முதல்வர் (தொடக்கப் பள்ளி), எஸ் ஆர் வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி மாவட்டம்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x