Published : 01 Dec 2022 06:14 AM
Last Updated : 01 Dec 2022 06:14 AM

வெற்றி நூலகம்: கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்!

கு.செந்தமிழ் செல்வன்

காட்டுயிர் என்றால் இயற்கையாக உருவாகி தன்னிச்சையாக வாழும் உயிரினங்கள் என அர்த்தம். அவை, விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மரங்கள் என எதுவாகவும் இருக்கலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சற்று உற்று நோக்குவதுதான்.

 வெண் மான்கள் வேகமாக ஓடும் என்று தெரியும். ஆனால், ஆபத்து என்றால் மூன்று மீட்டர் உயரத்துக்கு எம்பி 80 கி.மீ வேகத்திற்கு ஓடும் என்று அறிவோமா?

 பூனை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதற்கு பிடித்த உணவு குப்பைமேனி கீரை என்று அறிவோமா? சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ குணம் கொண்டது குப்பைமேனி கீரை என்பதை மனிதர்கள் தெரிந்து கொண்டதே பூனையின் மூலமாகத்தான்.

 “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்பதை அறிந்த நாம் எறும்பிலிருந்து நாம் கற்றதை அறிவோமா? எறும்புகள் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றின் உணவுகளை பூஞ்சைத் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கின்றன. இந்த வேதிப் பொருளே தற்போது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கி சுவாரஸ்யமாக அழைத்துச் செல்கிறது ‘நம்மைச் சுற்றி காட்டுயிர்’ புத்தகம். புகழ்பெற்ற சூழலியல் எழுத்தாளர் சு. தியோடர் பாஸ்கரன் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை தமிழில் தந்துள்ளவர் ஆதி வள்ளியப்பன். குக்கூ குழந்தைகள் அமைப்புடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2012 -ல் முதல் பதிப்பு கண்டது இப்போது நான்காவது பதிப்பாக வந்துள்ளது.

பறவைகளின் காதல் வாழ்க்கை: இந்நூல் பறவைகளை ரசிக்கவும் கற்றுத் தருகிறது. நமது தோட்டத்தை உற்று நோக்கினாலே நிறைய காட்டுயிர்களை காண முடியும். வீட்டுத் தோட்டம் இல்லாதவர்களும் சந்தோஷமாக வானத்தினைப் பாருங்கள். பறவைகளைப் பார்ப்பதுடன் அதனை என்ன பறவை என்று அடையாளம் காணவும் கற்றுக் கொள்ளுங்கள் என்கிற இந்நூல். மேலும் இப்புத்தகத்தில் தவறவிடக் கூடாது சில அம்சங்கள் இதோ:

# காட்டுயிர் இயக்குனர் தாமரைக் கோழிகள் குறித்து “மிதக்கும் வீடுகள் “ என படம் எடுத்திருந்தார். இந்தத் தாமரைக் கோழிகள் குளிர்காலத்தில் தனது இனப் பெருக்கக் கால உருமாற்றத்தைப் பெற்றிருக்குமாம். பெண் பறவை, பல ஆண்களுடன் இணை சேர்ந்து ஒரே நேரத்தில் பல முட்டைகளை வெவ்வேறு கூடுகளில் இடக் கூடியது. இதனால், அந்தந்த கூட்டுக்குரிய ஆண் பறவைகள் அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன.

# காயமடைந்த இரைக்கொல்லிப் பறவைகளுக்கு அமெரிக்காவில் உள்ள கரோலினா ராப்டர் சென்டர் புனர் வாழ்வு தருகிறது. இந்தியாவிலும் அத்தகைய மையங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

# பூவுலகைக் காக்க முயல்வோரை ஊக்குவிப்பதற்காக கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நோபல் பரிசாக கருதப்படும் இதனை இந்தியாவில் நால்வர் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது.

நூலாசிரியர் விவரிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஏற்கெனவே, மிக மோசமாக சீரழிக்கப்பட்டுவிட்ட இயற்கை வளத்தையும் முடக்கப்பட்டுவிட்ட சுற்றுச்சூழலையும் இனிமேல் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதை நாம் அனைவரும் கரம் கோர்த்து முடிவு செய்தாக வேண்டும். இந்தப் புத்தகம் அந்த முடிவெடுக்க நிச்சயம் நம்மை உந்தித்தள்ளும். - கட்டுரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர், வேலூர்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x