

கடந்தகால இதழியலுக்கும், இன்றைய இதழியலுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் தொலைக்காட்சிக்குச் செய்திகளைச் சேகரிக்க ஒரு தொலைக்காட்சி நிலையம் குறைந்தது ஐந்து நபர்களைத் தனியாக ஒரு வாகனத்தில் அனுப்பும். ஆனால், இன்று நிலைமையே வேறு. ஒரே ஒரு செய்தியாளர் இந்த ஐந்து நபர்கள் செய்த வேலையைச் செய்கிறார்.
கேமராவை கையாள்வது, செய்தியை திரட்டி எழுதுவது, அறிவிப்பு செய்வது, ஒளிப்பதிவு செய்த செய்தியை எடிட் செய்வது என அனைத்து பணிகளையும் ஒருவரே பார்த்தாக வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் படிக்கும்போதே எல்லா விதமான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ட்ரோன் இதழியல்: இன்று செய்தியின் வடிவங்கள் மாறியுள்ளன. 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டால், இன்று ட்ரோன் காட்சிகளுடன் கூடிய செய்திகள் பலவற்றைக் காணமுடியும். ஒரு காலத்தில் கழுகுப் பார்வையிலான காட்சியை எடுக்கப் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டி இருந்தது. சிறிய விமானமோ, அல்லது ஹெலிகாப்டரோ தேவையாக இருந்தது. ஆனால், இன்று ஒரு சில ஆயிரங்களில் நாம் ட்ரோன் காட்சிகளை எடுத்துவிடலாம்.
கரோனா காலத்தில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் ட்ரோன் காட்சிகளைச் சார்ந்து பல செய்திகளை ஒலிபரப்பின. அதேபோன்று திருவிழாக்கள், மக்கள் மிக அதிகமாகக் கூடும் இடங்கள், மக்களே இல்லாத இடம் என பிரம்மாண்டத்தை காட்ட இந்த வகையான காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் இத்தகைய இதழியல் முறையை பின்பற்றி வருகின்றன. ட்ரோன் காட்சிகளுக்குத் தகுந்தவாறு செய்தியும் எழுதப்படுகின்றன. இன்று பல யூடியூப்பர்களும் இதுபோன்ற காட்சி முறைகளைப் பயன்படுத்தி செய்திகளைத் தயாரித்து வருகின்றனர்.
ட்ரோன்கள் ரூ.5000 முதல் இருந்து இணையத்தில் கிடைக்கின்றன. நம் கைப்பேசியைக் கொண்டு இதனை இயக்க முடியும். உரிய அனுமதி பெற்று இதனை பயன்படுத்தும் விதத்தில் பல நல்ல ஆவணப்படங்களை உங்கள் பகுதியிலேயே எடுக்கலாம்.
சிசிடிவி இதழியல்: ட்ரோன் இதழியல் போன்றே இன்னொரு வகையான இதழியல் வடிவமும் காட்சி ஊடகங்களில் சமீப காலமாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. அது சிசிடிவி இதழியல். 24 மணி நேரச் செய்தி அலைவரிசைகளில் குறைந்தது ஒரு மணி நேரம் இது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அதுவும் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகள், வீடுகளில் நடக்கும் திருட்டு, வன விலங்குகள் ஊருக்குள் வருவது போன்ற காட்சிகள் சிசிடிவியின் உபயம்.
எந்த ஒரு தொலைக்காட்சியும் 24 நான்கு மணி நேரமும் கேமராவை ஆன் செய்து, அதை இயக்குவதற்கு ஒரு 'கேமரா மேன்’-ஐ பணியமர்த்த முடியாது. அந்த சிரமத்தினை போக்குவதற்கு வந்ததுதானோ என எண்ண வைக்கிறது இந்த சிசிடிவிக்கள்.
ஒருசில தொலைக்காட்சிகள் சிசிடிவி காட்சிகளை மட்டுமே வைத்து அரை மணி நேர நிகழ்ச்சிகளைச் செய்கின்றன. அந்த அளவிற்கு இதன் முக்கியத்துவம் பெருகி வருகிறது. இன்று நாம் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறோம். அது சிசிடிவியால் மட்டுமல்ல, நம் கைப்பேசிகளாலும். (உலா வருவோம்) - கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: bbcsakthi@gmail.com