தயங்காமல் கேளுங்கள் - 20: நான் வளரவில்லையே மம்மி!

தயங்காமல் கேளுங்கள் - 20: நான் வளரவில்லையே மம்மி!
Updated on
1 min read

“என் க்ளாஸ்லயே நான்தான் ஹைட் கம்மி. பட்டப்பெயர் வெச்சு எல்லாரும் என்னைக் கூப்பிடுறாங்க...என்னோட வருத்தத்தைப் பார்த்து என் அம்மா விளம்பரங்கள்ல வர்ற பல ஊட்டச்சத்து பானங்களை தினசரி வாங்கித் தந்துட்டேதான் இருக்காங்க. நானும் தினமும் எக்சர்சைஸ், ஸ்கிப்பிங் எல்லாம் பண்றேன். நான் சீக்கிரமா உயரமாகறதுக்கு வேற எதுவும் வழி இருக்கா? சொல்லுங்க ப்ளீஸ்."

- 10-ம் வகுப்பு டேவிட்டின் கேள்வி இது.

டேவிட்டுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “ஒரே வாரத்தில் உயரமாவது எப்படி?, இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால், இந்த மாத்திரையை உட்கொண்டால், இந்த ஊசியைப் போட்டால், நிச்சயம் உயரமாவீர்கள்.

இருபது வயதிற்குப் பின்னும் வளரவேண்டுமா இவற்றையெல்லாம் கடைபிடியுங்கள்" என ஏகப்பட்ட ஆலோசனைகளும், தீர்வுகளும் காணக்கிடைக்கும் இணையதளத்தை விட்டுவிட்டு, தயங்காமல் இங்கு கேள்வி கேட்டதற்காகவே டேவிட்டுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டைச் சொல்லிவிடலாம்.

உண்மையில் நமது வெளித்தோற்றத்தைத் தீர்மானிக்கும் நிறம், உயரம், உடல்வாகு ஆகியவற்றைத் தீர்மானிப்பது மரபணுக்கள்தான் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் டேவிட்டின் கேள்விக்கான முழுமையான பதிலை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்கு நாம் உயரமடைதலின் உடலியலை அறிவது அவசியமாகிறது.

நமது உடலின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் காரணியான எலும்புகள், நம் உடலில் மொத்தம் 206 உள்ளன. இந்த 206 எலும்புகளில், long bones எனப்படும் கை-கால்களில் உள்ள நீண்ட எலும்புகள்தான் நமது உயரத்தை பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. பொதுவாக இந்த நீண்ட எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் இருக்க அவற்றில் உள்ள டயாஃபைசிஸ், மெட்டாஃபைசிஸ் மற்றும் எபிஃபைசிஸ் ஆகிய மூன்று பகுதிகள்தான் காரணம். இருந்தபோதும் இந்த நீண்ட எலும்புகளின் வளர்ச்சியை அவற்றின் வெளிப் பகுதியில் உள்ள 'எபிஃபைசிஸின் வளர்ச்சித் தட்டு' (epiphyseal growth plate) தான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது.

இந்த வளர்ச்சித் தட்டின் செயல்பாடு நமது பரம்பரை குணங்களைக் கடத்தும் மரபணுக்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் 60-85% வரை இருக்கிறது. அதேநேரம் மிகுதியை நம் உடலின் நாளமில்லா சுரப்பிகளான வளர்ச்சி ஹார்மோனும் (Growth Hormone), தைராய்டு ஹார்மோன்களும், இனப்பெருக்க ஹார்மோன்களும் கட்டுப்படுத்துகின்றன.., இவற்றிற்கு நமது உடலில் சேரும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச்சத்து, வைட்டமின்கள் டி, ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துகள் துணைநிற்கின்றன.

ஆக, குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும் வளர்ச்சித் தட்டின் செயல்பாடு தான், வளரும் எலும்புகளின் நீளத்தை உயரவோ குறையவோ செய்து, உயரத்தையும் தீர்மானிக்கிறது. Growth spurt எனும் பதின்பருவ உயரமடைதலுக்குக் காரணமும் இதே எபிஃபைசியல் வளர்ச்சித்தட்டுதான். (வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in