

கடந்த அத்தியாயத்தில் பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்' குறித்து பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் குறித்து பார்ப்போம்.
நாடு முழுவதும் மக்களின் சேமிப்பு நோக்கங்களுக்காக அஞ்சலகங்களில் பொது வைப்பு நிதி (Public Provident Fund) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர் வைப்பு நிதி (RD), நிரந்தர வைப்பு நிதி (FD) போன்ற பிற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் இதற்கு கூடுதல் வட்டி கிடைக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக செல்வ மகள் சேமிப்பு (Sukanya Samriddhi Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு இதைவிட கூடுதல் வட்டி விகிதத்தை அளிக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் இருப்பது போலவே, ஆண் குழந்தைகளுக்கும் சேமிப்பு திட்டம் தேவை என்பதை உணர்ந்த தமிழக தபால் துறை பொது வைப்பு நிதியின் பெயரை மாற்றி பொன்மகன் சேமிப்பு திட்டம் என பிரபலப்படுத்தியது. ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவை, உயர்கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும். பொன்மகன் சேமிப்பு திட்டம் அல்லது பொது வைப்பு நிதி திட்டம் இந்திய அஞ்சல் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், கூடுதல் வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
பொன்மகன் சேமிப்பு திட்டம்: நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், பொதுத்துறை தனியார் வங்கிகளிலும் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. ஒரு இந்தியக் குடிமகன் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் இந்த கணக்கு தொடங்க முடியும். இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள்வரை முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பின் முதலீட்டுத் தொகையுடன் அதற்குரிய வட்டியும் சேர்த்து முதிர்வு தொகையாக கிடைக்கும். 15 ஆண்டுகளுக்கு பிறகும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்பினால், கால அளவை நீட்டித்துக் கொள்ளலாம். அந்த நீட்டிப்பு காலத்திலும் பணத்தை முதலீடு செய்யலாம்.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மாதந்தோறும் சிறு தொகையாகவோ, ஒரே நேரத்தில் பெரும் தொகையாகவோ செலுத்தலாம். காசோலை, வரைவோலை, ஆன்லைன் மூலமாகவும் பணத்தை செலுத்தலாம். ஒரு ஆண்டு டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு முடங்கிவிடும். பிறகு டெபாசிட் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தினால் கணக்கை புதுப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தில் இணைவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. அதேவேளையில் 10 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்த்தால், அவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவும். 10 வயதுக்கும் குறைவானவர்களுக்குப் பெற்றோர் அல்லது சட்டப்படியான காப்பாளர் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். இதில் சேருவதற்கு ஆண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குழந்தையின் புகைப்படம், பெற்றோர் / காப்பாளரின் முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை) தேவை. இந்த கணக்கை இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
எவ்வளவு வட்டி விகிதம்? - 2000-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 12 % வட்டி வழங்கப்பட்டது. பொருளாதார மந்த நிலை காரணமாக தற்போதுஆண்டுக்கு 7.1% ஆக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசால் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும். சமீப ஆண்டுகளாக நாட்டின் சராசரி சில்லறை பணவீக்க விகிதமான 5%ஐவிட, இதன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால் முதலீட்டை பணவீக்க பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
உதாரணமாக, இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் 1,80,000 ரூபாய் சேமிக்கலாம். இதன் வட்டி விகிதம் 7.1%. இதன் மூலம் வட்டியாக 1,45,457 ரூபாய் கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 3,25,457 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் முதலீட்டு தொகை வட்டி கணக்கிடப்பட்டு, கணக்கில் வரவு வைக்கப்படும்.
பாதியில் பணத்தை எடுக்க முடியுமா? -
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கியது முதல் 7-வது நிதி ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. கணக்கு தொடங்கி 3-வது நிதி ஆண்டில் இருந்து கடன் பெறும் வசதியும் இருக்கிறது. ஆனால் ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் பெறவோ, பணத்தை எடுக்கவோ முடியும்.
இடையே கணக்காளருக்கு மரணம் ஏற்பட்டால், பெற்றோர் அல்லது காப்பாளருக்கு முதலீட்டு பணம் கிடைக்கும். கணக்காளரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியநோய், மருத்துவ தேவை ஆகிய காரணங்களுக்காகவும் பணத்தை எடுக்க முடியும்.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. முதலீடு மட்டுமல்லாமல் முதிர்வுத் தொகைக்கும் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in