

குவிக் மற்றும் குவாக் என்கிற வாத்துகள் தம்அம்மாவுடன் வாழ்ந்தன. இரண்டும் தைரியமானவை. விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். உண்மையிலேயே ஒன்றை மிஞ்சி மற்றொன்று மிக வேகமாக ஓடக் கூடியவை. இரண்டும், எல்லா இடங்களிலும் போட்டி வைத்து ஓடி உள்ளன. ஒருநாள், ஆற்றுக்கு மறு கரையில் உள்ள மாமா டக்ளசைப் பார்க்கச் சென்றன. திரும்பி வருகையில், “கடைசியாக வீட்டுக்குப் போகிறவர் முட்டாள்” என குவாக் கத்தியது. எனவே, இரண்டும் மிக வேகமாக நீந்தத் தொடங்கின.
இரண்டுக்குமே நன்றாக வழி தெரியும். ஆனால், குவாக் சிறிது நேரம் செலவழித்து ஒரு தந்திரத்தை உருவாக்கியது. ஆற்றுக்கு நடுவில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், அது தனக்கு சாதகமாக இருக்கும் என்று யோசித்தது.
“ஆற்றுக்கு நடுவில் ஒருபோதும் நீந்தக் கூடாது” என்று அம்மா வாத்து ஏற்கெனவே சொல்லியிருந்தது. இருப்பினும், குவாக் ஆற்றின் நடுப்பகுதியை நோக்கி நீந்த ஆரம்பித்தது. “இங்கே நீந்தும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. குயிக்கைவிட மிக வேகமாகச் சென்றது. இரண்டுக்கும் இடையே அதிக இடைவெளி உருவானது.
இப்போது, குயிக் வருந்தியது. அது ஒருபோதும் அம்மா பேச்சுக்கு கீழ்ப்படியாமல் இருந்ததே இல்லை. ஆனால், அதனுடைய கீழ்படிதலினாலேயே இப்போது போட்டியில் தோற்கப் போகிறது. இரண்டும் நீந்திக் கொண்டிருந்தபோது அலையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தனக்கு நேரே மிகப் பெரிய சுழல் இருப்பதை குவாக் கவனிக்கவில்லை. வெற்றிகரமாக எல்லைக் கோட்டைக் கடந்த பிறகுதான் கவனித்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் சுழலில் சிக்கியது. தப்பிக்க முடியவில்லை.
அருகில் சென்று காப்பாற்றுவதும் எளிதல்ல. ஏனென்றால், அந்த நீரில் நீந்தும் அளவுக்கு பலசாலியான வாத்து எதுவுமே இல்லை. குவாக் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தது. அதன் தலை தண்ணீருக்குள் சுழன்று சுழன்று எழுந்தாலும், எந்த பயனும் இல்லை.
அதிர்ஷ்டவசமாக பக்கத்து தோட்டத்தில் உள்ள பசுமாடு அந்தப் பக்கமாக வந்தது. வாத்து கால்களை அடித்துக் கொண்டு போராடுவதைப் பார்த்தது. ஆற்றில் உள்ள எல்லா தண்ணீரையும் வாத்து குடிப்பதைத் தடுத்து காப்பாற்றியது. கரைக்கு வந்த பிறகும், சிறிது நேரம் குவாக்குக்கு தலை சுற்றியது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வெவ்வேறு மற்ற விலங்குகளுக்கு இக்காட்சி நன்கு சிரிப்பை வரவழைத்தது.
இந்நேரம், தொடக்கத்தில் கஷ்டமாக தெரிந்தாலும், அம்மா சொன்னதைக் கேட்டதுதான் சரி என்று குயிக் புரிந்து கொண்டது. குவாக்கைப் பொறுத்தவரையில், என்னதான் மறக்க நினைத்தாலும், இந்த அனுபவத்தை அது ஒருபோதும் மறக்காது. அன்றிலிருந்து, குவாக் எப்போதெல்லாம் தண்ணீர் துளியைத் தொட்டதோ அப்போதெல்லாம் தரையில் விழுந்தது. தரையில் மூன்றுமுறை சுற்றிச் சுழன்ற பிறகுதான், மறுபடியும் அதனால் எழுந்திரிக்கவே முடிந்தது. மழைக் காலத்தில் இது இன்னும் வேடிக்கையாக இருந்தது. - தமிழில்: சூ.ம.ஜெயசீலன், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com