

திறந்தவெளி ஆன்லைன் கற்றல் முறை மூக் (Massive Online Open Courses) என்று அழைக்கப்படுகிறது. வருங்காலத்தில் நீங்கள் எவ்வளவு படித்தாலும், காலத்திற்கேற்ப மாறும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சுவாசிப்பதைப் போல கற்றலும் அத்தியவசியமானதாகிவிடும்.
சரி கற்றல் என்றால், ஒரு கல்வி நிறுவனத்தில் நிறைய பணம் கொடுத்து சேர்ந்து கற்க வேண்டும் என்றில்லை. இன்று உலகில் இருக்கும் தலைசிறந்த பல்கலைகழகங்களில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடம், மிக எளிதாக ஆன்லைனில் அதுவும் இலவசமாக கிடைக்கிறது.
நீங்கள் எதை கற்க வேண்டும் என்று முடிவு செய்தால் போதும். முதல் கற்றல் யூடியூபில் தொடங்குகிறது. இன்று ஆங்கிலத்திலும், தமிழிலும், மிக எளிதாக கற்றுக்கொடுக்கும் வலையொளி காட்சிகள் அதிகமாகிவிட்டன. எல்லாம் இலவசம்தான்.
ஆனால், ‘மூக்’ என்பது கொஞ்சம் வித்தியாசமானது, சர்டிபிகெட் அல்லது டிப்ளமாகோர்ஸ்கள் இருக்கும். செயலிகளாகவும் கிடைக்கிறது. உங்கள் மின்னஞ்சல் கொடுத்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான், ஆயிரக்கணக்கான கோர்ஸ்கள் உங்கள் விரல் நுனியில்.உங்களுக்குத் தேவையான கோர்ஸை தேர்ந்தெடுத்து உடனே கற்க ஆரம்பிக்கலாம். ஒரு படம் பார்க்கும், நேரம் அல்லதுநண்பர்களுடன் ஒரு கேம் விளையாடும் நேரம் போதும். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு திறனை நீங்கள் கற்றுக்கொண்டுவிடலாம்.
www.EDX.com, www.coursera.com, www.udemy.com போன்ற வலைத்தளங்களில் நொடியில் உள்ளே நுழைந்து இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம். வருங்காலம் என்பதுசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மெஷின் லேர்னிங் (Machine Learning) என்று சொல்லப்படுகிறது. ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் இந்த பல்கலைக்கழகங்களில் இருந்து கூட இந்த தொழில்நுட்பத்தை இலவசமாக கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
‘மூக்’ எனப்படும் ஆன்லைன் கல்வி வருங்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. இது கல்வியை அனைவருக்குமானதாக மாற்றிவிட்டது. ஏழையும், பணக்காரனும் தங்கள் திறனை மிக எளிதாக வளர்த்துக் கொள்ளலாம்.
மறுபக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் டிக்டாக் மாதிரியான வீடியோ தளங்களை பயன்படுத்தி வரலாறு, அறிவியல் போன்றவற்றை மிக சுவாரஸ்யமாக சிறு வீடியோக்களாக பகிர்கிறார்கள். ஒருநகைச்சுவை காட்சிக்கு உதட்டை அசைப்பதை விட இது மிக உத்தமமான காரியம். மாணவர்கள் இணைந்து வரலாறு பாடத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டதாக பல பத்திரிகைகள் புகழ்ந்தன. நம் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பட்டை தீட்டப் பயன்படுத்த வேண்டியது நமது கடமை. (தொடர்ந்து பேசுவோம்) - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com