

ஒரு மனிதன் மூக்கு சப்பையாகி, இமைகள் மூட முடியாமல் போய், புருவ முடிகள் இல்லாமல், பெருத்த காதுகளுடன், கைகால் விரல்கள் மடங்கி, உருவத்தால் சுருங்கி உங்கள் முன்னே தோன்றினால் என்ன செய்வீர்கள்? பயந்து ஒதுங்கி விடுவீர்கள் தானே? அதுவே உங்கள் அப்பா, அம்மாவாகவோ, மனதுக்குப் பிடித்த தோழனாகவோ இருந்தால்?
பாவச்செயல்கள் புரிந்தவர்களுக்கான தண்டனை என்றும், கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்றும் நம்பப்பட்ட தொழுநோயாளிகளை, உலகமே தள்ளிவைத்ததுடன் இவர்களது வாழ்வையும் சிதைத்து வந்தது.
அதனால்தான், "இன்றைய மிகப்பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல...அந்த நோயாளர்களை வெறுத்து ஒதுக்கும் நோய் தான்..." என்று கூறிய அன்னை தெரசாதனது வாழ்நாள் முழுவதையும் அவர்கள் நலனுக்காவே செலவழித்தார். "குஷ்டரோகி என்ற வார்த்தையே கொடூரமாக இருக்கிறது" என்று வருந்தினார் மகாத்மா காந்தி.
தொழுநோயைப் பற்றிப் பேசும்போது இவர்கள் எல்லோரையும் பற்றிப் பேசுவது போலவே, நாம் பேச வேண்டிய இன்னொருவரும் இருக்கிறார். அவர்தான் டாக்டர் நோஷிர் ஹோர்மாஸ்ஜி அன்சியா எனும் என்.ஹெச். அன்சியா.
பாவப்பட்ட தங்கை: கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி மாவட்டத்தில், மெர்வன்ஜி மற்றும் சூனாமாய் எனும் பார்சி தம்பதியினருக்கு, 1922-ல்பிப்ரவரி 8-ம் தேதி பிறந்தவர் இந்த அன்சியா. நடுத்த குடும்ப வாழ்க்கை நடத்திய அன்சியாவின் தாய் தனது மகன் பொறியியல் கல்வியில் தேற வேண்டும் என கனவு கண்டார். காரணம், சிறப்பாக கல்வி பயின்றால் பரோடா மன்னர் சாயாஜி ராவிடம் அரசு வனத்துறையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் தனது தந்தையைப் போலவே தனது மகனும் ஒரு அரசு வேலையைப் பெறுவதுடன், தனது இன்னொரு மனநலம் குன்றிய மகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்பினார்.
தாயின் விருப்பப்படி ஹூப்ளி மற்றும் பெல்காமில் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கிய அன்சியா, வியாபார நிமித்தமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தனது குடும்பம் குடிபெயர்ந்தபோது இடைநிலைக் கல்வியை புனேவில் மேற்கொண்டார். சகோதரி மீது மிகுந்த பாசத்துடன் இருந்த அன்சியா. ஆனால், தீ விபத்தில் சிக்கி தங்கை உருவம் சிதைந்து இறந்தபோது தாய் அடைந்த துயரம் அவரது மனதில் நீங்கா வடுவானது.
பிறகு, தனது விருப்பத்தின்படியே மருத்துவப் படிப்பை மும்பையின் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்ட அன்சியா, இரண்டாம் ஆண்டு பயிலும்போது கல்வியைத் தியாகம் செய்து நாட்டுக்காக இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்ள விரும்பினார். ஆனால், அவரது பேராசிரியர் அதற்கு கண்டிப்புடன் எதிர்ப்பு தெரிவிக்க, வருத்தத்துடன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்ர்து 1945-ல் மருத்துவரானதும் முதலில் தேர்ந்தெடுத்தது ராணுவப் பணியை.
ராணுவத்தில் அவர் பணிபுரிந்த இரண்டாண்டு காலமும் இந்திய பிரிட்டிஷ் ராணுவம் நமது விடுதலைப் போராட்ட வீரர்களைத் துன்புறுத்துவதை கண்ட அன்சியா, அது தனக்கான இடமல்ல என்பதை உணர்ந்து வெளியேறினார்.
ஏழைகளின் மருத்துவர்: 1947-ல், நாடு விடுதலை அடைந்தவுடன், கடனுதவி பெற்று மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார் டாக்டர் என்.ஹெச். அன்சியா. சவால்களும் சோதனைகளும் மிகுந்த அந்த ஒன்பது ஆண்டுகளும் அங்கேபணிபுரிந்தபடி மருத்துவமும் பயின்ற அன்சியா, சர் ஹெரால்ட் கில்லிஸ் அவர்களைச் சந்தித்தபோது தனது வாழ்க்கையின் குறிக்கோளை எட்டிவிட்டதாகவே உணர்ந்தார்.
இன்றைய நவீன சீரமைப்பு சிகிச்சையின் தந்தை (Father of Plastic Surgery) என்று அழைக்கப்பட்ட கில்லிஸ், இரண்டாம் உலகப் போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களுக்கு சீரமைப்பு சிகிச்சை அளித்தவர் என்பதுடன், பல புதிய அறுவை சிகிச்சை முறைகளையும் தொடங்கியவராவார். அவரிடம் சேர்ந்து அவரது நல்மதிப்பையும் பெற்ற டாக்டர் அன்சியா அவரிடம் அனைத்து சீரமைப்பு சிகிச்சைகளையும் கற்றுக் கொண்டார். அதேசமயம் தீக்காயங்களால் சிதைந்து இறந்த தனது சகோதரியின் நினைவாக, பேராசிரியர் ஏ.பி.வாலஸிடம் தீக்காயங்களில் சிறப்பு சிகிச்சையையும் கற்றுத் தேர்ந்தார்.
மேற்படிப்பு முடித்து, 1956 ஆம் ஆண்டு, நாடு திரும்பிய அன்சியா, புனேயின் ஜஹாங்கிர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரியத் தொடங்கினார். வறுமையில் வாடுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்து வந்த அந்த மருத்துவமனையில்தான், உலகில் வறுமை மீதான தனது பார்வை முற்றிலும் மாறியதை உணர்ந்தார்.
இதேசமயம், 1957-ல், மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி ஆசிரியையான ஆர்னியைத் திருமணம் புரிந்து, இரு குழந்தைகளுடன் வாழ்ந்து, தனது தனிவாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த போதிலும், மக்களின் வறுமை அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது.(மகிமை தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com