

ஆமா, நீங்க ஏன் உங்க பள்ளியில ஒரு சிறார் பத்திரிகை தொடங்கக் கூடாது? இதோ இந்து தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழ் வருகிறதல்லவா அதேபோல ஒன்றினை ஏன் முயலக் கூடாது? உங்களுடைய படைப்பாற்றலையும் ஒருங்கிணைப்பு திறனையும் சிறப்பாக வெளிக்கொண்டு வரும். சிறார் இதழா நாங்க எங்கிருந்து ஆரம்பிக்கிறது? அவ்ளோ நேரம் எங்களுக்கு இருக்குமா? எங்களால அச்சிட முடியுமா? அந்த கவலையெல்லாம் வேண்டாம்.
முதல்ல, ஒரு ஆசிரியர் குழுவைப்போடுங்க. இவங்கதான் இந்த ஒட்டுமொத்தச் செயல்பாட்டினையும் ஒருங்கிணைப்பார்கள். இந்த குழு கூடி, எந்த மாதிரியான இதழ், எவ்வளவு பக்கங்கள், கையெழுத்துப் பிரதியா? டைப்செட் கொடுத்து எடுத்து வரலாமா? செலவு என்ன ஆகும்? ஆசிரியர்கள் உதவி எங்கு எங்கு தேவையென்று பட்டியலிடுங்கள். இந்த பயிற்சியே செம அனுபவமாக இருக்கும்.
என்னென்ன இதழில் இருக்கலாம்
-பள்ளி மாணவர்களின் கதை, கவிதை, கட்டுரைகள்
-ஆசிரியர்களிடம் சில படைப்புகள்
-தேர்ந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் சில
-சினிமா பார்த்த அனுபவம்
-உள்ளூர் செய்திகள். உள்ளூரில் நடந்த மாற்றங்கள்
-பள்ளிக்குள் நடந்த இனிமையான சம்பவங்கள்
-மாணவர்கள் சென்று வந்த பயண அனுபவங்கள், கல்விச்சுற்றுலாக்களின் அனுபவங்கள், போட்டிகளுக்கு சென்று வந்த அனுபவங்கள்
-குழந்தைகளின் எதிர்கால கனவு
-இன்னும் புதிய வடிவங்களில் படைப்புகளைக் கேட்கலாம்.
ஆரம்பத்தில் படைப்புகள் குறைவாக வரலாம், சோர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து விடாப்பிடியாக முயன்றால் வெற்றி நிச்சயம். சரி வந்த படைப்புகளை என்ன செய்ய? எடிட் செய்ய வேண்டும். இந்த வரியை மாற்றலாம், இந்த வரியை சேர்க்கலாம், இந்த பகுதியை இன்னும் நீட்டி எழுதலாம் எனப் படைப்புகள் கொடுத்தவர்களிடம் ஆசிரியர் குழு பேச வேண்டும். உங்களுக்கு வழிகாட்ட பள்ளியில் இருக்கும் விருப்பமான ஆசிரியரிடம் கோரிக்கை வைக்கவும். பள்ளி நூலகம் அல்லது உள்ளூர் நூலகத்தினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அங்கிருக்கும் புத்தகங்களை வாசித்த அனுபவங்கள், படித்த புத்தகங்களில் இருக்கும் முக்கிய குறிப்புகள் ஆகியவற்றினை இதழில் சேர்க்கலாம்.
எல்லாம் சரி, இதழுக்கான பெயர்? அதனையும் ஆசிரியர் குழு தீர்மானிக்கலாம். அல்லது 3-4 பெயர்களில் எதை வைக்கலாம் என்ற குழப்பம் வந்தால் பள்ளியில் இருக்கும் மாணவர்களை அழைத்து ஓட்டெடுப்பு நடத்தலாம். அல்லது காலையில் கூடுகை நடக்கும்போது ஐந்து நிமிடத்தில் கைதூக்கச்சொல்லி ஜனநாயக முறைப்படி பெயரைத் தேர்வு செய்யலாம். அப்படி செய்யும்போது இது நம்ம இதழ் என்றும் மாணவர்களுக்கு ஒரு நெருக்கம் வந்துவிடும்.
அடுத்து? கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சு இதழாக (10-12 பக்கங்கள்) – மொத்தம் 5-10 பிரதி எடுத்தால் போதும். அதனைப் பள்ளி நூலகத்தில் இரண்டு பிரதி, தலைமை ஆசிரியர் அறையில் ஒரு பிரதி, பக்கத்தில் பள்ளிகள் இருந்தால் அவர்களுக்கு ஒரு பிரதி, ஊர் நூலகத்தில் ஒரு பிரதி என முக்கியமாக நினைக்கும் இடங்களில் இடம் பெறச்செய்யலாம்.
இது கோடு மட்டுமே, மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து இதனை வடிவமைக்க நினைத்தால் இன்னும் இன்னும் அதிசயங்கள் நிறைய நடக்கும். தொடர்ச்சியாக இயங்கினால் மொழி ஆளுமை, புத்தக வாசிப்பு, ஒருங்கிணைப்பு, திட்டமிடல் என பல்வேறு கூறுகளில் குழந்தைகள் வலுப்பெறுவார்கள். செய்து பார்த்திடுவோமா? - கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர்
தொடர்புக்கு: umanaths@gmail.com