

கடந்த அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம். எல்லா பண்டிகையிலுமே கணிதம் கலந்திருக்கு. நம்ம தீபாவளியிலும் ஏராளமான கணக்கு உள்ள இருக்கு. கணக்கு என்றால் எண்களும் சூத்திரங்களும் மட்டுமல்ல. வடிவங்கள், கோணங்கள், ஒத்ததன்மை (symmetry) இன்னும் ஏராளமானவை கணிதத்தின் கீழ் வரும்.
பூமியின் அளவினைவிட அகண்டது. தீபாவளியை இந்தியா முழுக்க வேறு வேறு விதமாக கொண்டாடுகின்றார்கள். தீபாவளி என்றால் உடனே பளிச்சென்று என்னென்ன நினைவுக்கு வரும் – பட்டாசு, பலகாரம், கோலம், புதுத்துணி. இதில் எல்லாவற்றிலுமே கணிதம் ஒளிந்துகொண்டு இருக்கிறது.
பட்டாசு: நிறைய பட்டாசுகளை வெடித்து இருப்பீங்க. பட்டாசுகள் சீனாவில் இருந்து உலகம் முழுக்க சென்றதாக வரலாறு. இந்தியாவில் பட்டாசுகளின் தலைநகரம் தமிழகத்தில் உள்ள சிவகாசி. பட்டாசுகள் (பிஜிலி, லட்சுமி வெடி, சரம், பென்சில், பாம்பு மாத்திரை) எல்லாமே ஒரே வடிவத்தில்தான் இருக்கும். எல்லாமே உருளை (Cylindrical) வடிவத்தில் இருக்கும். ஏன்? ஒரு பென்சில் ஏன் முக்கோணத்தில் இருக்கக்கூடாது? லட்சுமிவெடி ஏன் வட்டமா இருக்கக்கூடாது? கேள்வி எழுவது நியாயமே.
யோசித்து பாருங்கள், எல்லா பட்டாசுகளிலும் பட்டாசு மருந்து (Gun Powder) மத்தியில் வைத்து ஒரு திரியை வைத்திருப்பார்கள். அதனைச் செவ்வக வடிவில் இருக்கும் தாள்களின் நடுவே வைத்துச் சுருட்டி இருப்பார்கள். மேலேயும் கீழேயும் பசைபோட்டு மூடி இருப்பார்கள். வேறு எந்த வடிவத்திலும் சுருட்ட முடியாது. மாப்பிள்ளை வெடி என்று ஒன்று வரும், அதன் வடிவம் முக்கோணத்தில் இருக்கும். மற்ற பட்டாசுகளைவிட இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருக்கும், காரணம் இதனைச் செய்வது அதிகமான வேலையைக் கொடுக்கும்.
ராக்கெட் ராஜா: கீழிருந்து விடப்படும் ராக்கெட்டின் வீச்சுப்பாதையை (Trajectory) 100 சதவீதம் நாம்தீர்மானிக்கவே முடியாது. அது தான் தோன்றித் தனமாக செல்லாது. சில அளவுருக்களால் அதனை ஓரளவு தீர்மானிக்கலாம். ஒன்று ராக்கெட்டிற்கு கீழிருக்கும் குச்சி. அடுத்ததாக ராக்கெட்டின் மேற்பகுதி. எப்போதும் ராக்கெட்டின் மேற்பகுதி கூம்பு வடிவில் இருக்கும்.
மிக முக்கியமாக அது நேர்வட்ட கூம்பாக இருக்க வேண்டும், சாய் வட்டக் கூம்பாக இருந்தால் அது ஒரு பக்கமாக பற்றிக்கொண்டு செல்லும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோன் ஐஸ்கிரீம் நேர்வட்ட கூம்புக்கான நல்ல உதாரணம். கூம்பின் உச்சி கூர்மையாக இருக்க வேண்டும், மழுங்கி இருந்தால் வெகுதூரத்திற்கு ராக்கெட் போகாது.
மூன்றாவதாக ராக்கெட்டினை எதில், எவ்வளவு சாய்வாக வைத்து செலுத்துகின்றோம் என்பது. பாட்டிலில் மணல் நிரப்பி அதில் ராக்கெட்டின் குச்சி பகுதியைச் சொருகி திரியில் நெருப்பு வைப்பார்கள். கடைசியாக மிக முக்கியமாக உள்ளே வைக்கப்படும் வெடிபொருளின் அளவு. (அளவு கணக்கில்தானே வரும்). சர்ர்ர்... என்று மேலே போய் டமார் என்று அழகாக வெடிக்கும். மேலே சொன்னவற்றில் ஏதேணும் ஒன்று சரியாக இல்லையெனில் பாதை கோணல்மாணலாக சென்று வேண்டாத விளைவுகளைக் கொடுக்கும்.
நிறங்களுக்கு என்ன காரணம்? - எல்லா பட்டாசுகளில் இருந்தும் ஒலியும் வரும் ஒளியும் வரும். ஒலியின் அளவை வெடிபொருட்களின் தன்மை தீர்மானிக்கும். அதே போல பல வண்ணங்களில் வெடிக்கும் பட்டாசுகளிலும் வேதிப்பொருட்களின் கலவை தீர்மானிக்கும். ஆரஞ்சு நிறத்திற்கு கால்சியம், வெள்ளை நிறத்திற்கு மெக்னீசியம், சிவப்பு நிறத்திற்கு ஸ்டிராண்டியம், நீல நிறத்திற்கு செம்பு, மஞ்சள் நிறத்திற்கு சோடியம் என ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு வேதிப்பொருள் தேவை. அந்த அளவு பொறுத்து வண்ணமும் வெளிப்படும். கணக்கு இன்றி தீபாவளி இல்லை. மகிழ்வாக கொண்டாடுவோம், அதே சமயம் பாதுகாப்பாகவும் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம். - (தொடரும்) கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள், தொடர்புக்கு: umanaths@gmail.com