

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வர ஆரம்பித்தார். யகில் பற்றிய கதை சொன்னார். மிட்டாய் கொடுத்தார். தாத்தாவையே கலைமதி பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி, வாங்கியவர்களுக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தானும் பெற விரும்பினாள்.
தான் அடிக்கடி பயன்படுத்தாத ஆடைகளைத் தனிதனிப் பைகளில் வைத்தாள். அம்மா-அப்பாவிடம் அனுமதி வாங்கினாள். அம்மாவைக் அழைத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் நடந்தாள். சாலை யில் ஆங்காங்கே படுத்திருந்த சிலரிடம் ஆளுக்கொரு பையைக் கொடுத்தாள். பையைப் பிரித்தவர்கள் குழப்பத்துடன் பார்த்தார்கள். “உங்க பிள்ளைகளுக்கு கொடுங்க” என்றுகலைமதி சொன்னதும், வெண்ணில வாக சிரித்தார்கள். கலைமதி மகிழ்ந்து கை தட்டினாள்.
குடும்பத்தினரின் இரக்கம்: 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் யகில் நயீம் பிறந்தான். நயீம் என்றால் பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்வது என்பது பொருள். தனக்கு இருப்பதுபோலவே எல்லாருக்கும் வீடுகள் இருக்கும் என்று யகில் நினைத்திருந்தான். சிகாகோவில் வீடற்று இருப்பவர்களுக்கு உதவி செய்யச் சென்ற அத்தையுடன்யகில் சென்றபோதுதான், வீடு இல்லாமல் பலரும் துன்புறுவதை அறிந்தான்.
அப்போது அவனுக்கு 5 வயது. வீட்டுக்கு வந்ததும், “அம்மா எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுப்போமா?” என்று கேட்டான். நிச்சயம் முடியாதுதான். ஆனாலும் தன்னால் இயன்றதைச் செய்யலாமே என்று யோசித்தான். வசதி வாய்ப்புமறுக்கப்பட்டவர்களுக்காக, தன் குடும் பத்தினரின் வழிகாட்டுதலுடனும், ஆதரவுடனும் 8 வயதில் ‘Project I am’ என்னும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினான்.
வீதியில் தங்கியிருப்பவர்கள் சுகாதாரமாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படை பொருட்களை வாங்கிக் கொடுப்பது இந்த அமைப்பின் முதல் நோக்கம். பற்பசை, முகம் துடைக்கக் காகிதங்கள், கை சுத்தம் செய்ய கிருமி நாசினி, காலுறை, தண்ணீர் போத்தல் உள்ளிட்ட 8 பொருட்களை ஒவ்வொரு பையிலும் வைத்து வீடற்றவர்களைத் தேடிச் சென்று கொடுத்தான்.
அந்த பையை ‘Blessing Bags’ என்று அழைத்தான். இரண் டாவது, வீடற்றவர்களின் துயரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடற்றவர்களும் மனிதர்கள்தான் என்பதை மற்றவர்களும் உணரும்படிச் செய்ய வேண்டும்.
கனவுக்கு ஆதரவு: 9 வயதில், 1000 பைகள் கொடுக்கத் திட்டமிட்டான். அவனால் 1627பைகள் கொடுக்க முடிந்தது. தொடர்ந்து, பலரும் பொருளாகவே வாங்கிக் கொடுத்தார்கள். சிலர், Project I am இணையதளம் வழியாக நிதி உதவி அனுப்பினார்கள். 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
2017-ல் “சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் முக்கியமான நபர்களில் ஒருவர்” என யகிலைப் பாராட்டி அப்போதைய அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா ட்வீட் செய்தார். யகிலுடன் இணைந்து விருந்துண்டு பாராட்டினார். “சமூகத்தில் உயரிய இடத்தில் இருக்கும் ஒருவர் நம் பெயரை தெரிந்து வைத்திருப்பதும் நம்மை ஊக்கப்படுத்துவதும் இன்னும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்று” என்றார் யகில்.
நயீம் இதுவரை, 2 லட்சம்அமெரிக்க டாலர் சேகரித்துள்ளார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர் களுக்கு உதவி செய்துள்ளார். சிகாகோவில் மட்டுமல்ல மற்ற மாகாணங்களிலும் உதவியுள்ளார். கானா, சுவாசிலாண்ட் உள்ளிட்ட நாடுகளில் ஆதரவற்றவர்களுக்கும், எரிமலை விபத்தால் குவாதமாலாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆதரவற்றவர்களது முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பதன் வழியாக தானும் மகிழ்கிறார்.
சமூக மாற்றத்துக்கு உழைக்க விரும்பும் தன் வயதொத்த மாணவர்களுக்கு, “(1) எதில் உங்களுக்குப் பேரார்வம் இருக்கிறது, என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த விரும்புகிறீர் கள், அதை எப்படி நிறைவேற்றலாம் என்பதைக் கண்டுபிடியுங்கள். (2) உங்கள் இலக்கு யார் என்பதைத் தீர்மானியுங்கள் (3) சிறிய அளவில் தொடங்குங்கள் (4) உங்களுக்கென இணையதளம் உருவாக்குங்கள். அதன் வழியாக உங்கள் கனவை, பணியை மற்றவர்கள் அறிவார்கள். உங்களுடன் ஒன்றிணைவார்கள் (5) கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருங்கள்” என்கிறார். - கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். தொடர்பு: sumajeyaseelan@gmail.com