

விலங்குகள் பிறந்த உடனே எழுந்து நடக்கின் றன. மனிதனால் அது முடியவில்லையே ஏன், டிங்கு?
– மகாசக்தி, 9-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி, திருநெல்வேலி.
நல்ல கேள்வி. கடற்கரையில் ஆமையின் முட்டையிலிருந்து வெளி வரும் குஞ்சுகள் யார் உதவியும் இன்றி, கடலை நோக்கிச் சென்றுவிடுகின்றன. மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் பிறந்த உடனே எழுந்து நின்று விடுகின்றன. ஒரு மணி நேரத்தில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன.
ஆனால், மனிதக் குழந்தை பிறந்து எழுந்து நடக்க ஓர் ஆண்டை எடுத்துக்கொள்கிறது. நன்றாகப் பேசுவதற்கும் தானாகச் சாப்பிடுவதற்கும் அடுத்த ஓராண்டு காலம் தேவைப்படுகிறது. இதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சி. ஒரு குழந்தை உருவாகி 18 முதல் 21 மாதங்களுக்குப் பிறகே நிற்க முடிகிறது.
ஆனால், 9 மாதங்களே வயிற்றுக்குள் இருக்கிறது. மீதி வளர்ச்சிக்கான காலத்தைப் பிறந்த பிறகு எடுத்துக்கொண்டு படிப்படியாக வளர்கிறது. விலங்குகளின் கர்ப்ப காலம் அதிகம் என்பதாலும் பிறந்த பிறகு அவை தாமாகவே வளர வேண்டிய சூழல் இருப்பதாலும் முழுமையாக வளர்ந்தே பிறக்கின்றன.
மனிதர்களின் கர்ப்ப காலம் 9 மாதங்கள் என்பதால், வெளியே வந்த பிறகு மீதி வளர்ச்சி நடைபெறுகிறது. விலங்குகளைப் போல் மனித உடல் 21 மாதம் வரை வயிற்றுக்குள் குழந்தையைச் சுமக்கும் அளவுக்கு தகவமைப்பைப் பெற்றிருக்கவில்லை, மகா சக்தி.