

இயற்கை எத்தனை அழகானது! இயற்கையின் அத்தனை அழகும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடந்தால் அதுதான் இமய நதிக்கரை. காண்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையில் உற்பத்தியாகி, சம வெளியில் பாய்ந்து வளமூட்டுகின்றன இமய நதிகள்.
இவற்றில் உலகம் அறிந்த இமய நதி ஒன்று உண்டு. அதுதான் கங்கை நதி. வேற என்ன பெயர்கள் அடுத்தபடியாக தெரியும்? சிந்து, பிரம்மபுத்ரா. ஆனாலும் இவை மட்டுமல்ல இமய நதிகள். யாங்சே, சல்வீன், மீகாங், தரீம் இப்படி பல. இன்னும் எத்தனை உள்ளன? கண்டுபிடியுங்கள்.
இமயமலையின் உயர்ந்த பாகங்களில் பொழியும் பனி உறைந்து, பிறகு கோடையில் உருகி, இமய நதிகளுக்கு நிரந்தரமாய் தண்ணீர் தருகிறது. இமய நதிகளை மேற்கு, கிழக்கு நதிகள் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
ஐந்து சகோதரிகள்: சிந்து நதி திபெத் மானசரோவர் ஏரிக்கு அருகே தோன்றி, மேற்கு திசையில் பாய்ந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லெஜ் அகிய ஐந்து ஆறுகளை (‘ஐந்து சகோதரிகள்’) தன்னுள் கொண்டு, தென் மேற்கு திசையில் பாய்ந்து, சுமார் 3100 கி.மீ. கடந்து, பாகிஸ்தான், கராச்சி நகர் அருகே அரபிக் கடலில் கலக்கிறது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகள் கிழக்கு நோக்கிப் பயணித்து வங்கக் கடலில் கலக்கின்றன.
திபெத், கைலாச மலை, மானசரோவர் அருகே, செமாயுங்டுங் (Chemayungdung) பனிப்பாறையில் தோன்றும் பிரம்மபுத்ரா, அருணாசலப் பிரதேசம், அசாம் மாநிலங்களைக் கடந்து வங்க தேசத்தில் நுழைந்து, வங்கக் கடலில் கலக்கிறது.
கங்கை நதி, இமயமலையின் மேற்குப் பகுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேவப்ரயாக் எனும் இடத்தில் தோன்றி, 2700 கி.மீ பாய்ந்து, வழி எங்கும் வளமையை அள்ளித் தருகிறது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கங்கை நீரால் பயன் பெறுகின்றன. கடலுக்கு இணையாக கங்கை ஆற்றில் விதவிதமான மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
சிந்து சமவெளி காலத்து நதி: மீகாங், சல்வான், மஞ்சள் நதி, யாங்சே ஆகியன நேரடியாக இமயமலையில் உற்பத்தி ஆகவில்லை எனினும் புவியியல் வல்லுனர்கள் சிலர், இமயமலை சுற்று வட்டார நதிகளாக இவற்றைப் பட்டியல் இடுகின்றனர். ஆமா! இந்தப் பேரு கேள்விப்பட்டு இருக்கீங்களா... ‘கக்கர் – ஹாக்ரா’?
இல்லையா? இதனுடைய இன்னொரு பெயரைச் சொன்னால் சட்டெனத் தெரிந்துவிடும். சரஸ்வதி நதி.
வேத காலத்தில் இருந்ததாக, வேதங்களை மேற்கோள்காட்டிச் சொல்லப்படுகிற சரஸ்வதி நதி தற்போதுள்ள கக்கர் – ஹாக்ரா நதிதான் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பாயும் காக்கர் நதியின் நீட்சியே பாகிஸ்தான் நாட்டில் உள்ள வறண்ட ஆறான ஹாக்ரி ஆகும்.
சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல நகரங்கள் கக்கர் – ஹாக்ரா ஆறுகளை ஒட்டியே இருந்துள்ளன. இமய நதிகளில் பெருகி ஓடும் நீரால் இந்தியாவின் பலமாநிலங்களில் வேளாண்மை, விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்கள் பலசெழித்து வளர்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் இமய நதிகளின் பங்கு குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளுதல் நல்லது.
இங்கிருந்து நாம் வட கிழக்கே நகர்ந்து செல்வோமா?
இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பூகோள அடையாளம் வடகிழக்கு மாநிலங்கள்.
இந்த வாரக் கேள்வி:
கங்கை – காவிரி இணைப்பு: சாதக பாதகங்கள் என்னென்ன?
(வளரும்)
கட்டுரையாளர், கல்வி,வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com