

மத்திய அரசின் குடிமைப்பணி பெற சென்னை கால்நடை அரசு பல்கலைக்கழகம் களமாக உள்ளது. இதில் பயின்றதாலேயே இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) பெற்ற டாக்டர்.இரா.முருகன், திருநெல்வேலி மாவட்ட வன அதிகாரியாக (டிஎப்ஓ) உள்ளார்.
அதிகாரி முருகனுக்கு 2015-ல்மணமாகி மனைவியாக மருத்துவர் உமா, மகள் வைஷ்ணவி மற்றும் மகன் மாயன் காசி ஆகியோர் உள்ளனர். இவர், மதுரை கள்ளிக்குடி தாலுகாவின் வில்லூர் கிராமத்தை சேர்ந்தவர். பெற்றோர் தாய் இந்திராணி, தந்தை எஸ்.ராமசாமி. கிராம நிர்வாக அலுவலராக தந்தை பணியாற்றியதால் முருகன் சிறுவயதில் இருந்து அதற்கேற்ற மாதிரி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பள்ளி நாட்களில் பொறியாளர் அல்லது மருத்துவராகும் கனவுடன் வளர்ந்ததால் உயிரியல், கணிதம் பாடப்பிரிவில் முருகன் பிளஸ் 2 முடித்தார். அதனை அடுத்து சென்னையின் தமிழக அரசு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்று 2006-ல் பட்டம் பெற்றார்.
தந்தையும் பல்கலையும்: இப்பல்கலையின் மாணவர்களில் பலர் தொடர்ந்து மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். இந்த சூழல் அடுத்து வரும் ஜுனியர் மாணவர்கள் பலரும் அப்பதவி பெற தூண்டுகோலாகி உள்ளது.
அவ்வாறு ஊக்கம் பெற்றவர்களில் ஒருவர் முருகன். 2012-ல் இரண்டாவது முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வில் முருகன் வென்றுள்ளார். அதில் ஐஎப்எஸ் பெற்றவருக்கு தனது சொந்த மாநிலமான தமிழ்நாடு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இது குறித்து, திருநெல்வேலி டிஎப்ஓவான முருகன் கூறும்போது, “பள்ளி காலத்தில் எப்போதுமே இரண்டாம் ரேங்க் பெற்று சிறந்த மாணவனாக இருந்தேன். வகுப்பறையிலேயே பாடத்தை கூர்ந்து கவனிக்கும் வழக்கம் இருந்ததால் வீட்டிற்கு சென்ற பின்பு படிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
விளையாட்டு மைதானத்தில் அதிக நேரம் செலவிட்டாலும், தேர்விற்கு ஒருநாள் முன்பாக அதன் பாடங்களை முழுமையாக நினைவுகூர்வேன். இந்த பாங்கு எனக்கு உயர்கல்விக்குப் பிறகு திறனாய்வு தேர்வுகளிலும் உதவியது. சிறுவயது முதல் ஐஏஎஸ் ஆக வேண்டுமென அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். பின்னர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கவே ஐஎப்எஸ் ஆக முடிந்தது” எனத் தெரிவித்தார்.
மருத்துவப் பணி: பட்டப்படிப்பின்போது சக மாணவர்கள் பலருடன் சேர்ந்து முருகனும் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாரானார். இதனிடையே வேறுபல பணிகளை செய்தபடியும் குடிமைப்பணிக்காக முயன்றார். முதலாவதாக தாம்பரத்தில் உள்ள கால்நடை நல அறக்கட்டளையில் 8 மாதங்கள் பயிற்சி பெற்றவர், பிறகு மனிதநேயம் அறக்கட்டளையின் முதல் அணியில் குறுகியகால பயிற்சியும் பெற்றார். அப்போது, பிப்ரவரி 2008-ல் கேம்பஸ் நேர்முகத்தேர்வில் முருகனுக்கு ஐஓபி புதுக்கோட்டை கீரைமங்கலம் வங்கியில் உதவி மேலாளர் பணி கிடைத்தது.
இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபோது யூபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நேரமில்லை. இதன் காரணமாக வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி கால்நடை மருத்துவர் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு கால்நடைத் துறையில் 2010-ல் மருத்துவரானார்.
இதே வருடம் யூபிஎஸ்சியிலும் குடிமைப்பணி மற்றும் வனப் பணிகளுக்கு முதன்முறையாக முயன்றார் முருகன். இதில் 2010-ல் பிரிலிம்ஸ் மட்டுமே வெல்ல முடிந்தது. இதேபோல், 2011-ல் இரண்டாம் முயற்சியிலும் குடிமைப்பணியின் மெயின்ஸ் வெல்ல முடியாதவருக்கு ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி கிடைத்தது. மூன்றாவது முயற்சியிலும் குடிமைப்பணி கிடைக்காததால் அத்துடன் முடித்து 2012-ல் ஐஎப்எஸ் அதிகாரியானார் முருகன். இவற்றில் தனது விருப்பப் பாடங்களாக கால்நடை, உயிரியலை தேர்ந்தெடுக்கவே ஐஎப்எஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றார். இதன் நேர்முகத்தேர்வில் முருகனுக்கு தன் முதுநிலை பட்டத்தின் போது உயிரிதொழில்நுட்பம் பாடப்பிரிவில் பெற்ற தங்கப்பதக்கம் கூடுதல் பலன் அளித்தது.
அதிகாரிகள் அளித்த ஊக்கம்: இவற்றை நினைவுகூரும் விதமாக அதிகாரி முருகன் பேசுகையில், “உபியின் ஐவிஆர்ஐயில் படித்தவர்களில் குடிமைப்பணி பெற்றவர்கள் அதிகம். இதனால், நான் கால்நடை முதுநிலைக்காக அங்கு சேர்ந்து பயில அதிகம் விரும்பினேன். ஹரியானாவின் கர்நாலில் உள்ள தேசிய பால்வள ஆய்வு நிறுவனத்தில் (என்டிஆர்ஐ) வாய்ப்பு கிடைத்தும் நான் சேரவில்லை. கால்நடை பல்கலையில் ஆந்திராவின் இளம்பரிதி ஐஏஎஸ், உத்தரப்பிரதேசத்தின் செம்மாறன் ஐஎப்எஸ், அக்முட் பிரிவின் வித்யாசாகர் ஐஎப்எஸ் எனப் பலரும் என்னை இத்தேர்வு எழுத ஊக்குவித்தனர்.
குறிப்பாக எனது பேராசிரியர் கருணாகரன், 2004-ல் ஐபிஎஸ் பெற்று டெல்லியின் உயர்அதிகாரியாக மாறினார். இவரது வகுப்புகளும், பாடத்தேர்வின் கேள்விகளும் குடிமைப்பணி தேர்வின் வழிகாட்டியாக இருந்தன. நாம் படிக்கும் பாடங்களின் கேள்வியை எத்தனை வகையாக கேட்பார்கள் என அலசி ஆராய்ந்து படிக்கும் திறன் கருணாகரன் சாரிடமிருந்து வளர்ந்தது” என தெரிவித்தார்.
தமிழக அரசின் வனப் பணி அதிகாரியான முருகனுக்கு, பொள்ளாச்சியின் உதவி வனப் பாதுகாவலர் (தலைமையிடம்), திருச்சியின் மணப்பாறை வனச்சரகம் ஆகியவற்றில் பயிற்சி கிடைத்தன. முதல் பணியாக திருச்சி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் (தலைமையிடம்), பிறகு மாவட்ட வன அதிகாரியாக கொடைக்கானல், திருப்பத்தூர், சேலம் ஆகியவற்றில் பணியாற்றி தற்போது திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார். திருப்பத்தூர் பணியின்போது கைப்பற்றப்பட்ட செம்மரம் எனப்படும் சிவப்பு சந்தன மரக் கட்டைகளை இணையதளத்தில் ஏலம் விட்டுஏற்றுமதி செய்தது சாதனையாகக் கருதப்படுகிறது. இதுபோல், தமிழக அரசின் பணியில் மேலும் பல சாதனைகள் செய்ய ஆர்வமுடன் அதிகாரி முருகன் காத்திருக்கிறார். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in