

பீரியட்ஸ் நேரத்தில் கடுமையான மன உளைச்சல், கோபம், பதற்றம் போன்றவை தனது மகளுக்கு ஏற்படுவதாக ஒரு தாய் நம்மிடம் கடந்த வாரம் சொல்லி இருந்தார். அதற்கு தன்னுடைய மகளுக்கு உளவியல் ஆலோசனை அவசியமா என்றும் தயக்கத்துடன் கேட்டிருந்தார்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்புவரை மட்டுமே இது போன்ற உணர்வுகள் எழும் பிறகு சரியாகிவிடும் என்று கடந்த வாரம் தெளிவுபடுத்தி இருந்தோம். அதேநேரம் கிட்டத்தட்ட 5 சதவீத பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பான இந்த மன அழுத்தம் தீவிரமடைந்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் பிஎம்டிடியாக (Premenstrual Dysphoria Disorder) மாற்றமடையும் என்பது வருத்தம் தரும் விஷயமாகும்.
பிஎம்டிடியால் பாதிக்கப்படும் பெண்கள் படிக்கும் வயதினராக இருந்தால் அது அவர்களின் கற்கும் திறனைக் குறைப்பதுடன், பயம், கோபம், சோகம், பகையுணர்வு, வெறுப்பு, பொறாமை, எரிச்சல் போன்ற எதிர் உணர்வுகளைத் தூண்டிவிடும். சில சமயம் போதைப் பழக்கம், வன்முறை என்று தடம் மாற்றி சமயங்களில் தற்கொலை வரை கொண்டு செல்லலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதிலும் இவ்வாறு தவிக்கும் சிறுமிகளிடம் தென்படும் பிஎம்டிடியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து முறையாக குணப்படுத்தாவிட்டால், பின்னாளில் ‘பைபோலார்' மனநோய்க்கும் இது வித்தாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
அச்சம் தவிர்: பிரத்தியேக பரிசோதனைகள், தனிப்பட்ட சிகிச்சை முறைகள் என்று எதுவும் இல்லாத பிஎம்எஸ் மற்றும் பிஎம்டிடி என்ற இந்த இரு மனநிலைகள் இவ்வளவு பயமுறுத்தினாலும் பொதுவாக சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் இரவில் ஏழெட்டு மணிநேர நல் உறக்கம் ஆகியவற்றின் மூலமாகவே இவற்றை சரிசெய்து விட முடியும் என்பதுதான் இதிலுள்ள பெரிய ஆறுதல்.
சிறிய இடைவெளிகளில், அளவான உணவை உட்கொள்வது, அதிக நார்ச்சத்தும், அதிக நீர்த்தன்மையும் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கால்சியம், வைட்டமின்கள் பி, சி, ஈ நிறைந்த பழங்கள், காய்கறி, கீரை வகைகள், சிறு தானியங்கள், பயறு வகைகள், கடல் உணவுகள் ஆகியவற்றை உண்பது நன்மை பயக்கும். காஃபி, டீ போன்ற கேஃபீன் நிறைந்த பானங்கள், எண்ணெயில் பொறித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பதும் பிஎம்எஸ், பிஎம்டிடி வராமல் தவிர்க்க உதவுகிறது.
அத்துடன் தினசரி துரித நடை, உடற்பயிற்சி, யோகா, நீச்சல் அல்லது சைக்கிளிங் ஆகிய பயிற்சிகள் நல்ல உறக்கத்தைத் தருவதால் பிஎம்எஸின் அறிகுறிகளைக் குறைப்பதிலும் dysmenorrhea என்ற மாதவிடாய் வலியிலும் உதவுகிறது. ஆனால், இவை எதுவுமே உதவாதபோது மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் தேவைப்படலாம்.
இவை அத்தனைக்கும் மேலாக, பிஎம்எஸ் மற்றும் பிஎம்டிடி பாதிப்புகள் உள்ள பெண் கோபப்பட்டு நடக்கும் போது நாமும் பதிலுக்கு கோபப்படாமல் சுற்றியுள்ள மனிதர்கள் அவள்மீது அன்பும், அக்கறையும் காட்டுவதுதான் இன்றுவரை மிகச் சிறந்த மனவியல் மருந்தாகத் திகழ்கிறது. அதனால்தான், பிஎம்எஸ் மற்றும் பிஎம்டிடி பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை என்பதைவிட அவள் பெற்றோருக்கும், அவளது ஆசிரியர்களுக்கும் அவசியம் தேவை என்பது புரிகிறதல்லவா அனு அம்மா.
ஆம்! ஆன்ஆஃப் மூட்ஸ் இயல்பானவை,இயற்கையானவை. சிறிதளவிலான வாழ்க்கைமுறை மாற்றங்களும், உடனிருப்பவர்களின் அன்பும், அரவணைப்பும் இதனை ஒரு நோயாக மாற்றாமல் இருக்கும் என்பதுதான் நிதர்சனம். அது ‘ஆங்ரிபேர்ட்’ அனுவை அன்புடன் சிரிக்க வைக்கும். (ஆலோசனைகள் தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com