

நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளை வரவாகவும், பெண் குழந்தைகளை செலவாகவும் பார்க்கும் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. பெண் குழந்தைகளை வளர்ப்பதையும், படிக்க வைப்பதையும், திருமணம் செய்து வைப்பதையும் பாரமாக கருதும் அவலமும் நிலவுகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்ற அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தமிழில் ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்' என அழைக்கப்படும் இந்த திட்டம், ஏழை மகளையும் செல்வ மகளாக மாற்றும் அற்புதமான திட்டம் என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமண செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படுவதால், சேமிப்பு தொகை முதிர்வு காலத்தில் சுமார் மூன்று மடங்காக திரும்ப கிடைக்கும். இது மத்திய அரசின் நேரடி திட்டமாக இருப்பதால் முதலீட்டுக்கு முழு உத்தரவாதம் உண்டு.
இதில் சேமிக்கும் பணத்துக்கு வரி சலுகையும் வழங்கப்படுவதால், வருமான வரி செலுத்துவோருக்கு லாபகரமான திட்டமாக விளங்குகிறது. நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு வரை 1.42 கோடி செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகம் 26.03 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தொடங்கி தேசிய அளவில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.
அடிப்படை தகுதி: நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் இந்த திட்டம் அமலில் உள்ளது. 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். பெற்றோர் அல்லது சட்டப்படியான காப்பாளர் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். விதிவிலக்காக, இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள், முதல் பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களையும் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். கணக்காளர் 18 வயதை எட்டிய பிறகு சேமித்த தொகையில் பாதி எடுத்துக்கொள்ளலாம். 21 வயதை எட்டிய பின் கணக்கை முடிக்கும்போது செலுத்திய தொகை வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். இதில் சேருவதற்கு பெண் குழந்தையின் பிறப்புப் சான்றிதழ், பெற்றோர் / காப்பாளரின் புகைப்பட அடையாள ஆதாரம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் ஆகியவை தேவை.
எவ்வளவு சேமிக்கலாம்? - இதில் கணக்கை ஆரம்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ. 1.5 லட்சம் வரைமுதலீடு செய்யலாம். ஏழைகளும் பயன்பெறவேண்டும் என்பதற்காக குறைந்தபட்சமுதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூ.250க்குப் பின் ரூ.50-ன்மடங்குகளில் முதலீடு செய்யலாம். மாதத்துக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செலுத்தலாம். ஒரே நேரத்தில் மொத்த முதலீடாகவும் டெபாசிட் செய்யலாம். காசோலை, வரைவோலை, ஆன்லைன் மூலமாகவும் பணத்தை செலுத்தலாம். 2 ஆண்டுகள் டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு முடங்கிவிடும். பிறகு டெபாசிட் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தினால் கணக்கை புதுப்பிக்க முடியும்.
எவ்வளவு வட்டி விகிதம்? - இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது. பொருளாதார மந்த நிலை காரணமாக தற்போது ஆண்டுக்கு 7.6% ஆக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் சராசரி சில்லறை பணவீக்க விகிதம் 5% ஆக இருக்கிறது. இதன் வட்டி விகிதம் அதைவிட அதிகமாக இருப்பதால் முதலீட்டை பணவீக்க பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் சேமிக்கப்படும் தொகை வட்டி கணக்கிடப்பட்டு, கணக்கில் வரவு வைக்கப்படும்.
பாதியில் பணத்தை எடுக்க முடியுமா? - பெண் குழந்தை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைவதற்கு முன்பாகவும், 18 வயதுக்கு குறைவாக இருக்கும் போதும் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது. 18 வயதுக்கு பிறகு உயர்கல்வி செலவுக்காக 50% தொகையை எடுக்க முடியும். அதேபோல பெண்ணின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவோ, திருமணத்துக்கு மூன்று மாதத்துக்குப் பிறகோ பணத்தை எடுக்கலாம்.
இதனிடையே கணக்காளருக்கு மரணம் ஏற்பட்டால், பெற்றோர் / காப்பாளர் இடையில் பணத்தை எடுக்கலாம். கணக்காளரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய், மருத்துவ தேவை ஆகிய காரணங்களுக்காக 5 ஆண்டுக்குப் பிறகு எடுக்க முடியும்.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. முதலீடு மட்டுமல்லாமல் முதிர்வுத் தொகைக்கும் வரி இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும். (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in