

பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் ஒரு புறமும், அவற்றினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மறுபுறமுமாக நெருக்க, மனிதகுலம் பசுமை சக்திமூலங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
காற்றாலை மின்சாரம் அதில் மிகமுக்கியமானது. இந்திய அளவிலான காற்றாலை மின்சார முயற்சிகளில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வது சிறப்பு. இதனால் காற்றாலை மின்சாரத் துறையில், இளம் தலைமுறையினருக்கு ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் நிறைந்துள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்
காற்றாலை மின்சார நிறுவனங்கள்: இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), கணினி அறிவியல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் பட்டயம் (Diploma) அல்லது பட்டம் (BE/B.Tech) பெற்றவர்கள், காற்றாலை உற்பத்தி மற்றும் பராமரிப்பு நிறுவனங்களில் இளநிலை / முதுநிலை பொறியாளர் ஆகலாம். குறிப்பிட்ட துறைகளில் M.Tech/Ph.D பட்டம் பெற்றவர்களும், M.Sc., பட்டம் பெற்றவர்களும் காற்றாலை மின்சக்தி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம்.
பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் காற்றாலை உற்பத்தி மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளன. சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள தேசிய காற்றுச்சக்தி நிறுவனம் (National Institute of Wind Energy–NIWE), பெங்களூருவில் உள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (National Aerospace Laboratories-NAL), கோவாவிலுள்ள தேசிய கடலியல் நிறுவனம் (National Institute of Oceanography) ஆகியவை காற்றாலை தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. காற்றாலைத் துறையில் ஈடுபட விரும்பும் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் பல குறுகிய கால பயிற்சிகளை சென்னை, தேசிய காற்றுச்சக்தி நிறுவனம் நடத்தி வருகிறது. (மேலும் விவரங்களுக்கு: niwe.res.in)
காற்றாலை மின்சக்தி வாய்ப்புகள்: காற்றாலை மின்சக்தித் துறையில் உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன். பல புதிய தொழில்நுட்பங்கள் காற்றாலை உற்பத்தியிலும் பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய இப்படிப்பட்ட ஆய்வுகள் தேவை. ஆய்வில் ஈடுபட ஆர்வமும் துடிப்புமுள்ள இளந்தலைமுறையினரும் தேவை. ஒரு காற்றாலையின் ஆயுள் ஏறக்குறைய 25 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளுக்கு காற்றாலையின் பராமரிப்பு வேலைவாய்ப்புகளும் உண்டு.
கடலில் காற்றாலை அமைக்கும் முயற்சி குஜராத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளில், சாலைகளில் பயன்படுத்தும் சிறிய காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வர தொடங்கி உள்ளன. இணையம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை காற்றாலைத்துறையில் புகுத்தும் துளிர் நிறுவனங்களும் (Startups) உருவெடுத்திருக்கின்றன.
மரபுசாரா சக்தித்துறையில் காற்றாலைகளின் பக்கம் காற்று வீசத்துவங்கியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பலமாக காற்று வீசும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இத்துறையின் வேலை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பூமிக்கும் அதன் உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாமல் மின்சக்தி படைக்க வாழ்த்துகள். (கனவுகள் தொடரும்) - ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுகட்டுரையாளர், ‘இந்தியா75-போர்முனை முதல் ஏர்முனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com