

இன்று பதின்வயதில் இருக்கும் அனைவரும் மிக சாதாரணமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் இருக்கும் நபர்களை நண்பர்களாக்கி விட முடியும். திடீரென வரும் ப்ரெண்ட் ரிக்வஸ்ட்களை ஏற்பதன் வழியாக நமது சமூக வலைதள நட்பு வட்டத்தில் ஏகப்பட்ட பேர் இணைந்துவிடுகிறார்கள். இப்படி கிடைக்கும் சமூகவலைத்தள நண்பர்களில் பலர் நாம் நேரில் பார்த்திடாதவர்கள், முன்பின் பழக்கமில்லாதவர்கள்.
இதுபோல அறிமுகமில்லாத நபர்களுடன் பழகுவதால் பல சிக்கல்களில் மாணவ, மாணவியர் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது நண்பர்கள் அல்லது ஆன்லைன் காதலர்கள் அனுப்பும் பரிசு. மணி என்பவர் சமூகவலைத்தளம் மூலம் நிறைய நண்பர்கள் வைத்திருந்தார். அப்படியாக ரோஸி என்ற பெண் அறிமுகமானார். ரோஸி லண்டனில் வசிப்பவர்.
வெறும் பிறந்தநாள் வாழ்த்துகள், சில லைக்குகளில் அவர்களின் நட்பு தொடங்கியது. பின்னால் ரோஸியும், மணியும் சாட் செய்வதில் ஆரம்பித்து வாய்ஸ் காலில் பேசிக் கொள்வதுவரை அவர்களின் நட்பு வளர்ந்தது. ரோஸியுடனான நட்பு மலர்ந்து ஒரு வருடம் மேலாகிவிட்டது. கிறிஸ்துமஸ் நேரம் வந்தது. மணிக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பப் போவதாக ரோஸி கூறினார்.
மணி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ரோஸி ஒரு சர்வதேச கொரியர் எண், மற்றும் சில புகைப்படங்களை மணிக்கு அனுப்பிவைத்தார். அதில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்று மற்றுமொரு ஐபேட்-ஐ மணிக்குப் பரிசாக அனுப்பும் படம். அழகாகவும், பத்திரமாகவும் பேக் செய்யப்பட்டு, கொரியரில் அனுப்பப்பட்டதாக ஒரு ட்ராக்கிங் எண்ணும் ரோஸி கொடுத்து விட்டார்.
மணிக்கு ஆனந்தம். சில நாட்களில் மணிக்கு டெல்லியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சுங்க இலாகா அதிகாரி பேசுகிறேன், வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்த அரசுக்கு வரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். முதலில் மணி தயங்கியுள்ளார்.
ஆனால், டெல்லியிலிருந்து அழைத்தவர்கள்” தம்பி விலையுயர்ந்த பொருட்கள், 2 லட்சம் ரூபாய் இருக்கும் அதற்கு வரியாக எப்படியும் 50 ஆயிரம் வரும். எனக்கு ஒரு 10 ஆயிரம் கொடுங்கள், வரியாக ஒரு 15 ஆயிரம் கட்டுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
மணிக்கு அது பெரிய பணம்தான் ஆனால் வரப்போகும் பொருளின் விலை லட்சங்கள் ஆயிற்றே. பணத்தைக் கடன் வாங்கினார். டெல்லியிலிருந்து இன்னொரு அழைப்பு, தம்பி உங்களுக்கு பார்சல் அனுப்பியவர், இன்னொரு பார்சலையும் அனுப்பியிருக்கிறார். அதில் விலையுயர்ந்த கணினிஉள்ளது என்றார்.
மணிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. ரோஸிக்கு நன்றி சொல்லிவிட்டு மேலும் பணத்தைப் புரட்டி சுமார் 1 லட்சம் ரூபாய் வரை டெல்லி ஆபிஸருக்கு அனுப்பினார். சில நாட்கள் கழித்து ரோஸியும் இல்லை, பரிசும் வரவில்லை. அடுத்த வாரம் இன்னும் விரிவாகப் பார்ப்போம். (தொடர்ந்து பேசுவோம்) - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com