

கடற்கன்னிகள் உண்மையிலேயே இருக்கின்றவா இல்லையா என்பது குறித்து சேவலுக்கும் வாத்துக்கும் வாக்குவாதம் எழுந்தது. ஆழ்கடலுக்குள் சென்று தேடுவதன் வழியாக இச்சிக்கலுக்கு முற்றும் முழுதாகத் தீர்வு காண இரண்டும் நினைத்தன.
இரண்டும் முக்குளித்து உள்ளே சென்றன. முதலில் வண்ண மீன்களைப் பார்த்தன. பிறகு நடுத்தர அளவுள்ள மீன்களையும், அடுத்ததாக பெரிய மீன்களையும் பார்த்தன. அதற்கடுத்து மிகவும் ஆழமான பகுதிக்குள் சென்றன. அங்கே முழுவதும் இருட்டாக இருந்ததால் அவற்றால் எதையுமே பார்க்க இயலவில்லை. அச்சூழல் இரண்டையும் பயங்கரமாகக் கலவரப்படுத்தியது. எனவே நீருக்கு மேலே திரும்பி வந்தன.
மிகவும் பயந்துபோன சேவலுக்கு மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல விருப்பமே இல்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு வாத்து தைரியமூட்டியது. மேலும், சேவலை சாந்தப்படுத்துவதற்காக வாத்து இந்த முறை டார்ச் லைட் எடுத்து சென்றது.
அவை மறுபடியும் முக்குளித்து இருள் நிறைந்த பகுதிக்குள் சென்றன. அச்சப்படும் சூழல் வந்தபோது டார்ச் அடித்தன. விளக்கு ஒளிர்ந்ததும், தங்களை முழுவதுமாக கடற்கன்னிகள் சூழ்ந்து நிற்பதைக் கண்டன.
‘சேவலுக்கும் வாத்துக்கும் எங்களைப் பிடிக்கவில்லை’ என்று தாங்கள் நினைத்ததாக கடற்கன்னிகள் சொல்லின. சென்றமுறை, தங்கள் விருந்தினர்களை பெரிய விருந்துக்கு அழைக்க கடற்கன்னிகள் முற்பட்டதாகவும் ஆனால் அதற்குள் சேவலும் வாத்தும் உடனடியாக சென்றுவிட்டதாகவும் சொல்லின. இருப்பினும், இரண்டும் திரும்பி வந்ததை நினைத்து கடற்கன்னிகள் மிகவும் மகிழ்ந்தன. அவற்றின் தைரியத்துக்கும் விடாமுயற்சிக்கும் நன்றி சொல்லின. இவ்வாறாக, சேவலும் வாத்தும் கடற்கன்னிகளின் நெருங்கிய நண்பர்களாகின. - தமிழில்: சூ.ம.ஜெயசீலன், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com