மகத்தான மருத்துவர்கள் - 18: மனிதநேயமிக்க மருத்துவர் விஜயலட்சுமி

மகத்தான மருத்துவர்கள் - 18: மனிதநேயமிக்க மருத்துவர் விஜயலட்சுமி
Updated on
2 min read

ஆரம்பத்தில் இந்திய விமானப்படையின் லெஃப்டினன்ட் பதவி வகித்து, பொது மருத்துவத்துடன் மகப்பேறு மருத்துவ சேவையும் புரிந்துவந்தார் டாக்டர் விஜயலட்சுமி. பின்னாளில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பொறுப்பேற்று, 1962, 1966 மற்றும் 1971-ல் நடைபெற்ற இந்திய - சீன மற்றும் இந்திய - பாகிஸ்தான் போர்களில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்து பல நூறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது பணிக்காலம் முழுவதும் தடுப்பூசி, உணவு ஊட்டம், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மருத்துவ விழிப்புணர்வுகளை ராணுவக் குடும்பங்களுக்கு நேரடியாகவும், வானொலி வாயிலாகவும் தொடர்ந்து வழங்கியும் வந்துள்ளார்.

சுகன்யா, சுகுமார் என இரு குழந்தைகள் பிறந்த பின்பும் தேச நலனுக்காக தனது பணிகளை தளராது செய்த விஜயலட்சுமி கான்பூர், செகந்திராபாத், ஜலஹல்லி, பெங்களூர் ஆகிய ராணுவ மருத்துவமனைகளில் தொடர்ந்து பணிபுரிந்து ஆயிரக்கணக்கான பிரசவங்களை மேற்கொண்டார். அங்கு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வகுப்புகள் எடுத்தும், அவர்களுக்கு மகப்பேறு சிறப்புப் பயிற்சிகள் அளித்தும் சென்ற இடத்தில் எல்லாம் தனது தடங்களை பதித்துவிட்டுத் தான் திரும்பினார்.

அவசர உதவி செய்தவர்: இன்றும் அவரைப் பற்றி நினைவுகூரும் அவரது உதவியாளர்கள், "எந்த நேரமும் அவசர சிகிச்சை அழைப்பிற்கு தயாராக இருப்பார் அம்மா. சிலசமயங்களில் இரவு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி இருந்தாலும், மறுநாள் காலையில் சிறிது கூட சோர்வே தெரியாமல் எப்போதும் போல, தனது நீலப்புடவையை அணிந்தபடி அலுவலகத்தில் கம்பீரமாக, உற்சாகமாக வீற்றிருப்பதைப் பார்த்தாலே அந்த உற்சாகம் எங்களுக்கும் தொற்றிக் கொள்ளும். சோர்வில் நாங்கள் தளரும்போதெல்லாம் பணி செய்தபடியே தனது இனிய குரலில் பாடி எங்களையும் நோயாளிகளையும் உற்சாகப்படுத்துவார்" என்கின்றனர்.

தனது ராணுவ மருத்துவப் பணிகளுக்கிடையே கீர்த்தனைகளை இயற்றிப் பாடுவதையும் தொடர்ந்து மேற்கொண்ட டாக்டர் விஜயலட்சுமியின் இனிய குரல் டெல்லி, லக்னோ, செகந்திராபாத், பெங்களூர் என அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலித்திருக்கிறது.

தனது பணியை மிகவும் நேசித்த டாக்டர் விஜயலட்சுமிக்கு, எப்போதும் பிரதானமாக இருந்தது அவரது மருத்துவப் பணியும், நோயாளிகளும்தான். அதிலும் அவரது அன்புக் கணவர் டாக்டர் ரமணன், உடல் சுகவீனம் காரணமாக 1971-ல் திடீரென உயிரிழந்தபோது, சிறிதும் மனம் கலங்காமல், மிகுந்த உறுதியுடன் பதின்பருவத்தில் இருந்த தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் முன்னின்று நடத்தினார். தனது ராணுவப் பணியிலும் எந்தவொரு குறையும் வராமல் பார்த்துக் கொண்டார். இந்தியாவின் முதல் பெண் ஏர் மார்ஷெலான பத்மா பந்தோபத்யாய்க்கு பயிற்றுவித்ததே டாக்டர் விஜயலட்சுமிதான் என்பதே இதற்குச் சான்று எனலாம்.

ஓய்வுக்குப் பின் இலவச சேவை: ஏறத்தாழ 24 வருடங்கள் இந்திய விமானப்படையில் தொடர்ந்து பணியாற்றிய டாக்டர் விஜயலட்சுமிக்கு, 1977-ல், ‘விசிஷ்டா சேவா பதக்கம்' எனும் உயரிய ராணுவ விருது, அன்றைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1979-ல், விங் கமாண்டராக பணி ஓய்வு பெற்ற டாக்டர் விஜயலட்சுமி, பின்னர் பெங்களூரில் தங்கி, மக்களுக்கு இலவச மருத்துவ சேவை புரிந்து வந்துள்ளார்.

தனது குழந்தைகளின் கல்விக்கு துணை நின்று, மகளை சமூக ஆர்வலராகவும், மகனை தொழில்நுட்ப வல்லுநராகவும் தடம் பதிக்கச் செய்தபோதே, இருவருக்கும் பாரம்பரிய இசை ஞானத்தையும் ஊட்டினார். அதேசமயம் கல்வி உதவி, மருத்துவ உதவி என இயலாதவர்களுக்கெல்லாம் தொடர்ந்து வழங்கியதோடு, சுற்றுப்புற கிராமவாசிகள் தொழில்நுட்பக் கல்வியை பெறவும் வழிசெய்துள்ளார். மேலும், புற்றுநோய் சிகிச்சை, கண் புரை சிகிச்சை, ஊட்டச்சத்துக் குறைபாடு போக்குவதற்கென தனது பெரும்பங்கை வாழ்நாள் முழுதும் அளித்து வந்துள்ளார்.

உலகின் நான்காவது பெரிய வான்படையாக இந்திய வான்படை திகழ விஜயலட்சுமி போன்ற எண்ணற்றவர்களின் வாழ்க்கையும் தியாகமும் பின்னால் இருந்துள்ளது.

“உனது வாழ்வின் வெற்றியால் அந்த விண்ணைத் தொடுவாயாக” என்று ஒளிரும் இந்திய வான்படையின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டிய டாக்டர் விஜயலட்சுமி ரமணன், 96 வயதில் இயற்கை எய்தினார்.

இசையில் தொடங்கி இந்தியாவுக்காக மாறிய தனது வாழ்க்கை மகாத்மாவின் வார்த்தைகளால்தான் உருவானது என்று கூறும் டாக்டர் விஜயலட்சுமி "நேர்மை, துணிவு,உள்ளார்வம், பண்பு, ஈகை ஆகிய குணங்கள் மனிதருக்கானவை" என்ற மகாத்மாவின் வார்த்தைகளின் படியே வாழ்ந்தார். (மகிமை தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in