

அரசியல் என்றாலே அச்சோ அது நமக்கில்லை என விலகி நிற்கும் மனோபாவம் எப்போது ஆரம்பித்தது தெரியவில்லை. ஆனால், அப்படி விலகி நிற்பதால்தான் பல்வேறு இடியாப்பச் சிக்கல்கள். வளர் இளம்பருவத்தில் நீங்கள் குடிமையியல் பற்றிப் படிப்பீர்கள். அது வெறும் மதிப்பெண் பெறுவதற்கு மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி நிகழ்வதைப் புரிந்து கொள்வதற்கு. உங்கள் பெற்றோர் அல்லது 18 வயதைக் கடந்த உறவினர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறை வாக்குப் பதிவு செய்ய சென்றார்கள்? நினைவிருக்கிறதா?
சட்டமன்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப் போட்டார்களா, நாடாளுமன்ற வேட்பாளரைத் தேர்வு செய்ய ஓட்டுப் போட்டார்களா, உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டுப் போட்டார்களா என கேளுங்கள். எல்லா மாணவர்களையும் உங்களுடைய வீட்டு முகவரி சொல்லுங்க என்றால் உடனே சொல்லிவிடுவார்கள்.
எழுதச் சொன்னால் கொஞ்சம் திணறுவார்கள். அப்படியும் வீட்டு முகவரியை சரியாக எழுதாதவர்களும் சிலர் உண்டு. ஆனால், எங்கே உங்கள் வார்டு எண் என்ன? எந்த தாலுக்கா? எந்த சட்டமன்றத் தொகுதி, எந்த நாடாளுமன்றத் தொகுதி என்றால் பெரும்பாலானவர்கள் விழிபிதுங்கியே நிற்போம் (இதில் ஓட்டுப்போடுபவர்களும் விதிவிலக்கல்ல).
அதேபோல மாநில முதல்வர், இந்தியப் பிரதமர் பெயர்களை மட்டும் நினைவில் வைத்திருந்தால் பத்தாது. நம்ம தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்தமுறை தேர்தல் ஏதேனும் நடந்தால் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பார்கள். சில சமயம் துண்டு சீட்டுகளாக கொடுப்பார்கள். சிலர் சுவரொட்டிகளை அச்சடித்து ஊர்முழுக்க ஒட்டிவைப்பார்கள். (இப்போது இது குறைந்துவிட்டது).
நவீனமாக இப்போது வாட்ஸப், ஃபேஸ்புக்கில் எல்லாம் வாக்குறுதிகளை அனுப்புகின்றார்கள். அவற்றை எல்லாம் கவனியுங்கள். விவாதிக்கக்கூட வேண்டாம். நம்ம ஊரில், நம்ம மாநிலத்தில், நமது நாட்டில் எதெல்லாம் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது என கவனிக்கலாம். பல விஷயங்கள் புரியாதுதான். ஆனால், கவனிக்க கவனிக்க புரிந்துவிடும்.
அரசியல் என்பதும் கட்சி அரசியல் என்ற எண்ணமே பொதுவாக எல்லோர் மனதிலும் இருக்கும். அரசியல் என்பது ஒரு கொள்கை சார்ந்த பயணம். அது என்ன கொள்கை, அதனை எப்படி அடைவது என்ற வழிமுறைகளை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு மாதிரி அணுகுகின்றன. இந்திய அளவில் இருக்கும் கட்சிகள் யாவை, தமிழக அளவில் இருப்பவை யாவை, உள்ளூரில் கட்சி பிரமுகர்கள் யார் என்றும் தெரிந்து வைத்திருக்கலாம்.
இது கொஞ்சம் வரலாற்றினையும் தேட வைக்கும். எப்போது ஏன் ஒவ்வொரு கட்சியும் உருவானது என்ற வரலாற்றினை தேட வைக்கும். அடுத்த முறை தினசரிகளை புரட்டும்போது, அதில் வரும் செய்திகளில் இடம்பெறும் கட்சிகளில் எத்தனை பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
18 வயது நிரம்பியவுடன் ஓட்டுரிமை. ஆனால் 18-வது பிறந்தநாள் காலையில் இந்தவிஷயங்கள் எல்லாம் உடனே வந்துவிடாது. அவற்றை இப்போதிலிருந்தே அறிந்து கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. 18 வயதிற்கு மேல் பொறுப்பிலிருந்து கடமைக்கு மாறிவிடும். கடமையை சரிவர புரிந்து கொள்ளாமல் இருப்பதாலும் சரிவர அதனை நிறைவேற்றாமல் இருப்பதாலும் நாம் சந்திக்கும் சிக்கல்களையும் நீங்கள் கவனிப்பீர்கள். (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’, ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள், தொடர்புக்கு: umanaths@gmail.com