

பாடப்புத்தகம் தாண்டிய கதைப்புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று ஊக்குவிப்பதன் காரணம், வாழ்க்கைக்கு உதவும் சகிப்புத்தன்மையை, நற்குணங்களை, தன்னம்பிக்கையை , தமக்கான மகிழ்ச்சியை வாசிப்பின் மூலம் தேடிப்பெற்றுக் கொள்ளத்தான். சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் மட்டுமல்லாது பாடல் புத்தகங்களும் எழுதி வருகிறார். அந்த வகையில், சப்போட்டா புத்தகம் பத்து கதைகளை உள்ளடக்கியது.
தவளையின் க்ராக் க்ராக் சத்தம் பிடிக்காத மீன்கள், குட்டையை சுவரிட்டு இரண்டாகப் பிரித்து தவளையை இந்தப் பக்கம் நீ வரக்கூடாது. நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம் என்கின்றன. ஆனால் தவளையில்லாததால் மீன் குஞ்சுகளின் பக்கம் உள்ள குட்டையில் மீன்குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது. மீன்கள் இடநெருக்கடியால் படும் துன்பத்தைக் கண்டு தவளையே சுவற்றை உடைத்து குட்டையை ஒன்றாக்குகிறது. மீன்கள் தவறை நினைத்து வருந்துகின்றன.
காட்டுக்கு பூட்டு: அழகான முயல்குட்டியின் அம்மாவும்அப்பாவும் தாங்கள் உணவு தேடப்போகும் சமயத்தில் பாதுகாப்பாக இருக்கச்சொல்லி கதவு செய்து பூட்டு போட்டுத்தருகின்றனர். முயல்குட்டி கேட்கிறது.. மனிதர்களால் காட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்கிறீர்களே. இந்தக் காட்டுக்கு ஒரு கதவும், பூட்டும் செய்துவிட்டால் நாமெல்லாம் நிம்மதியாய் இருக்கலாமே என்று. வாசிக்கும் மனிதர்கள் இதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு வீட்டில் செல்லமாய் வளரும்பூனைக்குட்டியை அந்த வீட்டுக் குட்டிப் பெண் இப்போது கண்டுகொள்வதில்லை. அப்பா வாங்கித்தந்த புதிய மீன்தொட்டியின் தங்க மீன்களுடனே பேசிக் கொண் டிருக்கிறாள். பூனைக்குட்டி மீனிடம் உங்களால்தான் அந்தக் குட்டிப்பெண் என்னிடம் பேசவில்லை என்று சொல்லி கோபப்படுகிறது. ஆனால் ஒருநாள் அவள்என்னிடம் பழையபடி பேசுவாள் என்று காத்திருக்கிறது.
மீனைக் காப்பாற்றும் பூனைக்குட்டி: மீன்தொட்டியிலுள்ள மீன்கள் விளையாடுகையில் ஒரு குட்டிமீன் துள்ளியதில் தொட்டிக்கு வெளியே விழுந்துவிடுகிறது. மூச்சுவிட கஷ்டப்படும் மீன்குஞ்சை பூனைக்குட்டி உடனே காப்பாற்றி தொட்டி யில் சேர்க்கிறது. பிறகு மீன்களுக்கு நாள்தோறும் தானே உணவிடும் வேலை யையும் செய்கிறது. அந்த வீட்டுப்பெண் பூனையையும் கொஞ்சத் தொடங்குகிறாள்.
நூடுல்ஸ் கேட்கும் அணில்குட்டி: மெதுவாக செல்லும் நத்தை புயலில் எங்கே தான் அடித்துச் செல்லப் படுவோமோ என்று கவலைப்படுகையில், மரவட்டை நான் உன்னை உன் வீட்டிற்கு பத்திரமாக அழைத்துப் போகிறேன் என்றுவெட்டுக்கிளியிடம் இலையைப் பறித்துப்போடச் சொல்லி, அதில் நத்தையை அமரவைத்து தன் தோழன் மரவட்டையுடன் இணைந்து இருவருமாக இலையை இழுத்துச் சென்று நத்தையை வீடு சேர்க்கும் நட்புணர்வு ரசிக்க வைக்கிறது. பழங்கள் வேண்டாம், மனிதர்கள் உண்பது போல நூடுல்ஸ் வேண்டும் எனும் அணில்குட்டிக்கு நாம் இயற்கையான உணவை உண்பதில்தான் உடல் ஆரோக்கியம் உள்ளது என்ற தாய் அணிலின் அறிவுரை குட்டி அணிலுக்கானது மட்டுமில்லை.
பக்கத்துக் காட்டு நரி, தங்கள் காட்டில்விளைந்த பழங்களுடன் ராஜா சிங்கத்தை நலம் விசாரிக்க வருகிறது. விளாம்பழத்தை திங்கத் தெரியாத சிங்கம் அப்படியே கடிக்கவும், பல் விழுந்து போகிறது. உங்களுக்கு விளாம்பழம் திங்கத் தெரியாதா என்று கேட்டுச் சிரிக்கும் நரியுடன், ஓட்டைப் பல் சிங்கமும் சேர்ந்து சிரிப்பது, வாசிக்கும் குழந்தைகளுக்கு சிங்கத்தை நண்பனாக நினைக்க வைக்கும்.
விதைகளுக்கு விடுதலை: பழத்திற்குள் விதையாக இருக்கும் சப்போட்டா விதை, இருட்டுக்குள் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எப்போதுதான் சுதந்திரம் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறது. குழந்தைகள் யாராவது பழத்தை சாப்பிட்டு, விதைகளாகிய தம்மை விடுவிக்க மாட்டார்களா என்று காத்திருக்கும்போது, குழந்தைகள் சிலர்சப்போட்டா மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிடுகின்றனர். விதைகள்கிடைத்த விடுதலையில் மகிழ்ந்திருக்கும் போதே, குழந்தைகள் விதையைத் திரும்ப மண்ணில் புதைக்கின்றனர் . மீண்டும் இருட்டில் இருக்கிறோமே என்று வருந்துகின்றன விதைகள். மழைபெய்து விதைகள் முளைக்கத் தொடங்குகின்றன. இலைகள் துளிர் விட்டன. விதைகள் மரமாகப் போகும் இந்த விடுதலைதான் உண்மையான சுதந்திரம் என்று உணர்கின்றன.
காட்டை உருவாக்கிய பறவைகள்: சிறுபறவை ஒன்று தாயிடம் கோவித்துக் கொண்டு நீண்டதூரம் பறக்கிறது. அந்தப் பகுதியில் மரங்களே இல்லை என்று கவனிக்கிறது. தாயின் நினைவு வந்து திரும்ப கூட்டுக்கு பறந்துவரும் சிறுபறவை, தான் பார்த்த இடம்பற்றிக் கூறி,மரங்கள் இல்லாத அப்பகுதியில் வெயில் தாங்காமல், உணவில்லாமல் நம் பறவைகள் சில இறந்து போயிருக்கின்றன. நாம் ஒற்றுமையாக விதைகளைக் கொண்டு சென்று சேர்த்தால், எதிர்காலத்தில் ஒரு காட்டை உருவாக்கலாம் என்று சொல்கிறது சிறுபறவை. பறவைகள் ஒற்றுமையாகச் சேர்ந்து ஒவ்வொரு நாளும் விதைகளைக் கொண்டுசென்று சேர்க்கின்றன. அழகான காட்டை உருவாக்குகின்றன.
எளிய மொழியில், விலங்குகளை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். வாசித்துப் பாருங்களேன். - கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம். தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com