

நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத் தில் வண்டியில் பயணித்து இருப்போம். குறைந்தபட்சம் அதைப் பார்த்திருப்போம். எல்லா வண்டிகளிலும் வேகமானி (speedometer) பொருத்தப்பட்டு இருக்கும். மானி என்றாலே அளவிடும் கருவி.
இதுவரையில் என்ன மானியை கேள்விப் பட்டு இருக்கின்றீர்கள்? வெப்பமானி நினை விற்கு வருதா? காய்ச்சல் வந்தால் சுரத்தின் அளவினைக் கணக்கிடும் கருவி. வேகமானியில் வேகத்தை மட்டுமா காட்டுகின்றது? வேகத்துடன் கூடவே அதில் ஏராளமான எண்களும் உடன் இருக்கின்றன. அந்த வாகனம் பயணித்த மொத்த கிலோ மீட்டர்களைக் காட் டும். அது ஏன் கிலோ மீட்டர்? வேறு அலகில் காட்ட முடியாதா?
வேகமானி: வேகத்தின் அளவினை kmph எனக் குறிப்பிடுவார்கள். அதுவே வேகத்தின் அலகு. அளக்கும் ஒவ்வொன்றினையும் அலகில் குறிப்பிட வேண்டியது மிக அவசியமான ஒன்று.வேகம் என்பது ஒரு மணிக்கு எவ்வளவு கிலோமீட்டர் பயணிப்பீர்கள் என்று குறிக்கும். kmph – Kilometers per hour. எங்கிருந்து வேகமானிகள் துவங்கி இருக்கும்? வேகமானிக்கு முதல் வடிவத்தைக் கொடுத்தது சார்லஸ் பாபேஜ். இந்தப் பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கலாம். கணினியின் தந்தை என இவரைக் குறிப்பிடுவார்கள்.
ரயில் எஞ்சின்களைக் கண்டுபிடித்த பின்னர் அது எவ்வளவு வேகமாக ஓடுகிறது எனக் கணக்கிடவே வேகமானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வேகத்தைக் கட்டுப்படுத்தவும் இவை பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்களைக் குறிப்பிட்ட வேகத்தில் பயன்படுத்தினாலே அது எரிபொருளினை சிக்கனமாகப் பயன்படுத்தும். மிகவும் குறைந்த வேகத்தில் சென்றால் எரிபொருள் சிக்கனமாகப் பயன்படுத்தப்படும் என்பது தவறு. சில வேகமானிகளில் குறிப்பிட்ட வேகத்தில் (35-45 kmph) பச்சை நிறத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த வேகத்தில் வண்டியைச் செலுத்தினால் எஞ்சினிற்கு நல்லது. செயல்திறன் அதிகமாக இருக்கும்.
வேக கணக்கீடு: வேகமானியில் வேகத்தைக் கணக்கிடப் பல உத்திகள் இருக்கின்றன. ஒரு சக்கரம் உங்க கையில் இருக்கிறது. நிறைய இடங்களில் டயர்களை வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். ஒரு குச்சி வைத்துத் தட்டித்தட்டி அதனை ஓட்டுவார்கள். அவர்கள் எவ்வளவு வேகத்தில் அந்தச் சக்கரத்தை ஓட்டுகின்றார்கள் என்று எப்படிக் கணக்கிட முடியும்? ஒரு சாலையில் இரண்டு இடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். A,B என வைத்துக் கொள்வோம். A இடத்தில் இருந்து B இடத்திற்குச் செல்ல எவ்வளவு விநாடிகள் எடுக்கின் றார்கள் எனக் கணக்கிடவும். இரண்டிற்குமான தூரத்தை அளவிடவும். இரண்டும் தோராயமாக இருந்தால் போதும். 30 விநாடிகளில் 100 மீட்டரைச் சக்கரம் கடந்துள்ளது எனில் அந்தச் சக்கரம் ஓட்டப்பட்ட வேகம் எவ்வளவு?
30 விநாடிகளில் 100 மீட்டர்,
60 விநாடிகளில் (ஒரு நிமிடத்தில்) 200 மீட்டர்.
1 மணி நேரத்தில் - 1 நிமிடம் X 60 -> 200 மீட்டர் x 60 = 12,000 மீட்டர். = 12 கிலோமீட்டர்.
அப்படி என்றால் டயர் ஓட்டப்பட்ட வேகம் 12 kmph. மணிக்கு 12 கிலோமீட்டர்.
கப்பலுக்கு வேகமானி இருக்குமா? - ஒரு சென்சார் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சக்கரம் எத்தனை முறை சுற்றுகின்றது எனக் கணக்கிடப்படும். ஏற்கனவே சக்கரத்தின் சுற்றளவு கைவசம் இருக்கும், தூரமும் நேரமும் நம்மிடம் இருக்கும். அதனை வைத்து வேகமானி வேகத்தைக் காட்டும். வழக்கமாகவே வேகமானியில் செல்லும் வேகத்தைவிட கொஞ்சம் கூடுதலான வேகத்தைக் காட்டும்படியே வைத்திருப்பார்கள்.
கப்பல்களுக்கு வேகமானி இருக்குமா? ராக்கெட்டிற்கும் இப்படி வேகமானி இருக் குமா? நம் இருசக்கர வாகனத்திற்குப் பயன்படுத்தும் வேகமானியைப் பயன்படுத்த முடியுமா? ராக்கெட்டில் வேகத்தை எப்படிக் கணக்கிடுவார்கள்? கணக்கிடுவது அவசியமா? விடைகளை தேடிப் போவோமா? (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள். தொடர்புக்கு: umanaths@gmail.com