

“கார்குழலி, என்னாச்சு! கலகலப்பாவே இல்லையே?” கார்த்தியாயினி கேட்டாள். இருவருமே 10-ம் வகுப்பு மாணவிகள். மிகவும் தயங்கிய கார்குழலி தன் அலைபேசியை நீட்டினாள். பெயரில்லாத பல எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது. யாருன்னே தெரியல. கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். பிளாக் செய்தாலும், புது புது எண்ல கூப்பிடுறான். அம்மாட்ட சொல்லவும் பயமா இருக்கு கார்குழலி படபடவென சொல்லி நிறுத்தினாள்.
தைரியசாலியான கார்த்தியாயினி, கவலையே படாத. திரும்ப கூப்பிட்டான்னா, 1098-க்கு சொல்லிடுவேன்னு சொல்லு. அவன் கேட்கலைனா, நானே 1098-க்கு சொல்லிடுறேன். போதுமா என்றாள். கார்குழலி ஆறுதலாக உணர்ந்தாள். முகத்தில் புன்னகை பரவியது. இருவரும், சடாட் ரஹ்மான் காணொளியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
வங்கதேசம் நராலி மாவட்டத்தில் பிறந்தவர் சடாட் ரஹ்மான். தந்தை அஞ்சலக அதிகாரி. தந்தையின் பணி மாறுதல்களால் பல்வேறு ஊர்களுக்குப் பயணமானான் ரஹ்மான். சிறுசிறு காணொளிகள் தயாரிப்பது, இணைய பக்கம் உருவாக்குவது என தன்னை வளர்த்தெடுத்தான்.
மியான்மர் கலவரத்தில் தப்பி 2017-ல் எண்ணற்ற ரோகிங்கியா மக்கள் வங்கதேசம் வந்தார்கள். அவர்களுக்கு அமைதி வேண்டி நண்பர்களுடன் மிதிவண்டி ஊர்வலம் நடத்தினான். இதன்மூலம், குழுவாக செயல்படுவதின் பயனை உணர்ந்தான். 9 வயதில், நண்பர்களுடன் இணைந்து, ‘நராலி தன்னார்வலர்கள்’ அமைப்பை ஏற்படுத்தினான். குழந்தைகளின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தான்.
திசை காட்டி வாழ்வு: சிறுமி பியூட்டி மோன்டல் 16 வயதில் 2020 செப்டம்பர் 19-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட செய்தி ரஹ்மானை உலுக்கியது. 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு நண்பர்களுடன் புறப்பட்டான். அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் சந்தித்தான். சாலைவழி பாதை இல்லாத மாணவியின் வீட்டுக்கு, சிறிய படகில் 25 நிமிடங்கள் பயணித்தான். ஊருக்குள்ளும் சாலைகள் இல்லை. பியூட்டியின் வீடு மிகச் சிறியது.
20 வயது இளைஞன் ஒருவன், பியூட்டி எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் பலன் இல்லை. பியூட்டியின் படத்தைத் தவறாகச் சித்தரித்து இணையதளத்தில் விட்டுவிடுவேன் எனமிரட்டியிருக்கிறான். பயம், கவலை, அவமானம் அனைத்தாலும் தவித்த மாணவி, வீட்டுக்குள்ளேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.
இதைக் கேட்டதும் ரஹ்மான் அதிர்ச்சி யடைந்தான். இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மாணவிகள் மிரட்டப்படும் கொடூரத்தைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தான். பெற்றோர்களிடம் மாணவிகள் சொன்னாலும், குடும்ப மரியாதை என்று பெற்றோர் அமைதியாக இருக்கிறார்கள். தவறு செய்தவருக்கு ஆதரவாக சமாதானம் பேச சிலர் வருகிறார்கள். உடன் நிற்க வேண்டிய பெற்றோர் பல வேளைகளில் பாதி வழியில் சமரசம் செய்துகொண்டு பின்வாங்கிவிடுகிறார்கள். இதை எப்படி சரி செய்யலாம் என யோசித்தான். ஒரு மாதத்துக்கு உள்ளாகவே, அக்டோபர் 9-ம் தேதி, Cyber Teens என்றொரு செயலியை உருவாக்கினான்.
இச்செயலி, இணையத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்கிற தகவலுடன் பாதிக்கப்படும் மாணவ-மாணவியருக்கு மனநல ஆலோசனையும் வழங்குகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் தன்னார்வ நிபுணர்கள், சமூக பணியாளர்கள், மற்றும் காவலர் துறையினர் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
செயலி வந்த சில வாரங்களிலேயே பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் புகார் செய்தார்கள். விசாரணைக்குப் பிறகு கைது நடவடிக்கையும் உடனே தொடங்கியது. இன்றுவரை, 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் இணைய பாதுகாப்பு குறித்து ரஹ்மான் உரையாற்றியுள்ளார். செயலி வெளிவந்த இரண்டே மாதத்தில், சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது 2020-ல் ரஹ்மானுக்கு கிடைத்தது. - கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். தொடர்பு: sumajeyaseelan@gmail.com